"

1. உயிர்கள்

பிளவு பட்ட குளம்புடையது மாடு!

பிளவு படாக் குளம்புடையது குதிரை!

முளைக்கும் இருகொம் புடையது மாடு!

முழுதுமே கொம்பில் லாதது குதிரை!

பளபளென்று முட்டையிடும் பறவை!

பட்டுப் போலக் குட்டிபோடும் விலங்கு!

வெளியில் வராக் காதுடையது பறவை!

வெளியில் நீண்ட காதுடையது விலங்கு!

நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலை

நீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்

நீர்நிலையில் குட்டிபோடும் விலங்கு

நிறை மீன்கள் முட்டைஇடும் நீரில்.

நீரிலுமே பாம் பிருப்ப துண்டு

நிலத்திலும் பாம் பிருப்ப துண்டு

ஊரிலுள்ள பாம்போடும் நீரில்

உள்ள பாம்பும் இடுவதுண்டு முட்டை!

2. உயிர்கள்

காகா என்று கத்தும் காக்கா

கோ கோ என்று கூவும் கோழி

வள்வள் என்று குரைக்கும் நாய்தான்

உள்ளூர் பன்றி உர்உர் என்னும்

குக்கூ என்று கூவும் குயில்தான்

தக்கக் தாஎன ஆடும் மயில்தான்

கறுகுறு என்று கொஞ்சும் புறாவே

கிறுகீர் என்று சுற்றும் செக்கு

தளபள என்று கொதிக்கும் சோறு

மளமள என்று வருமே மழைதான்

தடதடா என்றே இடிக்கும் இடிதான்

கடபடா என்று கதறும் கடலே

அம்மா என்றே அழைக்கும் கறவை

தும்தும் என்று தும்முவர் மக்கள்

ஒய்ஒய் என்றே ஊதும் வண்டே

ஞைஞை என்று நவிலும் பூனை

அக்கக் காஎன அழைக்கும் கிளிகள்

தெற்குத் தமிழ்தான் யாழின் துளிகள்.

3. நாய் வளர்த்தல்

நாயும் நல்ல நாய்தான்அது

நன்றி யுள்ள நாய்தான்

வாயும் தூய்மை இல்லைஅது

வள்வள் என்று குரைக்கும்

பாயில் கழிவு கழிக்கும்அது

பல்லால் வேட்டியைக் கிழிக்கும்

நாய் வளர்ப்பதை விட்டுமிக

நலமடைந்தான் கிட்டு!

4. பசுப் பயன்

பசுவே கறக்கும் பாலைஅந்த

பாலைத் துவைத்தால் தயிராம்

விசையாய்த் தயிரைக் கடைந்தால்நல்ல

வெண்ணெயும் மோரும் கிடைக்கும்

கசக்கா வெண்ணெயைக் காய்ச்சிமணம்

கமழும் நெய்யை எடுப்பார்

பசுவின் பால்தயிர் வெண்ணெய்மோர்

பசுநெய் எல்லாம் உணவே!


5.
வண்டு

பாடிக் கொண்டே பறக்கும் வண்டு!

பறந்து கொண்டே பாடும் வண்டு!

தேடிக்கொண்டே திரியும் வண்டு!

தேனைக் குடிக்கப் பறக்கும் வண்டு!

சாடிக் குள்ளே நுழைவது போல்

தாமரையில் நுழையும் வண்டு!

மாடிக்குள்ளே விருந்து போல

மலரில் தேனை உண்ணும் வண்டு!

தங்கப் பொடியில் ஆடும் வண்டு!

சங்கத் தமிழைப் பாடும் வண்டு!

செங்குத் தாகப் பறக்கும் வண்டு!

செந்தூள் எங்கும் சிதறும் வண்டு!

எங்கும் மணத்தைப் பரவச் செய்யும்

இனிய தொண்டு புரியும் வண்டு!

மங்குவ தில்லை வண்டும் தேனும்

மணமும் பாட்டும் அந்தக் குளத்தில்!

6. பறவைகள்

மாடத்தில் தங்குவது மாடப் புறாநல்ல

மரத்தினில் தங்குவது மணிப்புறா

கூடத்தில் உலவிடும் சிட்டுக் குருவிஏரி

குளத்தில் முழுகிவரும் பட்டுச் சிரவி

கூடு துலங்க வைக்கும் கொஞ்சும் கிளிவீட்டுக்

கொல்லையில் காக்கைகருங் கொட்டாப்புளி,

ஆடப் பிறந்ததொரு சோலைமயில்பண்

பாடப் பிறந்ததொரு நீலக் குயில்!

கரிய படம்விரிக்கும் வான்கோழிஅதி

காலை இசைத்திடும் தேன் கோழி,

தரையிலும் நீரிலும் உள்ள வாத்துநாம்

கண்டால் சிரிப்பு வரும் குள்ள வாத்து

ஒருவெண் தாழம்பூ வுக்குநிகர்

உரைத்திடத் தக்கதொரு வெண்கொக்கே.

தெருவில் வீட்டிலும் காட்டிலுமாய்அவை

திரிந்திடும் பலபல அழகழ காய்.


7.
சிச்சிலி

நேரில் சிச்சிலி பறக்கும்குள

நீரில் மீன் சிறக்கும்

நீரில் மீனை விழுங்கிப்பின்

நேரில் சிச்சிலி பறக்கும்!

ஈயும் வந்து மேயும்அதை

மாயப் பல்லி பாயும்

வாயின் ஈரம் காயும்முன்ஓர்

ஈயம் வந்து மேயும்!

8. கோழி வளர்த்தல்

பண்ணையிலே கோழிமிகப்

பரிந்து வளர்க்க வேண்டும்

திண்ணையிலே கோழிவந்து

திரிந்தாலும் ஓட்டு.

கண்ணுக்கும் பிடிக்காதுஅது

கழிக்கும் கழிவைக் கண்டால்அது

மண்ணும் குப்பையும் சீய்க்கும்எங்கும்

மட்டத் தூசி ஆக்கும்.


9.
கிளி வளர்த்தல்

பச்சை கிளியை வளர்த்து வந்தான்

பழங்கள் எல்லாம் கொடுத்து வந்தான்;

குச்சிக் கூட்டைத் திறந்து விட்டான்

கூட்டில் அடைக்க மறந்து விட்டான்!

நச்சுப் பூனை பிடித்துத் தின்றது

நாயும் அங்கே குரைத்து நின்றது;

பிச்சை முத்து பட்டான் தொல்லை

பிறகு கிளிகள் வளர்ப்ப தில்லை!

10. சிட்டுக் குருவி

கெட்டிக் காரச்

சிட்டுக் குருவி

நெட்டைத் துடைப்பக்

கட்டை உருவிப்

பட்டுச் சேலை

இழையைச் சேர்த்தும்

கொட்டிய பஞ்சில்

கொஞ்சம் கோத்தும்

எட்டாச் சுவரை

ஒட்டிய வாரையின்

முட்டு முடுக்கின்

நட்ட நடுவில்


கட்டிய கூட்டில்

முட்டையும் இட்டது

ஒட்டிக் காத்துக்

குஞ்சும் பொறித்தது!

11. காக்கை

ஓயாத நாக்கா!

ஓய்ந்திருப்பாய் காக்கா!

வாயில் என்ன பாக்கா?

வாழைக் கச்சை மூக்கா!

ஆயாவைத்த தட்டை

அதிலி ருக்கும் பிட்டை

நீ பண்ணாதே சட்டை

நினைக்காதே திருட்டை!


12.
ஆட்டப் புறா

ஆடும் புறாபார்

ஆடும் புறாதன்

அழகு சிறகுவிரித்

தாடும் புறா.

வேடிக்கை பார்நல்ல

வேடிக்கை பார்முத்து

வெள்ளை புறாக் காட்டும்

வேடிக்கை பார்.

தேடாச் செல்வம்அது

தேடாச் செல்வம்அதன்

சின்னக் காலும் மின்அடகும்

தேடாச் செல்வம்.

மேடைப் புறாமணி

மேடைப் புறாபடம்

விரித்துக் களித்தாடும்

மேடைப் புறா!

13. எலிப்பொறி

எலிப்பொறியில் போளிஅதை

இழுத்தது பெருச் சாளி

எலிப் பொறியின் கதவுதான்

சாற்றிக் கொண்டது பிறகு!

ஒளிந்தது பார் உள்ளேஅது

வரப் பார்த்தது வெளியே

வலியக் கோணியில் பிடித்தார்அதை

மாண்டு போக அடித்தார்!


14.
வேப்பமரத்திற்குக் குடிக்கூல

வீட்டுக் கொல்லையில் ஒரு காக்கா

வேப்ப மரத்தில் தன் மூக்கால்

கூட்டைக் கட்டித் தீர்த்தவுடன்

குப்பன் அதையே பார்த்தவுடன்

கூட்டைக் கலைக்க வேண்டினான்

குடியைக் கெடுக்கத் தூண்டினான்

வீட்டுக் காரர் சீறினார்

வேண்டாம் என்று கூறினார்.

அரிதாய் முட்டை இட்டது

அப்புறம் குஞ்சு பொறித்தது

பெரிதாய்க் குஞ்சு பறந்தது

பிறந்த இடத்தை மறந்தது

சுருக்காய்க் கூட்டைக் கலைத்தார்கள்

சுள்ளிகள் பஞ்சுகள் எடுத்தார்கள்

சரியாய் நூறு ரூபாயின்

தாளும் கண்டு மகிழ்ந்தார்கள்!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்-இளைஞர் இலக்கியம் Copyright © by புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book