"

1. மின்விளக்கு நின்றது

சாப்பிடும் போது விளக்கு நின்றது

சட்டிப் பொரியலைப் பூனை தின்றது

கூப்பிடக்கேட்ட அம்மாவ ரும்போது

கொம்பினில் மோதக் காதுகி ழிந்தது

காப்பைக் கழற்றினான் ஐயோ என்று

கதறினான் தம்பி தெருவில் நின்று

கோப்பை உடைந்தது பானை உருண்டது

கொட்டாப் புளிஎலி மேலேபு ரண்டது!

அறைவிட்டு வந்த அப்பாவின் பல்லை

அக்கா தலைஉடைத் திட்டது தொல்லை

குறைநீக்க வந்த என் கூனிப் பாட்டி

குந்தாணி மேல்உருண் டாள்தலை மாட்டி

உறைவிட்டு நீங்கிய கத்தியைப் போலே

ஒளிமின்விளக்குமுன் போல்வந்த தாலே

நிறைவீட்டில் எல்லார்மு கத்திலும் மகிழ்ச்சி

நிறைந்தது நிறைந்தது பறந்ததே இகழ்ச்சி.


2.
நெருப்புக்குச்சிப் பெட்டி

நெருப்புக் குச்சிப் பெட்டிஅதில்

நெருப்புக் குச்சியைத் தட்டி

இருக்கும்விழல் தட்டிமேல்

எறிந்தான் ஒரு மட்டி!

இருக்கும் விழல்தட்டிபற்றி

எரிந்தனால் தொட்டி!

இரட்டைப்பூனைக் குட்டிஎல்லாம்

எரிய என்ன அட்டி?


3.
சிரித்த பொம்மைகள்

அம்மா முறுக்குச் சுடும் போதே

அழகன் ஒன்றைத் தெரியாமல்

கைமேல்வைத்து மறைவினில்

கடித் திருந்தான் அறையினிலே.

சும்மா இருந்த அவன் அக்கா

சுட்டதில் ஒன்றை மிகு சுருக்கா

கைம்மேல் வைத்தே எடுத்தோடி

அதேஅறை புகுந்தாள் இடந்தேடி!

சொல்லா தேஎன்றான் அழகன்

சொல்லா தேஎன்றாள் அக்கா,

தில்லு முல்லுக் காரர்கள்

தின்று முடித்து விட்டவுடன்

எல்லா முறுக்கை யும்சுட்டே

எடுத்து வந்தம் மா வைத்தார்

கொல்லென்று சிரித்தனர் இருபொம்மை

கொட்ட மறிந்தார் அவர் அம்மா!


4.
பெருமாள் மாடு

தவிடா வேண்டும்?

புரும் புரும் புரும்

தலை அசைத்தது பெருமாள் மாடுஅவலா வேண்டும்?

புரும் புரும் புரும்

தலையை அசைத்தது பெருமாள் மாடுசுவரா வேண்டும்?

புரும் புரும் புரும்

தலையை அசைத்தது பெருமாள் மாடுதுவரை வேண்டுமா?

புரும் புரும் புரும்

தலையை அசைத்தது பெருமாள் மாடுசல்லி வேண்டுமா?

புரும் புரும் புரும்

தலையை அசைத்தது பெருமாள் மாடுவெல்லம் வேண்டுமா?

புரும் புரும் புரும்

தலையை அசைத்தது பெருமாள் மாடுபுல்லா வேண்டுமா?

புரும் புரும் புரும்

தலையை அசைத்தது பெருமாள் மாடுபல்லாக்கு வேண்டுமா?

புரும் புரும் புரும்

தலையை அசைத்தது பெருமாள் மாடுமாப்பிளை போலப்

புதிய வேட்டி கேட்பாயா நீ?

புரும் புரும் புரும் புரும்

கீழே குனிந்தது பெருமாள் மாடுசோப்ப ளாங்கியா?

புரும்புரும் புரும் புரும்

துரத்தி வந்தது பெருமாள் மாடுபாப்பா போட்டுக்

கிழித்த சட்டை கேட்பாயா நீ?

புரும் புரும் புரும் புரும்

தலையை அசைத்தது பெருமாள் மாடு!


5.
குடுகுடுப்பைக்காரன்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு!

நல்ல காலம் பிறக்கும் குடுகுடு

எல்லா நலமும் ஏற்படும் குடுகுடு

பொல்லாங் கெல்லாம் போனது குடுகுடு

தொல்லை கொடுத்தவர் தொலைந்தார் குடுகுடு!

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு!

காணி விளைச்சல் காணும் குடுகுடு

தோணியில் சரக்கு துறையில் குடுகுடு

மாணிக்கம் போல் வாழ்வீர் குடுகுடு

நாணித் தொலைவர் எதிரிகள் குடுகுடு!

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு!

கிழிந்த சட்டை கொடுபபீர் குடுகுடு

குழந்தை பிறக்கும் குண்டாய்க் குடுகுடு

பழஞ்சிற் றாடை போடுவீர் குடுகுடு

தழைந்து தழைந்து வாழ்வீர் குடுகுடு

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்-இளைஞர் இலக்கியம் Copyright © by புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book