1. நேர்பட ஒழுகு
தரையிலே உட்கார வேண்டாம் – ஒரு
தடுக்குமா இல்லைஉன் வீட்டில்?
கரியாகிப் போகும் உன் சட்டை– நீ
கண்ட இடத்திலே புரண்டால்!
சரியான வழியில் நடப்பாய் – நீ
தண்ணீரில் ஆடக்கூ டாது
எரிந்திடும் நெருப்புமுன் னாலே – கேள்
என்கண்ணே உனக்கென்ன வேலை?
2. நேர்பட ஒழுகு
சுண்ணாம்புக் கட்டியை நறுக்காதே – நல்ல
சுவரிலும் கதவிலும் கிறுக்காதே
கண்ணாடி எடுத்தால் மெதுவாய்வை – அது
கைதவறி விட்டால் உடைவதுமெய்!
பண்ணோடு பாடநீ கூசாதே – உன்
பள்ளியில் எவரையும் ஏசாதே
மண், ஓடு, ஆணி, துணி கடிக்காதே – கேள்
மற்றவர் பொருளை நீ எடுக்காதே!
3. நேர்பட ஒழுகு
கண்ட இடத்திலே துப்பாதே!
காலிலே சேற்றை அப்பாதே!
துண்டு துணிகளைக் கிழிக்காதே!
துடுக்காய் எவரையும் பழிக்காதே!
பண்டம் எதையும்பா ழாக்காதே!
பாலைத்த லையிலே வார்க்காதே!
நொண்டியைக் கண்டு சிரிக்காதே!
நொளநொளப் பழத்தை உரிக்காதே!
4. நேர்பட ஒழுகு
எழுதிமு டித்தபின் உன்பலப்பம் – அதை
எடுத்துப்பை யில்வைப் பதுசுலபம்.
புழுதியில் எறிவது சரியில்லை – இனிப்
புதிதாய் வாங்கிடுவது தொல்லை!
அழகாய் இருந்திடும் உன்சுவடி – அதை
அழுக்கா காமல் எடுத்துப்படி.
வழவழப்பான உன்இறகு – அது
மண்ணில் விழுந்தால் கெடும்பிறகு!
5. நேர்பட ஒழுகு
நாயை அடித்தால் அது கடிக்கும் – ஒரு
நல்லபூனை எலிபிடிக்கும்
தாயைப் பிரியா மல்செல்லும் – என்
தங்கக் கோழிக் குஞ்செல்லாம்,
ஓயா மற்பாடும் குருவி – மேல்
உயரம் பறந்து வரும் காக்கை
ஆயா கண்டால் சோறிடுவார் – பிறர்
அடிப்பது கண்டால் சீறிடுவார்.
6. நேர்பட ஒழுகு
படுக்கைவிட் டெழுந்தால்
பாயைச் சுருட்டு – நீ
பானையிலே பாலைக் கண்டால்
நாயை வெருட்டு – சுவர்
இடுக்கினிலே தேளைக் கண்டால்
கொடுக்கை நசுக்கு – நீ
இருட்டறையில் போகுமுன்னே
விளக்கினை ஏற்று!
மடார் என்று வெடிவெடித்தால்
வாய் திறந்து நில் – நீ
மழைவரும் முன் காயவைத்த
வற்றலை எடுப்பாய்
கொடியவர்கள் தாக்க வந்தால்
தடியினைத் தூக்கு – வெறும்
கோழைகளை ஏழைகளை
வாழவைப்பாய் நீ!
7. நேர்பட ஒழுகு
அலைகடலின் தண்ணீரிலே ஆடக்கூடாது – நீ
அங்கும் இங்கும் தண்ணீரிலே ஓடக்கூடாது
தலைமேலே மண்ணை அள்ளிப் போடக்கூடாது – நல்ல
தாய்தடுத்தால் மலர்ந்த முகம் வாடக்கூடாது.
ஆழக்கடல் மேலே கப்பல் அழகாயிருக்கும் – பார்
அங்கே தோணி மிதப்பதுவும் அழகாயிருக்கும்
ஏழைமக்கள் இழுத்த வலையில் மீனாயிருக்கும் – அவர்
இழுக்கும் போத பாடும்பாட்டுத் தேனாயிருக்கும்.
கடல் தண்ணீர் அதிகசிலு சிலுப்பாயிருக்கும் – அதைக்
கையால் அள்ளி வாயில்வைத்தால் உப்பாயிருக்கும்
கடகடென்றே அலைபுரளும் கரைக டவாது – அந்தக்
காற்றினிலே குளிரிருக்கும் புழுக்கம் இராது.
8. நேர்பட ஒழுகு
கடன்வாங்கக் கூடாது தம்பி – மிகக்
கருத்தாய்ச் செலவிட வேண்டும்.
உடம்பினைக் காப்பாற்ற வேண்டும் – நீ
உணவினில் நல்லுணவை உண்பாய்!
உடைந்திடக் கூடாது நெஞ்சம் – நீ
உண்மைக்குப் பாடுபடும் போதில்!
அடைந்ததைக் காப்பாற்ற வேண்டும் – நீ
அயல்பொருள் பறிக்க எண்ணாதே!
9. இயல்பலாதன செயேல்
அழுமூஞ்சி என்று சொல்வார்
அழுது கொண்டே இருந்தால்;
கழுதையே என்று சொல்வார்
கத்திக் கொண்டே இருந்தால்;
எழுதாமல் நீயி ருந்தால்
இடக்குத் தனம் என்பார்;
கொழுத்துக் குறும்பு செய்தாலோ
கொழுத்த தனம் என்பார்.
பள்ளி செல்லா விட்டாலோ
பழித்துப் பேசு வார்கள்
துள்ளிப் பொருளை உடைத்தாலோ
துடுக்குத் தனம் என்பார்
அள்ளி அரிசி தின்றாலோ
அறிவில் லையா என்பார்
கொள்ளி அருகிற் போனாலோ
குரங்கா நீ என்பார்.
10. நைவன நணுகேல்
இன்னது வேண்டும் என்றுகேள்
எதற்கும் அழுவது சரியில்லை
சொன்னது கேட்டால் மகிழ்வார்கள்;
தொல்லை கொடுத்தால் இகழ்வார்கள்
அன்னை தந்தை நல்லவர்கள்
அன்பை உன்மேல் வைத்தவர்கள்
என்ன கேட்டா லும்தருவார்
இன்னது வேண்டும் என்றுகேள்!
குளிக்க அழைத்தால் உடனேபோ
கொட்டம் செய்வது சரியில்லை
விளக்கை எடுத்தால் தடுப்பார்கள்
வீண் ஒட்டாரம் பண்ணாதே
வெளிக்கு வந்தால் உள்ளேபோ
வெளியில் போவது சரியில்லை
கிளிக்குச் சொல்வது போற்சொல்வார்
கெட்டுப் போகவா சொல்வார்?
11. ஏமாறாதே
ஆரஞ்சுப் பழத்தையும் தம்பி – நீ
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு
நீர்சுண்டி இருக்கவும் கூடும் – அது
நிறையப் புளிக்கவும் கூடும்
ஓர்ஒன்றை உண்டுபார் தம்பி – உனக்கு
உகந்ததென் றால் அதை வாங்கு
பாரெங்கும் ஏமாற்று வேலை – மிகப்
பரவிக்கி டக்கின்றது தம்பி!
அழுகிய பழத்தையும் தம்பி – அவர்
அன்றைக்குப் பழுத்ததென் றுரைப்பார்
புழுக்கள்இருப்பதுண்டு தம்பி – உள்
பூச்சி இருப்பதுண்டு தம்பி
கொழுத்த பலாப்பழத்தி னுள்ளே – வெறும்
கோது நிறைந்திருக்கும் தம்பி
அழுத்தினா லும்தெரி யாது – அதை
அறுத்துக் காட்டச் சொல் தம்பி!
நெய்யிற் கொழுப்பைச் சேர்த்திருப்பார் – அதை
நேரில் காய்ச்சிப்பார் தம்பி
துய்ய பயறுகளில் எல்லாம் – கல்
துணிக்கை மிகவும் சேர்ப்பார்கள்
மையற்ற வெண்ணெ யென்றுரைப்பார் – அதில்
மாவைக் கலப்பார்கள் தம்பி
ஐயப்பட வேண்டும் இவற்றில் – மிக
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு!
வகுத்து வகுத்துச் சொல்வார்கள் – அதன்
வயணத்தை ஆராய வேண்டும்
பகுத்தறி வழியாச் சொத்தாம் – அதைப்
பாழாக்கக்கூடாது தம்பி
நகைத்திட எதையும்செய்யாதே – மிக
நல்லொழுக் கம்வேண்டும் தம்பி
தகத்தகப் புகழினைத் தேடு – நீ
தமிழரின் வழியினில் வந்தாய்!
12. களவு
கூழ்நிறைந்த குண்டான் – அதைக்
குப்பன் கண்டு கொண்டான்
ஏழ் குவளை மொண்டான் – மிக
இன்பமாக உண்டான்
வாழைத் தோட்ட முத்து – முன்
வந்து நாலு வைத்து
சூழ்ந்த நிழலில் படுத்தான் – அவன்
பசியில் நெஞ்சு துடித்தான்!
13. வீண் வேலை
மாமரத்தின் கிளையி லொரு
மாங்காய் தொங்கக் கண்டேன்;
மாங்காயின்மேல் கல்லைவிட்டேன்
மண்டை உடை பட்டேன்.
பூமரத்தில் ஏறி ஒரு
பூப்பறிக்கப் போனேன்;
பூப்பறிக்கத் தாவுகையில்
பொத்தென்றுவிழ லானேன்.
ஊமையைப்போல் இருந்த நாயை
உதைக்கக் காலை எடுத்தேன்;
உயரத் தூக்கிய வலதுகாலைக்
கடித்து விட்டது மாலை.
தீமையான செய்கைகளைச்
செய்யவுங்கூடாது;
செய்வோரிடம் எப்போதும்
சேரவும்கூ டாது!
14. ஏமாற்றாதே
கடைக்காரரே கடைக்காரரே
கற்கண்டு வேண்டும் என்றான்;
கடைக்காரர் உள்ளே சென்றார்
கடுகை அள்ளி மறைத்தான்.
கடைக்காரரே கடைக்காரரே
கற்பூரம் வேண்டும் என்றான்;
கடைக்காரர் உள்ளே சென்றார்
மிளகை அள்ளி மறைத்தான்.
கடைக்காரரே கடைக்காரரே
வெல்லம் வேண்டும் என்றான்;
கடைக்காரர் உள்ளே சென்றவர்
கடியத் திரும்பிப் பார்த்தார்.
கடையில் மல்லி அள்ளும் குப்பன்
கையோ டுபிடி பட்டான்;
கடுகளவு களவாடல்
மலையளவு குற்றம்!
15. மறதி கெடுதி
கண்ணாடிப் பெட்டியில் ஊசியிருக்கும்–அக்
கண்ணாடிப் பெட்டியில் அதை எடுத்தால்
எண்ணப்படி வேலை முடிந்த உடன்
எடுத்த இடத்திலே ஊசியை வை.
எண்ணெய் இருக்கும் இருட்டறையில்–அந்த
எண்ணெயை அங்கிருந்தே எடுத்தால்
எண்ணெய் இட்டுத் தலைவாரிக் கொண்டபின்
எடுத்த இடத்திலே புட்டியை வை.
கண்ணாடிப் பெட்டியில் ஊசி கண்டான்
கண்ணப்பன் அந்த ஊசி எடுத்தான்;
எண்ணப்படி வேலை முடிந்தபின்– அவன்
எங்கோ வைத்தான் அவ்வூசியை.
எண்ணெய் இருக்கும இருட்டறையில்–அந்த
எண்ணெயைக் கண்ணப்பனே எடுத்தான்;
எண்ணெய் இட்டுத் தலைவாரிக் கொண்டபின் – அவன்
எங்கேயோ புட்டியை வைத்துவிட்டான்.
கண்ணாடிப் பெட்டியில் ஊசி இருப்பதாய்க்
கண்ணப்பன் மறுநாள் தடவிப் பார்த்தான்;
கண்ணாடிப் பெட்டியில் ஊசியே இல்லை
கையிலே தேளொன்று கொட்டிவிட்டது!
எண்ணெய் இருந்த இருட்டறைக்குள்– அந்த
எண்ணெயைத் தேடிடும்கண்ணப்பனைப்
பிண்ணாக்குத் தின்னும் பெருச்சாலி–மிகப்
புண்ணாக்கி விட்டது கைவிரலை!
16. நோய்
மருத்துவர் தருவார் மருந்து
மகிழ்ச்சி யாக அருந்து
வருத்தப் படுதல் ஆகுமோ
வந்த நோய்தான் போகுமா?
திருத்த மாக நடப்பாய்
தீண்டுமா சொல் ஒரு நோய்?
கருத்தாய் நடப்போர் வாழ்வார்
கருத்தில் லாதவர் வீழ்வார்.
17. எண்
வேலா எவர்க்கும் தலை ஒன்று
மெய்யாய் எவர்க்கும் கண்இரண்டு
சூலத் தின்முனை யோ மூன்று
துடுக்கு நாயின் கால் நான்கு
வேலா உன்கை விரல் ஐந்து
மின்னும் வண்டின் கால் ஆறு
வேலா ஒருகை விரலுக்கு
மேலே இரண்டு விரல் ஏழு.
சிலந்திக் கெல்லாம் கால் எட்டே!
சிறுகை விரலும் நால் விரலும்
கலந்தால் அதன்பேர் ஒன்பது!
காண்பாய் இருகை விரல் பத்தே!
பலபல என்றே உதிர்ந்த பூ!
பத்தும் ஒன்றும் பதினொன்று
பலபல என்றே உதிர்ந்த பூ
பத்தும் இரண்டும் பனிரண்டு.
பத்தும் மூன்றும் பதின்மூன்று
பத்தும் நான்கும் பதினான்கு
பத்தும் ஐந்தும் பதினைந்து
பத்தும் ஆறும் பதினாறு
பத்தும் ஏழும் பதினேழு
பத்தும் எட்டும் பதினெட்டு
பத்தும் ஒன்பதும் பத்தொன்பது
பத்தும் பத்தும் இருபதே.
18. வாரம்
வாரமுதல் நாள் ஞாயிறு
மங்கா மறுநாள் திங்கள்
சேரக் கெளவும் செவ்வாய்
சேர்ந்து வருமாம் ஓர் புதன்
பாராய் அதன்பின் வியாழன்
பளிச்சென் றடிக்கும் வெள்ளி
நேரில் மறுநாள் ஓர்சனி
நிறைந்த வார நாள் ஏழாம்.
19. திங்கள் பனிரண்டு
சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி – பு
ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம் – இவை
ஓராண்டின் பனிரண்டு திங்களின்பெயர்.
கொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே
கூவும்குயில்! மழைபெய்யும் காத்திகையிலே
மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே–மிக
வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே!
20. திசை
கதிர் முளைப்பது கிழக்கு – அதன்
எதிர் இருப்பது மேற்கு
முதிர் மையம் வடக்கு – அதன்
எதிர் குமரி தெற்கு.
21. நிறம்
வானம் நீலம்
மல்லிகை வெண்மை
ஆனை கருப்பே
அலரி சிவப்பே
ஏன் இதில் ஐயம்?
இலைதான் பச்சை
தேன்மா அரைக்கும்
தினைதான் மஞ்சள்.
22. கிழமை
ஞாயிறுதான் ஒன்று – பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று – பின்
வந்த புதன் நான்கு
தூய்வி யாழன் ஐந்து – பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு – இதைத்
தவறாமற் கூறு.
23. விருந்து
விருந்து வருவது கண்டால் – மிக
விரும்பி எதிர் கொண் டழைநீ
இருக்க இருக்கை காட்டி – அதில்
இருக்க வேண்டிக் கொள்வாய்
அருந்தச் சுவைநீர் தருவாய் – நீ
அடைகாய்த் தட்டும் வைப்பாய்
பரிந்து சிலசில பேசிப் – பின்
பசியை நீக்க முயல்வாய்.
குளிக்கத் தனியறை காட்டு – அதில்
குட்டை வேட்டி மாட்டு
குளிப்புத் தொட்டியின் அண்டை – ஒரு
குளிப்புக் கட்டியும் வைப்பாய்
குளித்த பின்கண்ணாடி – நல்
எண்ணெய் சீப்புவை தேடி
அளிப்பாய் கறியும் சோறும் –மிக
அன்பாய் மிளகின் சாறும்!
24. உயிர் எழுத்துக்கள்
அணிலுக்கும் ஆட்டுக்கும்
முதலெழுத்தே அ ஆ
இலைக்கும் ஈக்களுக்கும்
முதலெழுத்தே இ ஈ
உரலுக்கும் ஊசிக்கும்
முதலெழுத்தே உ ஊ
எலிக்கும் ஏணிக்கும்
முதலெழுத்தே எ ஏ
ஐவருக்கும் சரியான
முதலெழுத்தே ஐ தான்
ஒட்டகம் ஓணானுக்கு
முதலெழுத்தே ஒ ஓ
ஒளவையார் முதலெழுத்தே
ஒளவாகும் பாராய்.
25. மெய்யெழுத்துக்கள்
செக்குக்கு நடுவெழுத்தே க்
சங்குக்கு நடவெழுத்தே ங்
உச்சிக்கு நடுவெழுத்தே ச்
பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ்
தட்டுக்கு நடுவெழுத்தே ட்
கண்ணுக்குப் பின்னெழுத்தே ண்
சித்திக்கு நடுவெழுத்தே த்
பந்துக்கு நடுவெழுத்தே ந்
சீப்புக்கு நடுவெழுத்தே ப்
பாம்புக்கு நடுவெழுத்தே ம்
நாய் என்றால் பின்னெழுத்தே ய்
தேர் என்றால் பின்னெழுத்தே ர்
வேல் என்றால் பின்னெழுத்தே ல்
செவ்வை என்றால் நடுவெழுத்தே வ்
யாழ் என்றால் பின்னெழுத்தே ழ்
புள்ளி என்றால் நடுவெழுத்தே ள்
ஏற்றமென்றால் பின்னெழுத்தே ற்
மான் என்றால் பின்னெழுத்தே ன்.
26. உயிர்மெய்
க் மேலே அகரம் ஏற
இரண்டும் மாறிக் க ஆகும்
க் மேலே ஆ ஏற
இரண்டும் மாறிக் கா ஆகும்
க் மேலே இகரம் ஏற
இரண்டும் மாறிக் கி ஆகும்
க் மேலே ஈ ஏற
இரண்டும் மாறிக் கீ ஆகும்
க் மேலே உகரம் ஏற
இரண்டும் மாறிக் கு ஆகும்
க் மேலே ஊ ஏற
இரண்டும் மாறிக் கூ ஆகும்
க் மேலே எ ஏற
இரண்டும் மாறிக் கெ ஆகும்
க் மேலே ஏ ஏற
இரண்டும் மாறிக் கே ஆகும்
க் மேலே ஐ ஏற
இரண்டும் மாறிக் கை ஆகும்
க் மேலே ஒ ஏற
இரண்டும் மாறிக் கொ ஆகும்
க் மேலே ஓ ஏற
இரண்டும் மாறிக் கோ ஆகும்
க் மேலே ஒள ஏற
இரண்டும் மாறிக் கெள ஆகும்.