"

1. வண்டிகள்

பெரிய கட்டை வண்டிஅதன்

பின்னா லேவில் வண்டி!

முருகன் மொட்டை வண்டிபின்னும்

முனியன் கூண்டு வண்டி!

கரிய னின்கை வண்டிஅது

காளை மாட்டு வண்டி

தெரியும் குதிரை வண்டிஅதோ

சீனன் இழுப்பு வண்டி!

உள்ளி இருப்பவர்கள்எந்த

ஊருக் குப்போ கின்றார்?

உள்ளிருக்கும் பண்டம்எந்த

ஊரைச் சேர வேண்டும்?

பிள்ளைத் தோட்டத் திற்கேகேள்

பிடிக்க வேண்டும் ஓட்டம்;

வள்ளி திரு மணமேஒரு

மணிநே ரத்தில் துவக்கம்!


2.
இரட்டை மாட்டு வண்டி

எங்கள் வண்டி மாடுகேள்

இரண்டு வெள்ளை மாடு

தங்க வண்டியில் பூட்டிநல்ல

தருமன் சென்றான் ஓட்டி!

எங்கே வண்டி போகும்?-அது

இரிசன் பாளையம் போகும்

அங்கே என்ன வேலை?-எனில்

ஆடல் பாடல் மாலை!

3. குதிரை வண்டி

ஓடும் நன்றாய் ஒரு குதிரை

உதைக்கும் கடிக்கும் ஒருகுதிரை,

ஓடையில் தள்ளும் வண்டியையே

உயிரை வாங்கும் ஒருகுதிரை,

சோடு தவறும் ஒருகுதிரை

சும்மா படுக்கும் ஒருகுதிரை,

வாடப்பின்னோ டேதள்ளும்

வாலால் அடிக்கும் ஒருகுதிரை!

நல்ல குதிரை பூட்டியதாய்

நல்ல ஆளே ஓட்டுவதாய்

எல்லா வண்டியும் இருக்குமா?

இருந்தால் உலகம் சிரிக்குமா?

பொல்லாங் கெல்லாம் நேருமா?

போக்கில் மூலை வாருமா?

நல்ல குதிரை வண்டியிலே

நாம்உட் கார்ந்தால் நலிவில்லை.


4.
மாட்டு வண்டி

கலகலத்தது வண்டிஅந்தக்

காளைமாடும் நொண்டி

பொலபொலத்தது கூரைமட்கிப்

பொடியைச் சிந்தும் ஆரை

வலிய அதட்டும் சீனன் அந்த

வண்டிக்காரன் கூனன்

குலைந டுங்கிட உள்ளேவந்து

குந்தி யவளும் நொள்ளை!

ஏரிக்கரை மேலேஅதை

இழுத்துப் போன தாலே

ஆரை ஓடிய பாரும்அப்

படியே உட்காரும்

பாரும் எருதும் புரளஏரிப்

பள்ளத்திலே உருள

ஊரில் யாரும் இல்லைஅவர்

உதிர்த்தனர் பல பல்லை!


5.
ஒற்றைமாட்டு வண்டி

ஒற்றை மாடு கட்டிஅதோ

ஓடினது வண்டி

ஒற்றைமாட்டு வண்டிஅது

உயர்ந்த கூட்டு வண்டி.

ஒற்றைமாட்டு வண்டிதனில்

உள்ளே சிலர் குந்திச்

சிற்றூருக்குப் போனார்அவர்

திரும்பி நாளை வருவார்.

6. மக்கள் இயங்கி

மக்கள் ஏறும் இயங்கு வண்டி

வழியே போகும்பின்

வழியே மீளும்.

மக்கள் அதிலே நிறைந்திருப்பார்

வழியே போகும்பின்

வழியே மீளும்.

மக்கள் இடையில் ஏறிக் கொள்வார்

வழியே போகும்தன்

வழியே மீளும்.

மக்கள் இடையில் இறங்குவார்கள்

வழியே போகும்பின்

வழியே மீளும்.


வண்டி யோட்டி சுக்கான் பிடிக்க

வழியே போகும்பின்

வழியே மீளும்.

வண்டிக் கணக்கர் மேற்பார்வையில்

வழியே போகும்பின்

வழியே மீளும்.

வண்டி கெட்டால் தள்ளிவிட்டால்

வழியே போகும்பின்

வழியே மீளும்.

வண்டியிலே வசதி உண்டு

வழியே போகும்பின்

வழியே மிளும்.

7. பொறிமிதி வண்டி

பொறிமிதி வண்டி

படபட என்று

போவதைப் பாருங்கள்.

குறுகிய இடத்தில்

ஒருவர் உட்கார்ந்து

போவதைப் பாருங்கள்

பிறைபோல் வளைபிடி

இருமுனை பிடித்துப்

போவதைப் பாருங்கள்.

பொறிமேல் நினைவொடு

மிதிமேல் காலொடு

போவதைப் பாருங்கள்

பொறிதான் இழுக்கச்

சுக்கான் திருப்பப்

போவதைப் பாருங்கள்

பொறிபழு தானது

சுக்கான் உடைந்தது

விழுவதைப் பாருங்கள்.

நெறிதவ றிட்டார்

நினைவு மறந்தார்

விழுவதைப் பாருங்கள்.

முறையே கருவிகள்

முற்றும் கெட்டன

விழுவதைப் பாருங்கள்.

8. மிதிவண்டி

மிதிவண்டியில் போகின்றார் கந்தசாமிகடு

வெய்யிலிலே நீந்துகின்றார் கந்தசாமி!

மிதிவண்டியிலே போவதற்கே கந்தசாமிஅந்த

மிதிவண்டியில் போகின்றார் கந்தசாமி!


மிதிவண்டியில் போகத்தக்க வேலையேயில்லை
அந்த

வெய்யிலிலே நீந்துகின்றார் கந்தசாமி!

மிதிவண்டியும் கல்லில்பட்டு வீழ்ந்துவிட்டதால்அவர்

மிதிவண்டிமேல் வீழ்ந்துவிட்டார் கந்தசாமி!

9. சரக்கேற்றும் பொறிஇயங்கி

சரக்கேற்றும் பொறிஇயங்கிபார்பார்!

தடதடென்றே ஓடுவதைப் பார்பார்!

சரக்கெல்லாம் சத்தத்துக்கே ஏற்றுவார்

தடதடென்றே ஓடுவதைப் பார்பார்!

சரக்குக்கே உடையவரின் வீட்டில்

சரக்குகளை இறக்குகின்றார் பார்பார்!

சரக்கேற்றிப் போனதற்கே சத்தம்

தருகின்றார் எண்ணிஎண்ணிப் பார்பார்.


10.
பரிசல்

ஆற்றில் பரிசல் அழகாய் ஓடும்

அக்கரை இருந்தும் இக்கரை சேரும்

நேற்றுப் பரிசலில் பத்துப் பேர்கள்

நின்றி ருந்தார் உட்கார்ந்தி ருந்தார்

காற்றைப் போலக் கரையை நோக்கிக்

கையிற் றுடுப்பை இருபுறம் வலிக்க

ஊற்றுக் கோலால் ஒருவன் உந்த

ஒருநா ழிகையில் அக்கரை சேர்ந்தது.

பரிசல் ஓட்டும் மூன்று பேரும்

பரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும்

கிருகிரு வென்றே ஆற்று வெள்ளம்

கிழக்கை நோக்கி இழுத்துப் போய்விடும்.


ஒருகால் அந்த வட்டப் பரிசலை

உருட்டிவிட்டுப் போகக் கூடும்

பரிசல் ஓட்டும் மூன்று பேரும்

பரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும்.


11.
கப்பல்

சிங்கப் பூரின் கப்பல்அது

சிட்டாய்ப் பறக்கும் கப்பல்

எங்கள் ஊரிலிருந்தேஅங்

கெட்டு நாளில் சேரும்

தங்கி யிருக்க அறையும்அதில்

சாப்பிட நல்ல அறையும்

அங்கும் இங்கும் சர்க்கரைமிக

அடுக்க இடமும் உண்டு.

கப்பல் ஓட்டும் அறிஞர்அவர்

கையாட்கள் பலர் உண்டு.

கப்பல் மேலே நின்றால்பெருங்

கடலின் அழகு தெரியும்.

எப்பக்கத்திலும் தண்ணீர்அதை

எடுத்துக் குலுக்கும் காற்றுத்

தப்புவ ழிச்செல்லாமல்அதைத்

தடுப்பது தான்திசை காட்டி.


12.
புகைவண்டி

இழுப்பி வண்டி இழுத்தோடும்

இருபது பெட்டிகள் இணைந்தோடும்

வழியில் ஓடும் மரவட்டை

மாதிரி ஓடும் புகைவிட்டே!

இழுப்பி வண்டியை ஓட்டுபவர்

இரண்டு மூன்று கையாட்கள்

விழிப்போ டிருக்கத் தான்வேண்டும்

இல்லா விட்டால் பழி நேரும்!

இணைந்த பெட்டி வண்டிகளில்

இருப்பார் அவர்பேர் கண்காணி

மணியோ டும்சரி வகையோடும்

வண்டி புறப்பட லாம்என்று

அணையாய்ப் பச்சைக் கொடி அசைப்பார்;

அழிவுக்குச் செங்கொடி அசைப்பார்

அணைந்து போகும் நல்வாழ்வே

அறிவும் விழிப்பும் குறைவானால்!

13. புகைவண்டி போனது

புகைவண்டி வரும்நேரம் ஆனதே!

பொட்டுவைக்க எனக்கு மறந்து போனதே!

நகை எங்கே எனப் பதைத்தாள்

நாராயணன் பெற்ற பெண்ணாள்!

தகதகஎன் றாடு கின்றாள்

சரிகைச் சேலை தடவுகின்றாள்.

முகத்தின் எதிரில் இருக்கும் பெட்டியை

முன்னறையில் தேடுகின்றாள்;

மிகமிகமிகப் பரபரப்பாய்

வேலைக்காரி யிடம் சொல்வாள்:

புகைவண்டி வரும் நேரம் ஆனதே!

பொட்டுவைக்க எனக்கு மறந்து போனதே!

கூசா எங்கே சீசா எங்கே?

குங்குமச் சிமிழ் போன தெங்கே?

தோசை எங்கே நேற்றிடித்த

தூளெங்கே தூக்கெங்கே?

மேசையிலே பணமெங்கே?

வெள்ளிப் பெட்டியிற் சீப்பெங்கே?

ஆசை வண்டி ஓசையுடன்

அடுத்த நிலையம் போன பின்பும்

புகைவண்டி வரும் நேரம் ஆனதே

பொட்டுவைக்க எனக்கு மறந்த போனதே!

14. வானூர்தி

வான ஊர்தி வான ஊர்தி

எங்கே போகின்றாய்?-நான்

வாடிக்கையாய்ப் போவதே

லங்கை மாநகர்.


பானை ஒன்று குறுக்கில் கண்டால்

என்ன செய்குவாய்?-“அட

பானை ஏது சட்டி ஏது

வான வெளியிலே!”


ஆனை ஒன்று குறுக்கில் வந்தால்

என்ன செய்குவாய்?-“அட

ஆனை ஏது பூனை ஏது

வான வெளியிலே!”


கானலுக்கே இளைப்பாற

எங்கே தங்குவாய்?-“நான்

போனவுடன் கீழிறங்கிப்

பொழுது போக்குவேன்.”


எத்தனைபேர் இருக்கின்றார்கள்

வானவூர்தியே?-“ஆம்

இருபதுபேர் இருக்கின்றார்கள்

என்வயிற்றிலே!”


மெத்தஉயரத் தேயிருந்து

விழிந்திடுவாயோ?-“என்

மேல் இருக்கும் பொறிகெட்டால்

விழுந்திடுவேனே!”

மொய்த்துப்புயல் வந்து விட்டால்

என்ன செய்குவாய்?-“அந்த

மொய்த்த புயல் தாண்டுவது

ஓட்டுவார் திறம்!”


15.
மின்னாற்றல்

மின்னாற்றல் ஆக்கும் நிலையம்அது

மிகமிகப் பெரியது பாராய்!

சின்ன பல கம்பிகள் வழியாய்அது

செலுத்திடும் மின்னாற்றல் ஒளியை!

என் வீட்டில் எரியும் விளக்கும்

என் ஊரில் எரியும் விளக்கும்

மின்னாற்ற லால்எரியும்!-அந்த

மின்னாற்றல் வராவிடில் அவியும்!

என்வீட்டில் ஒவ்வோர் விளக்கும்

எரிவது மின்னாற்ற லாலே!

என்வீட்டுச் சுவரிலோர் பெட்டி

இருக்கும்அப் பெட்டியில் முளைகள்

ஒன்றினைத் தாழ்த்தினால் எரியும்;

உடனே அழுத்தினால் அவியும்!

முன்விளக் கின்வசதி குறைவே

மின்விளக் கின்வசதி மிகுதி!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்-இளைஞர் இலக்கியம் Copyright © by புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book