‘ஹௌ ஓல்ட் ஆர் யூ?’
நேர்முகப்பேட்டிக்கு வந்திருக்கும் நிருபமா ராஜீவிடம் கேட்கப்படும் முதல் கேள்வி இது.
’36….!’
‘இந்த வேலைக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனைப் பார்க்க வில்லையா?’
‘ஒரு வயசு தானே கூடுதல்….?’ கெஞ்சும் பாவனையில் கேட்கிறாள் நிருபமா ராஜீவ்.
‘ஸாரி…!’
சோர்வுடன் வெளியே வருகிறாள். கணவனும், மகளும் அயர்லாந்து போகத் தயாராகிறார்கள். அங்கு ஒரு வேலை கிடைத்தால் தானும் அவர்களுடன் போகலாம் என்ற நிலையில் இந்த நேர்முகப்பேட்டி.
35 வயதானவுடன் பெண்களுக்கு தோன்றும் ஒரு சின்ன தாழ்மை உணர்வு இவளுக்கும். முன்தலையில் தெரியும் நரைக்கு கலர் செய்துகொள்ளுகிறாள்.
ஒரு நாள் மகள் வந்து சொல்லுகிறாள்: ‘நீ எனக்கு சொல்லிக் கொடுத்த கேள்வியை கேட்டு குடியரசுத் தலைவர் ரொம்பவும் பாராட்டியிருக்கிறார். உன்னுடன் காலை சிற்றுண்டி சாப்பிட விரும்பிகிறார்’.
‘நான் உனக்கு கேள்வி சொல்லித்தந்தேனா? என்ன கேள்வி அது?’ என்று கேட்க, மகள் சொல்ல மறுக்கிறாள். ‘சொல்லமாட்டேன், நீயே ஞாபகப்படுத்திக் கொள்’
கேள்வி நினைவிற்கு வரவில்லை என்றாலும் குடியரசுத் தலைவரைப் பார்க்கப்போகிறோம் என்ற பயம் கலந்த தவிப்பில் நாட்கள் செல்லுகிறது. குடியரசுத் தலைவரைப் பார்ப்பதென்றால் சும்மாவா? பல நாட்கள் முன்பிருந்தே செக்யூரிட்டி செக் அது இது குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து பாதுகாப்புப் படையினர் வந்த வண்ணமிருக்க சில நாட்களிலேயே நிருபமாவைப் பார்ப்பவர்கள் எல்லோரும் ‘இவ தான் குடியரசுத் தலைவரைப் பார்க்கப்போகிறாளாம்…’ என்று பேசும் அளவிற்கு புகழ் பெறுகிறாள்.
அந்த தினமும் வருகிறது. பல கெடுபிடிகளுக்கு நடுவே நிருபமா ராஜீவ் குடியரசுத் தலைவரின் மாளிகைக்குப் போகிறாள். குடியரசுத்தலைவரின் வருகைக்கு அந்த மாளிகையில் உள்ள ஒரு பெரிய ஹாலில் காத்திருக்கிறாள். சுற்றிவர கருப்பு கண்ணாடிகள் அணிந்த பாதுகாப்பு வீரர்கள். நிருபாமாவின் போன் ஒலிக்கிறது. ‘அதை ஆஃப் செய்யுங்கள்’ என்று கண்டிக்கிறார் ஒரு பெண்மணி. பாவம் நிருபமாவிற்கு இந்த சூழ்நிலை ரொம்பவும் ஹிம்சையாக இருக்கிறது. ‘எழுந்திருங்கள்.. இங்கே வந்து நில்லுங்கள்…’ என்று ஆணைகள்.
குடியரசுத் தலைவர் வருகிறார் என்ற அறிவிப்புடன் முதலில் அவரது பாதுகாப்பாளர்கள் கையில் துப்பாக்கியுடன் வந்து வரிசையாக நிற்கிறார்கள். பிறகு ஒரு கதவு திறக்கிறது. இன்னும் நாலு பாதுகாப்பு படைவீரர்கள் சூழ நிஜமாகவே குடியரசுத் தலைவர் வருகிறார். நேராக நிருபமாவைப் பார்த்து நடந்து வருகிறார். கைகள் இரண்டையும் கூப்பி ‘நமஸ்தே’ என்கிறார். அவ்வளவுதான் நிருபமா கண்கள் சுழல தடாலென்று மயங்கி விழுகிறாள்.
முதலில் வியந்த ஊர் மக்களின் பார்வையில் நிருபமா இப்போது ஒரு கேலிப் பொருளாகிறாள். மகளும் கணவரும் அயர்லாந்து கிளம்பிப் போகிறார்கள். தனியே விடப்பட்ட நிருபமாவை அவளது தோழி சந்திக்கிறாள். ‘உனக்கு நினைவு இருக்கிறதா? அந்தக் காலத்தில் நமக்கு கம்ப்யூட்டர் லாப் வேண்டுமென்று நீதானே போராடிப் பெற்றுக் கொடுத்தாய்? அப்போது நீ நிருபமா கிருஷ்ணன் ஆக இருந்தாய். இப்போது என்னவாயிற்று உனக்கு? நீ ஏன் பிரசிடென்ட்டைப் பார்த்து மயங்கி விழுந்தாய்?’ என்று அவளது தைரியத்தை நினைவு படுத்திவிட்டுச் செல்லுகிறாள்.
நிருபமாவுடன் தினமும் பஸ்ஸில் ஒரு பெண்மணி வருவார். கொஞ்ச நாட்களாக அவரைக் காணோம் என்று அவரது வீட்டைத் தேடிச் செல்லுகிறாள் நிருபமா. போகும்போது தன் வீட்டில் விளைந்த காய்கறி பழவகைகளை எடுத்துச் செல்லுகிறாள். மனம் நெகிழும் அந்தப் பெண்மணி இவளைப் பற்றி தான் வேலை செய்யும் பணக்கார வீட்டில் சொல்லுகிறார். ஒரு நாள் அந்த பணக்காரரிடமிருந்து நிருபமாவிற்கு அழைப்பு வருகிறது. தங்கள் வீட்டில் இன்னும் நாலு மாதத்தில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு காய்கறி பழங்கள் சப்ளை செய்ய முடியுமா என்று. இது சாத்தியமா? தான் ஏதோ பொழுதுபோக்கிற்காகசெய்து வரும் காய்கறிப் பயிரிடல் பெரிய அளவில் செய்ய முடியுமா என்று யோசனை செய்தபடியே கண்ணயர்ந்து விடும் நிருபமா கண் விழித்தபோது தன் வீட்டைச் சுற்றி வர இருக்கும் வீடுகளில் இருக்கும் காலி மொட்டைமாடிகள் கண்ணில் பட ஒவ்வொருவரிடமும் போய் பேசுகிறாள். எல்லோரும் ஒத்துழைத்தால் நடக்கவிருக்கும் கலியாணத்திற்கு காய்கறி சப்ளை செய்வதுடன் இதையே தங்கள் வருமானமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறாள். எல்லோருக்கும் இந்த யோசனை பிடித்திருக்கிறது.
வெளிநாட்டிலிருக்கும் கணவனுக்கு இஷ்டமே இல்லை. ‘முடியாது என்று சொல்லிவிடு’ என்கிறான். ஆனால் இந்த முறை நிருபமா முடிவை தானே எடுக்கிறாள். நான்கு மாதங்களுக்குள் நினைத்தபடியே எல்லோர் வீட்டு மாடித் தோட்டங்களிலும் காய்கறிகளும், பழங்களும் காய்த்துத் தொங்க இழந்த தைரியத்தை மீண்டும் பெறுகிறாள் நிருபமா ராஜீவ். மாநில அரசும் அவளைப் பாராட்டுகிறது. மறுபடியும் குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பு வருகிறது நிருபமாவிற்கு.
கணவனும் மகளும் இவளை வெளிநாட்டிற்கு அழைத்துப் போக வருகிறார்கள். இவளது வெற்றிக் கதை அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது.
‘நமது நாட்டில் இதுவரை ஒரே ஒரு பெண் பிரதம மந்திரி. ஒரே ஒரு பெண் குடியரசுத் தலைவர். ஒரு பெண் தன் திறமையை வெளிப்படுத்த வயது வரம்பு உண்டா?’
இந்தக் கேள்வியைத்தான் மகளுக்கு தான் சொல்லிக் கொடுத்தது என்று நினைவிற்கு வருகிறது நிருபமாவிற்கு.
***************
ஸ்ரீதேவியைத் தொடர்ந்து மலையாள நடிகை மஞ்சு வாரியார் வெள்ளித்திரைக்கு இந்தப் படம் மூலம் மறுபடி வந்திருக்கிறார். தன் வயதுக்குத் தகுந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு வெளுத்து வாங்கியிருக்கிறார் மஞ்சு.
குடியரசுத் தலைவரைப் பார்க்க போகும் முன் தனக்கு கிடைத்திருக்கும் அந்த 15 நிமிடப் புகழை ரசிப்பதாகட்டும், பின் குடியரசு தலைவரின் மாளிகையில் தான் மயங்கி விழுந்ததை எல்லோரும் கேலி செய்யும் போது ஓடி ஒளிவதாகட்டும் அற்புதமாக நடித்திருக்கிறார். அடிப்பொளி!
முதல் காட்சியில் நேர்முகப் பேட்டி கொடுக்கும்போதே நம்மை கவர்ந்து விடுகிறார். முகத்தில் சின்ன முதிர்ச்சி தெரிந்தாலும் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பதால் மஞ்சு வாரியாரிடம் இன்னமும் இளமை ஊஞ்சலாடுகிறது என்றே சொல்லலாம். மிக மிக இயற்கையான நடிப்பு. எந்த காட்சியிலும் மிகை என்பதே இல்லை. நம் பக்கத்து வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பது போன்று படம் இயல்பாகப் போகிறது.
இந்த வயதிலும் (ஸ்ரீதேவியைப் பார்க்கும் போது மஞ்சு வாரியார் ரொம்பவும் சின்னவர்தான்) தனது திறமையை நிரூபிக்க முடியும் என்று மஞ்சு வாரியார் வெள்ளித்திரை உலகிற்கு மட்டுமல்ல நமக்கும் காட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள், மஞ்சு! இன்னும் இதைப் போல நிறைய படங்கள் நீங்கள் நடித்து வெளிவர வேண்டும்.
ஸ்ரீதேவி comeback செய்ததிலிருந்து பல பழம் பெரும் நடிகைகளுக்கும் ‘comeback’ ஆசை வந்திருக்கிறது. வயதுக்குத் தகுந்த வேடம் அணிந்தால் எல்லோரையும் கைநீட்டி வரவேற்கலாம்.
எல்லோரும் பார்க்க வேண்டிய படம் ‘ஹௌ ஓல்ட் ஆர் யூ?’