"

1. சிறுகதைப் பாட்டு

பால்கறந்தான் முத்தன் அந்தப்

பாலை அங்கே வைத்தான்

மூலையிலே தானே ஒரு

முழுத்திருட்டுப் பூனை

பாலையெல்லாம் நெட்டிஅந்தப்

பாற்செம்பை உருட்டிக்

கோலெடுத்த கைம்மேல்அது

குதித்தேறிடும் சுவர்மேல்.


2.
காக்கை எறும்பு

எருமைக் கொம்பில் ஒருகாக்கா

ஏறிக் கொண்டதாம்

எறும்பை அது கூவிப் பெருமை

காட்டிச் சிரித்ததாம்.

எருமைக் காதில் அந்த எறும்பு

புகுந்து கொண்டதாம்

எருமை காது வலியால் தன்

தலையை அசைத்ததாம்.

இருந்த காக்கா விரைவாகப்

பறந்து விட்டதாம்

எறும்பதனைக் கண்டு விழுந்து

விழுந்து சிரித்ததாம்.

பெருமை பேசித் திரிந்திடுவார்

அது சரியில்லை

பின்னால் சிறுமை யடையக்கூடும்

அதுபெருந் தொல்லை.


3.
ஏழ்மை

தென்னந் தோப்புக் குள்ளேஅதில்

சிறிய குடிசைக் குள்ளே

ஒன்றல் லஇரண் டல்லமிக

ஒழுங்காய் ஏழு பிள்ளை.

அன்னை யோநோ யாளிநல்

அப்பன் தொழி லாளி;

இன்றைக் கெல்லாம் தொல்லைஅவர்

எவரும் சாப்பிட வில்லை.

வேலை கிடைக்க வில்லைதம்

வீட்டில் அரிசியும் இல்லை;

பாலுக் கழும்ஓர் பிள்ளைநல்ல

பருக்கைக் கழும் ஓர் பிள்ளை.

ஓலைக் குடிசையில் எங்கும்வாய்

ஓயா அழுகை பொங்கும்;

காலை கிடைத்தது வேலைபின்

கண்டார் கூழை மாலை.

4. நல்ல பாட்டி

சின்னஞ் சிறிய தங்கை

தெருவில் போன நுங்கை

அன்னையிடம் கேட்டாள்

அன்னை மறுத்துத் தீர்த்தாள்.

சின்னஞ் சிறிய தங்கை

தெருவில் ஓடி நுங்கை

என்னிடத்தில் வாவா

என்று கூவி அழைத்தாள்.

எட்டிச் சென்ற பாட்டி

கிட்டச் சுமந்து வந்தார்

பொட்டும் வேண்டாம் நுங்கே

போபோ என்றாள் தங்கை.

எட்டச் சென்ற என்னை

இதற்கா அழைத்தாய் என்று

கொட்டிக் கொண்டே போனார்

குலுங்கும் சிரிப்பைப் பாட்டி!

5. குரங்காட்டி

கோலை வைத்துக் குதிரை ஏறும் குருங்குநல்ல

குல்லாப் போட்டு வில்லாய் வளையும் குரங்கு

தாலி கட்டிய பெண்ணாய் வரும் குரங்குதன்

தலை கீழாய் மேல் சுழலும் குரங்கு

நீலச் சட்டை போட்டு வரும் குரங்குஅது

நிறையக் காசு கேட்டு வரும் குரங்கு

சோலிவிட்டுக் குந்திவிடும் குரங்குஅவன்

கோல்எடுத்தால் பின்னும் ஆடும் குரங்கு!


6.
பாம்பாட்டி

பட்டுச் சட்டைக் காரன்ஒரு

பாம்பாட்டி வந்தான்

பெட்டியைத் திறந்தான்அவன்

பெரிய மகுடி எடுத்தான்

பட்டி மாட்டுத் தாம்புதன்

படமெடுத்தது பாம்பு;

எட்டுக்காசு கொடுத்தேன்பாம்பைப்

பெட்டிக்குள்ளே அடைத்தான்.

7. நைவன நணுகேல்

கண்ணன் திண்ணன் என்றே

அண்ணன் தம்பி இருவர்!

திண்ணன் ஏணி ஏறிச்

சின்னப் பரணில் உள்ள

உண்ணும் பண்டம் எடுத்தே

உண்டு வேலை முடித்தே

எண்ணிக் கீழே இறங்க

ஏணி பார்த்தான் இல்லை.

திண்ணன்மனம் நலிந்தான்;

அண்ணன் அங்கே ஒளிந்தான்.

திண்ணன் அண்ணே என்றான்.

கண்ணன் மறைந்து நின்றான்.

கண்ணெதிர் வந்தார் அம்மா

திண்ணன் அழுதான் சும்மா.

அண்ணன் கண்டு சிரித்தான்

அம்மா கண்டு முறைத்தார்.


8.
பூதம்

பூதம் பூதம் பூதம்அதோ

போவது பார் பூதம்

பூதம் என்றால் பூதம்அது

புதுமையான பூதம்

காத மிருந்து வந்தார்அவர்

கையாற் செய்த பூதம்

தோது பட்ட கொம்பைக்கொண்டு

தொகுத்துக் கட்டிய தொம்பை.

மாடிக் குமேல் உயரம்அது

மலை யைவிட உப்பல்

ஆடி வரும் பூதம்உள்

ஆளிருப்ப தாலே

ஓடி வரும் பூதம்ஆள்

உள் இருப்பதாலே

வேடிக்கையாய் நடக்கும்அது

வேறொருவன் காலால்.

கோழி முட்டைக் கண்கள்பெருங்

குந்தாணிபோல் கழுத்தே

ஏழுமுழம் கைகள்ஓர்

எருமுட்டை போல் காது

கூழைமட்டை மூக்குநீள்

கொல்லூறுபோல் நாக்கு

போழ்தெலாம் இவற்றால்இங்கு

பூச்சி காட்டும் பூதம்.

கூடாய்ச் செய்த பூதம்அந்தக்

கூட்டிற் புகுந்த ஒருவன்

மாடாய்ச் சுமக்கும் பூதம்அவன்

வந்தால் வரும் பூதம்.

ஆட ஆடும் பூதம்அவன்

ஆட்டி வைக்கும் பூதம்.

சோடித்த ஓர் மொம்மைவந்து

தொடுவ துண்டா நம்மை!


9.
கெட்ட பொன்னன்

ஆட்டி விட்ட ஏணையில்

அழகுக் குழந்தை தூங்கையில்

பாட்டுப் பாடிக் கதவையே

படபட என்று குலுக்கினான்.

போட்டு டைத்தான் பெட்டியை

பொத்த லிட்டான் சட்டியை.

நீட்டுக்கழ் தூக்கியே

நின்றடித்தான் தகரத்தை.

ஆட்டி விட்ட ஏணையில்

அழகுக் குழந்தை அலறியே

நீட்டி நீட்டி அழுததே

நிறையக் கண்ணீர் வடித்ததே.

கேட்டு வந்தார் அம்மாவும்

கிளம்பி வந்தார் அப்பாவும்

போட்ட ஓசை யார் என்றார்

பொன்ன னைத்தான் சீ என்றார்.


வாழ்க!

தமிழ் மொழி வாழ்க!

தமிழர் வாழ்க!

நமது தாய் நாடு

நற்றமிழ் நாடு!

தமிழரின் கலைகள்

தமிழர்நா கரிகம்

தமிழர் பண்பாடு

தழைந்துவா ழியவே!

** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்-இளைஞர் இலக்கியம் Copyright © by புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book