"

1. மழைக்காலம்

வானி ருண்டது மின்னல் வீசிற்று

மடமடவென இடித்து பயிர்

வளர்ந்தது மழை பிடித்து.

ஆனது குளிர் போனது வெப்பம்

அங்கும்இங் கும்பெரு வெள்ளம் அட

அதிலும் மீன்கள் துள்ளும்.

பூனை சுவரின் பொந்தில் ஒடுங்கும்

பொடிக் குருவிகள் நடுங்கும்வண்ணப்

பூக்களில் ஈக்கள் அடங்கும்.

சீனன் கம்பளிக் குல்லாய் மாட்டிச்

சிவப்பு சால்வை போர்த்தான் அவன்

தெருவில் வேடிக்கை பார்த்தான்!


2.
மழை

வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்த

வையத்தை வாழவைக்க மழையே வா!

சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்ல

செந்நெல் செழிப்பாக்க மழையே வா!

கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்ல

காடு செழிக்க வைக்க மழையே வா!

ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் நீ

அழகுப டுத்தநல்ல மழையே வா!

3. கோடை

சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்

சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்

மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வே

வழிந்து கொண்டே இருக்கும் வியர்வை

நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும்

நொக்கும் வெயிலால் உருகும் லாடம்

அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்

அழுது கொண்டே திரியும் ஆடும்.


கொட்டிய சருகு பொரித்த அப்பளம்
!

கொதிக்கும் மணலை மிதித்தால் கொப்புளம்!

தொட்டியில் ஊற்றிய தண்ணீர் வெந்நீர்!

சோலை மலர்ந்த மலரும் உலரும்!

கட்டி லறையும்உ ரொட்டி அடுப்பே!

கழற்றி எறிந்தார் உடுத்த உடுப்பே!

குட்டை வறண்டது தொட்டது சுட்டது

கோடை மிகவும் கெட்டது கெட்டது!


4.
குளம்

குடிக்கும் தண்ணீர்க் குளமே! – என்

குடத்தை நிரப்பும் குளமே!

படித்துறையில் எங்கும் ஒரு

பாசி யில்லாக் குளமே!

துடித்து மீன்கள் நீரில் துள்ளித்

துறையில் ஆடுங் குளமே!

எடுத்துக் கொண்டோம் தண்ணீர் போய்

இனியும் வருவோம் குளமே!


5.
குட்டை

சின்னஞ் சிறு குட்டை அதில்

ஊறுந் தென்னை மட்டை! – அதோ

கன்னங் கரிய அட்டை! – எதிர்

காயும் எரு முட்டை! – அதோ

இன்னம் சோளத் தட்டை! –அந்த

எருமைக் கொம்பு நெட்டை அதோ

பின்னால் எருது மொட்டை நான்

பேசவாப கட்டை?
6. தாமரைக் குளம்


முழுதழகு தாமரைக் குளம்
!

எழுத வருமா ஓவியப் புலவர்க்கும்?

(முழுதழகு)


அழும் உலகை உவகையிற் சேர்ப்பது

அழகு சிரித் ததை ஒப்பது!

எழுந்த செங்கதிர் ஏன்என்று கைநீட்ட

தேன்கொண்டு செந்தாமரை விரிந்தது.

(முழுதழகு)

செம்பும் தங்கமும் உருக்கி மெருகிட்டது

இதழ் ஒவ்வொன்றும் ஒளிபெற்றது.

அன்பு மதலை முகமென மலர்ந்தது

குதலை வண்டு வாய் மொழிந்தது.

(முழுதழகு)


மிதக்கும் பாசிலைமேல் முத்து மிதக்கும்

நம்விழி மகிழ்ச்சியில் குதிக்கும்

கொதிக்கும் செங்கதிர் மேற்கில் நடந்தது

கூம்பிடும் தாமரையின் முகம் அதோ.

(முழுதழகு)

7. ஏரி

மாரி வந்தால் நீரைத் தேக்கும் ஏரி அது

வயலுக் கெல்லாம் நீர் கொடுக்கும் ஏரி.

ஊரில் உள்ள மாடு குடிக்கும் ஏரி அங்

குள்ளவரும் தண்ணீர் மொள்ளும் ஏரி!

ஏரிக்கரை எல்லாம் பனை, தென்னை அதன்

இடையிடையே அலரி நல்ல புன்னை

சார்ந்தவர்கள் எனக்குத் தந்தால் தொன்னை பனஞ்

சாற்றை ஊற்றிக் குடிக்கச் சொன்னார் என்னை.


8.
ஆறு

மேற்கிருந்து கிழக்கு நோக்கி

விரைந்து வந்தாய் ஆறே!

விதவிதப்பூப் பெரும்பெ ருங்கிளை

அடித்து வந்தாய் ஆறே!

தேற்ற வந்தாய் எங்கள் ஊரும்

சிறக்க வந்தாய் ஆறே!

செழிக்க உங்கள் நன்செய் என்று

முழக்கி வந்தாய் ஆறே!

நேற்றி ருந்த வறட்சி எலாம்

நீக்க வந்தாய் ஆறே!

நெளிந்து நெளிந்து வெள்ளி அலை

பரப்பி வந்தாய் ஆறே!

காற்றோடும் மணத்தோடும்

கலந்து வந்தாய் ஆறே!

கண்டுமகிழக் கெண்டைவிழி

காட்டி வந்தாய் ஆறே!

9. கடற்கரை

கடலைச் சுண்டல் விற்கின்றார் அவர்

கடலோரத்தில் நிற்கின்றார்.

கடலைச் சுண்டல் வா என்றேன் புதுக்

காசு கொடுத்துத் தா என்றேன்.

கடலைச் சுண்டல் கொடுத் தாரே அவர்

கையில் கூடையை எடுத்தாரே!

கடலைச் சுண்டல் விற்கின்றார் பின்னும்

கடலோரத்தில் நிற்கின்றார்.


10.
கடல்

முத்துக் கடலே வாழ்க! – இசை

முழங்கும் கடலே வாழ்க!

தத்தும் அலைகள் கரையை வந்து

தாவும் கடலே வாழ்க!

மெத்தக் கப்பல் தோணி மேல்

மிதக்கும் கடலே வாழ்க!

ஒத்துப் பறவைகள் பாடி மீன்

உண்ணும் கடலே வாழ்க!


வண்ணம் பாடிப் பொழியும்
நல்ல

மழையும் உன்னால் அன்றோ!

தண்என் றுவரும் காற்றை நீ

தந்தாய் கடலே வாழ்க!

கண்ணுக் கடங்க வில்லை நான்

காணும் போதுன் பரப்பு!

மண்ணிற் பெரிதாம் கடலே நீ

வாழ்க! வாழ்க! வாழ்க!


நீலக் கடலே வாழ்க
! – ஒளி

நெளியும் கடலே வாழ்க!

மாலைப் போதில் கடலே வரும்

மக்கட் கின்பம் தருவாய்.


காலைப் போதில் கதிரோன் தலை

காட்டும் கடலே வாழ்க!

ஏலே லோப்பண் ணாலே வலை

இழுப்பார் பாடும் கடலே!


11.
வயல்

மலர் மணக்கும் தென்றல் காற்றில்

மாமன் வயற் சேற்றில்

சலசல என ஏரை ஓட்டித்

தமிழ் பாடினான் நீட்டி!

மலைகள் போல இரண்டு காளை

மாடுகள் அந்த வேளை

தலைநிமிர்ந்து பாட்டுக் கேட்டுத்

தாவும் ஆட்டம் போட்டு!

12. சோலை

பச்சைமணிப் பந்தலல்ல சோலை” – பசும்

பட்டுமெத்தை அல்லபுல்த ரைதான்!

நொச்சிச்செடிப் பாப்பாவை அணைத்துத் தரும்

நூறுதரம் முல்லைக்கொடி முத்து!

மச்சிவீட்டை விட உயரம் தென்னை மிக

மணம்வீசும் அங்கே ஒரு புன்னை!

உச்சிக்கிளை மேற்குயிலும் பாடும் பார்

ஒருபுறத்தில் பச்சைமயில் ஆடும்.

மணிக்குளத்தில் செந்தாமரைப் பூக்கள் அங்கு

வகைவகையாய்ச் சிந்துபாடும் ஈக்கள்!

தணிக்கமுடி யாவியர்வை கழுவும்நல்ல

சந்தனத்துத் தென்றல் வந்து தழுவும்!

இணைக்கிளைகள் மரக்கிளையில் கொஞ்சும்மிக

இடிக்கும் பலா மரத்திற் பிஞ்சும் பிஞ்சும்!

பிணிபோகும் மறைந்துபோகும் துன்பம்இப்

பெருஞ்சோலை அளிப்பதெலாம் இன்பம்!

13. தோட்டம்

மாமரமும் இருக்கும்நல்ல

வாழைமரம் இருக்கும்.

பூமரங்கள் செடிகள்நல்ல

புடலை அவரைக் கொடிகள்,

சீமைமணற்றக் காளிநல்ல

செம்மாதுளை இருக்கும்.

ஆமணக்கும் இருக்கும் கேள்

அதன் பேர்தான் தோட்டம்.

14. தோப்பு

எல்லாம் மாமரங்கள் அதில்

எங்கும் மா மரங்கள்;

இல்லை மற்ற மரங்கள்

இதுதான் மாந் தோப்பு.

எல்லாம் தென்னை மரங்கள் அதில்

எங்கும் தென்னை மரங்கள்;

இல்லை மற்ற மரங்கள்

இது தென்னந் தோப்பு.

எல்லாம் கமுக மரங்கள் அதில்

எங்கும் கமுக மரங்கள்;

இல்லை மற்ற மரங்கள்

இது கமுகந் தோப்பு.

எல்லாம் புளிய மரங்கள் அதில்

எங்கும் புளிய மரங்கள்;

இல்லை மற்ற மரங்கள்

இது புளியந் தோப்பு.

15. மலை


அண்ணாந்து பார்த்தாலும் மலையே
!-உன்

அடிதான் தெரியும்என் கண்ணில்.

மண்மேலே உட்கார்ந்த மலையே!- நெடு

வானத்தில் இருக்கும் உன் தலையே!

எண்ணாயி ரம்மரங்கள் இருக்கும் அந்த

இலைபள பளவென்று சிரிக்கும்.

பண்ணாயிரம் கேட்கும் காதில் அங்குப்

பல்லோரும் பாடுகின்ற போதில்.

வற்றா அருவிதரும் மலையே!- இங்கு

வாழ்வோர்க்கு நலம்செய்யும் மலையே!

சிற்றாடை கட்டிப்பல பெண்கள்பூச்

செண்டாடிக் கொண்டிருக்கும் மலையே!


பற்றாக் குறை நீக்கக் குரங்கு
தன்

பல்லால் பலாப்பழத்தைக் கிழிக்கும்நல்ல

தெற்குத் தமிழ்பாடிப் பெண்கள்பெருந்

தினைப்புனம் காக்கின்ற மலையே!

16. விண்மீன்

மின்னாத வானில்

மின்னுகின்ற மீன்கள்

சின்ன சின்ன வயிரம்

தெளித்தமுத் துக்கள்

புன்னையின் அரும்பு

பூக்காத முல்லை

என்ன அழகாக

இருந்தன மீன்கள்!

17. கதிரவன்

தங்கத் தட்டே வாவா! – ஒரு

தனித்த அழகே வாவா!

பொங்கும் சுடரே வாவா!-பசும்

பொன்னின் ஒளியே வாவா!

எங்கும் இருப்பாய் வாவா!-நீ

எவர்க்கும் உறவே வாவா!

சிங்கப் பிடரைப்போலபிடர்

சிலிர்த்த கதிரே வாவா!


கடலின் மேலே தோன்றி
நீ

காலைப் பொழுதைச் செய்வாய்.

நடுவா னத்தில் நின்றுநீ

நண்பகல் தன்னைச் செய்வாய்.

கொடிமேல் முல்லைம ணக்கும் நல்

குளிர்ந்த தென்றல் வீசும்

படிநீ மாலைப் போதைப்பின்

பரிவாய்ச் செய்வாய் வாழ்க!

18. நிலவு

சொக்க வெள்ளித் தட்டு மிகத்

தூய வெண்ணெய்ப் பிட்டு!

தெற்கத்தியார் சுட்டுநல்ல

தேங்காய்ப் பாலும் விட்டு

வைக்கச் சொன்ன தோசைஅது

வயிர வட்ட மேசை!

பக்க மீன்கள் பலவேஒரு

பட்டத் தரசு நிலவே.


19.
நிலவு

வட்ட நிலவே!

வாடாப் பூவே!

சட்டிநி லாவே!

தாமரைப் பூவே!

தொட்டிப் பாலே!

சோற்றுத் திரளே!

எட்டி இருந்தாய்

இனியவி ருந்தாய்.

வெள்ளித் தட்டே!

விண்ணுக் கரசே!

பிள்ளை முகமே!

பேசுந் தமிழே!

உள்ளக் களிப்பே!

உலக விளக்கே!

அள்ளிப் புரிந்தாய்

அழகு விருந்தே.

20. நிலவு

பள்ளியை விட்டு வந்தேனா?

பட்டப் பகலும் மங்கினதா?

உள்ளே வீட்டில் நுழைந்தேனா?

உள்ள சுவடியை வைத்தேனா?

பிள்ளைகள் எல்லாம் வந்தாரா?

பெரிய தெருவில் சேர்ந்தோமா?

வெள்ளி நிலாவும் வந்ததே!

விளையா டும்படி சொன்னதே!

ஓடித் தொட்டோம் ஓர் ஆளை!

ஒளியும் ஆட்டம் ஆடினோம்!

பாடி நடந்தோம் எல்லோரும்!

பச்சைக் கொடிக்கு நீர்விட்டோம்!

தேடிக் கள்ள னைப்பிடித் தோம்

சிட்டாய்ப் பறந்தோம் வீட்டுக்கே!

ஆடச் செய்தது வெண்ணிலா

அழகைச் செய்தது வெண்ணிலா.

21. நிலவு

வானத் தூரார் வந்தார்அவர்

மத்தாப் பைப்போல் நின்றார்

மீனுக் கெல்லாம் சொன்னார்மேல்

மினுக்க வேண்டும் என்றார்!

நானும் அவரைப் பார்த்தேன் அவர்

தாமும் என்னைப் பார்த்தார்.

ஏனோ வந்து குலவார்? – கீழ்

இறங்கு வாரா நிலவார்?


22.
வெண்ணிலா

அல்லி மலர்ந்தது வெண்ணிலாவே!-நல்ல

அழகு செய்தது நீ வந்ததால்,

கொல்லை குளிர்ந்தது வெண்ணிலாவே!-கொடுங்

கோடை தணிந்தது நீ வந்ததால்,

சில்லென் றிருந்தது வெண்ணிலாவே!-எம்

செந்தமிழ் நாடு நீ வந்ததால்,

தொல்லை தணிந்தது வெண்ணிலாவே!-உடல்

சூடு தணிந்தது நீ வந்ததால்!

ஒளி பிறந்தது வெண்ணிலாவே!-நல்ல

உள்ளம் பிறந்தது நீ வந்ததால்,

களி பிறந்தது வெண்ணிலாவே!-முக்

கலை பிறந்தது நீ வந்ததால்,

எளிமை போனது வெண்ணிலாவே!-நெஞ்சில்

இன்பம் பிறந்தது நீ வந்ததால்,

நெளியும் கடலும் வெண்ணிலாவே!-அலை

நீள முழங்கிற்று நீ வந்ததால்.


23.
மூன்றாம் பிறை

முல்லைக் காட்டின் அடைசலில் ஒரு

முல்லை யரும்பு தெரிந்ததே.

வில்லேதான் மூன் றாம்பிறைஅது

விண்ணில் அதோதான் தெரிந்ததே!

சொல்லிச் சொல்லிக் காட்டினேன்

தொலையில் விரலை நீட்டினேன்.

இல்லை இல்லை என்றாரேபின்

இதோ இதோ என் றுரைத்தாரே.

24. அவன் வந்தால் உனக்கென்ன?

அழகிய நிலவு வந்தா லென்ன?

அதுதான் கண்டு சிரித்தா லென்ன?

பழகிட எண்ணிப் பார்த்தா லென்ன?

பால்போல் மேனி இருந்தா லென்ன?

முழுதும் குளிரைச் செய்தா லென்ன?

முத்துச் சுடரைப் பொழிந்தா லென்ன?

ஒழுகும் தேனிதழ்த் தாமரைப் பெண்ணே

உன்முகம் கூம்பக் காரணம் என்ன?

25. முகிலைக் கிழித்த நிலா

பகல் இருண்டது கண் இருண்டது

பழகிய என்னைத் தெரியவில்லை கிளிக்கேஉடன்

பளபள வென்று வந்தது நிலா விளக்கே!

பகலைப் போல இர விருந்தது

பார்த்த தெல்லாம் நன்குபுரிந்தது கண்ணில்உடன்

நிலவை வந்து முகில் மறைத்தது விண்ணில்!

முகத்துக்கு முகம் தெரி யவில்லை

மூலைமுடுக்குப் புரியவில்லை பின்பேஅந்த

முகிலைக் கிழித்து நிலவு வந்தது முன்பே!

தகத் தகஎன்று வெளிச்சம் வந்தது

தகத் தகத் தகத் தகத் தகவென ஆடியாம்

மகிழ்ந்தோமே சங்கத் தமிழ் பாடி!


26.
நிலவு

வில்லடித்த பஞ்சு

விட்டெறிந்த தட்டு

முல்லைமலர்க் குவியல்

முத்தொளியின் வட்டம்

நல்வயிர வில்லை

நானில விளக்கு

மெல்ல இங்கு வாராய்!

வெண்ணிலவே நேராய்!

வீற்றிருக்கும் அன்னம்

வெள்ளித்தா மரைப்பூ

ஊற்றிய பசும் பால்

உண்ண வைத்த சோறு

ஆற்று நடுப் பரிசல்

அழகுவைத்த தேக்கம்

மாற்றமில்லை வாராய்!

வானிலவே நேராய்!

27. கொய்யாப்பூ

கொல்லை யிலே கொய்யாப்பூ அது

கொண்டையிலே வையாப் பூ

நல்ல வெள்ளைத் தாமரை அது

நன்றாய் மலர்ந்த தாமரை

கல்லை யிலே தேங்காய்ப்பால் அது

காண இனிக்கும் கட்டிப்பால்

எல்லாம் என்றன் கண்ணிலா! – மிக

எழிலைத் தந்தது வெண்ணிலா!

28. சிற்றூர்


சின்னப் பள்ளி ஒன்றுண்டு

பெரிய கோயில் பல உண்டு.

நன்செய் புன்செய் நாற்புறமும்

நடவும் உழவும் இசைபாடும்

தென்னையம் பனையும் பலமரமும்

செடியும் கொடியும் அழகு தரும்

நன்னீர் வாய்க்கால் ஏரிகுளம்

நலம் கொழிப்பது சிற்றூராம்.


மச்சு வீடு ஏழெட்டு

மாடி வீடு நாலைந்து

குச்சு வீட்டு வாயில்கள்

குனிந்து போகப் பலவுண்டு

தச்சுப் பட்டறை ஒன்றுண்டு

தட்டார் பட்டறை ஒன்றுண்டு

அச்சுத் திரட்டும் கருமாரின்

பட்டறை உண்டு சிற்றூரில்.


காக்கா ஒருபுறம் கா கா கா

குருவி ஒருபுறம் கீ கீ கீ

மேய்கும் ஆடு மே மே மே

மின்னும் கோழி கோ கோ கோ

பாக்கும் பூனை மீ மீ மீ

பசுங் கன்றும் மா மா மா

ஆக்கும் இந்தக் கச்சேரி

அங்கங் குண்டு சிற்றூரில்.


கம்பும் தினையும் கேழ்வரகும்

கட்டித் தயிரும் சம்பாவும்

கொம்பிற் பழுத்த கொய்யா, மா,

குலையிற் பழுத்த வாழையுடன்

வெம்பும் யானைத் தலைபோல

வேரிற் பழுத்த நல்லபலா

நம்பிப் பெறலாம் சிற்றூரில்

நாயும் குதிரை போலிருக்கும்.

29. பேரூர்

நிற்க வரும் புகை வண்டி

நிலையம் உள்ள பேரூர்!

விற்கத் தக்க விளைவை எல்லாம்

வெளியில் ஏற்றும் பேரூர்!

கற்கத் தக்க பள்ளிக்கூடம்

கச்சித மாய் நடக்கும்.

உற்றுப் பார்க்கக் கோயில் மட்டும்

ஊரிற் பாதி இருக்கும்!

பத்துத் தெருக்கள் மிதிவண்டிகள்

பவனி வரும் எங்கும்.

முத்து வெள்ளைச் சுவர்வீட்டின்

முன்னால் பொறியியங்கி!

கத்தும் இரிசு கட்டைவண்டி

கடைச் சரக்கை ஏற்றி

ஒத்து நகரை நோக்கி ஓடும்

உள்ளூ ரைஏ மாற்றி!

செட்டுத் தனம் இல்லை பல

தேவை யற்ற உடைகள்

பட்டணம் போகா தவர்கள்

பழங்காலத்து மக்கள்

கட்டு உடம்பு வற்றிப் போகக்

கையில் வெண்சு ருட்டுப்

பெட்டியோடும் உலவ வேண்டும்

இதன் பேர்தான் பேரூர்.


30.
பட்டணம்

பல்கலைக்கழகம்

உயர்நிலைப் பள்ளி

செல்வச் சிறுவர்

செல்லும் பள்ளிகள்

நல்ல நூல்கள்

படிக்கப் படிப்பகம்

எல்லாம் இருக்கும்

அமைதி இராது!

பாட்டை நிறையப்

பலவகை வண்டிகள்

காட்டுக் கூச்சல்

கடமுடா முழக்கம்

கேட்டால் காதே

கெட்டுப் போகும்

ஈட்ட ஆலைகள்

இருபது கூவும்!

தூய ஆடைத்

தோகை மாரும்

ஆய உணர்வின்

ஆடவர் தாமும்

ஓயா துழைக்கும்

பலதுறை மக்களும்

தேய வழிகள்

செல்வார் வருவார்!

வெள்ளி மலையும்

தங்க மலையுமாய்

உள்ள வீடுகள்

வானில் உயரும்

அள்ளும் அழகுடை

அலுவல் நிலையம்

கொள்ளா வணிகம்

கொண்டது பட்டணம்!

நாடக சாலைகள்,

நற்படக் காட்சிகள்

ஆடல் பாடல்

அமையும் அவைகள்

ஈடிலாப் புலவர்

பேச்சுமன் றங்கள்,

காடுகள் சோலைகள்

கவிந்தது பட்டணம்!


31.
பூச்செடி

மாடு குடிக்கும் தொட்டி அல்ல

மண் நிறைந்த தொட்டி!

வாடி மரத் தொட்டி அல்ல

மண்ணாற் செய்த தொட்டி!

வேடிக் கையாய்த் தொட்டி யிலே

விதைகளை நான் நட்டேன்;

ஆடிப் பாடிக் காலை மாலை

அன்பாய்த் தண்ணீர் விட்டேன்!

ஒரு மாதம் சென்றவுடன்

நிற நிறமாய் அரும்பி

விரை வாகப் பூத்த பூக்கள்

பெரிய பெரிய பூக்கள்

கரு நீலச் சாமந்தி

வெண்ணிறச் சாமந்தி

வரகு நிறம் சிவப்பு நிறம்

மணத்தை அள்ளி வீசும்!

32. முக்கனி

குண்டுபலா குலைவாழை

மண்டுசுவை மாம்பழங்கள்

கொண்ட மூன்றும் முக்கனியாம்

உண்டு மகிழ்வர் தமிழர்!


33.
வாழை

மலைவாழை செவ்வாழை

வங்காளவா ழைபார்!

வளர்ந்தநல்ல பேயன்வாழை

பச்சைவாழை பார்பார்!

பலவாழை மரங்களுண்டு

பழம்பழுப்ப துண்டு

பலவாழைப் பழங்களுமே

இனிக்கும்கற் கண்டு!

குலைகொடுக்கும் வாழைமரம்

இனிக்கும்பழம் கொடுக்கும்.

மலிவாக வாழைக்கச்சை

வாழைத்தண்டு கொடுக்கும்.

கலையாமல் வாழைப்பூவும்

கறிசமைக்கக் கொடுக்கும்.

34. தென்னை

தென்னைமரம் கண்டேன் பல

தேங்காய்க்குலை கண்டேன்.

தென்னை ஓலை நீட்டு அதில்

பின்னுவார்கள் கீற்று

தென்னம்பாளைச் சாறு மிக்கத்

தித்திக்குந்தே னாறு

தென்னைமரம் பிளந்து செற்றி

வாரை செய்வாய் அளந்து.

இளந்தேங்கா யின்பேர் நல்ல

இளநீர்க்காய் என்பார்

இளந்தேங்காய் முற்றும் அதில்

இருந்த நீரும் வற்றும்!

பிளந்த தேங்காய் தன்னைநல்ல

செக்கில் ஆட்டிய பின்னை

தெளிந்த எண்ணெய் எடுப்பார்நல்ல

தேங்காய் எண்ணெய் அதன் பேர்!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்-இளைஞர் இலக்கியம் Copyright © by புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book