"

1. குயவர்

தரையோடு தரையாய்ச்

சுழலும் உருளை!

அதிலே குயவர்

செய்வார் பொருளை!

கரகர வென்று

சுழலும் அதன்மேல்

களிமண் வைத்துப்

பிடிப்பார் விரலால்!

விரைவில் சட்டி

பானைகள் முடியும்;

விளக்கும் உழக்கும்

தொட்டியும் முடியும்!

சுருக்காய்ச் செய்த

பானை சட்டி

சூளை போட்டுச்

செய்வார் கெட்டி!

உரித்த மாம்பழத்

தோலைப் போலே

உருக்கள் மண்ணாற்

செய்யும் வேலை

இருக்கும் வேலை

எதிலும் பெரிதே!

இப்படிச் செய்தல்

எவர்க்கும் அரிதே!

சிரிப்ப துண்டு

மண் பாண்டத்தைச்

சிறுமை என்று

நினைப்ப துண்டு!

பெருத்த நன்மை

மண்பாண்டத்தால்

சமையல் செய்து

சாப்பிடு வதனால்!

2. தட்டார்

தோடி இழைப்பார் தட்டார்புதுத்

தொங்கல் செய்வார் தட்டார்;

ஆடி அசைக்கும் கைக்குநல்ல

அழகு வளையல் செய்வார்;

போடப் போட ஆசைதரும்

புதிய சங்கிலி செய்வார்;

ஓடைத்தா மரைபோல்தலை

உச்சி வில்லை செய்வார்!

தங்க நகை செய்வார்அவர்

வெள்ளி நகை செய்வார்;

வங்கி நல்ல மாலைகெம்பு

வயிரம் வைத்துச் செய்வார்.

எங்கள் ஒட்டி யாணம்அதை

இன்னும் திருத்த வேணும்;

எங்கும் புகழப் பட்டார்நல்ல

இழைப்பு வேலைத் தட்டார்.


3.
கொத்தனார்

கடைக்கால் எடுத்துக் கல்லை அடுக்கி

இடையிடைச் சேற்றை இட்டுப் பரப்பி

நொடியில் லாமல் நூலைப் பிடித்து

மடிவில்லாமல் மட்டம் பார்த்துத்

தரையில் தொடங்கினார் சுவரை முன்பு

பெரிய தாக வளர்ந்தது பின்பு!

தெருவில் வீடுகள் கொத்தனார வேலை

தெருவும் ஊரும் கொத்தனார் வேலை!

4. கருமார்

கடமட என்று பட்டறை அதிரக்

கருமார் வேலை செய்வார்

குடமும் குண்டானும் குண்டும் கெண்டியும்

கூசா தவலை செய்வார்;

நெடுவடி தட்டும் நிறமாய்ச் செம்பும்

நீண்ட விளக்கம் செய்வார்

ஒடியாச் செம்பால் பித்தளை யாலே

உயர்ந்த பொருள்கள் செய்வார்!

5. தச்சர்

மரத்தைச் செற்றுவார்

மரத்தை அறுப்பார்

மரத்தில் பெட்டி செய்வார்.

சரத்தைச் செய்வார்

சன்னல் செய்வார்

சாய்வுநாற் காலியும் செய்வார்!

அரத்தை எடுப்பார்

வாள் அராவுவார்

அலகைத் தீட்டி முடிப்பார்.


துரப்ப ணத்தைச்

சுழற்றிப் பார்பார்

தூக்கி மரத்தைத் துளைப்பார்!

பாரும் செய்வார்

படியும் செய்வார்

தேரும் செய்வார் தச்சர்;

ஏரும் செய்வார்

ஏற்றம் செய்வார்

யாரும் விரும்பும் தச்சர்!

ஊருக் கெல்லாம்

உலகுக் கெல்லாம்

உயிராகிய தொழில் தச்சு;

சீருக் கெல்லாம்

சிறப்புக்கெல்லாம்

செம்மையில் உரியவர் தச்சர்!

6. கொல்லர்

நிலத்தை வெட்டி எடுப்பார்அதில்

நிறைய இரும்புத் தூளே

கலந்திருக்கும் அதையேபின்

காய்ச்சிக் காய்ச்சி வார்ப்பார்!

வலுத்த கம்பி வார்ப்பார்அதில்

வலுத்த தகடும் வார்ப்பார்

மெலுக்கு வளையம் வார்ப்பார்மிகு

மிடுக்கு வளையம் வார்ப்பார்!

ஆணி வகைகள் செய்வார்அதில்

அரங்கள் எல்லாம் செய்வார்

ஏணி வகைகள் செய்வார்அதில்

ஏரின் முனையும் செய்வார்!

தோணி தூக்கும் கருவிகப்பல்

தூக்கும் கருவி செய்வார்

வாணல் சட்டி வண்டிபெரு

வான ஊர்தி செய்வார்!

இரும்பே இல்லா விட்டால்இங்

கென்ன வேலை நடக்கும்?

கரும்பு வெட்டும் கொடுவாள்பெருங்

காடு வெட்டும் கத்தி;

திரும்பு கின்ற பக்கம்எங்கும்

தெரியும் பொருள்கள் எல்லாம்

இரும்பு கொண்ட பொருள்கள்அவை

விரும்பத் தக்க பொருள்கள்!

இரும்பு வேலை செய்வோர்அவர்

எல்லாம் கொல்லர்ஆவார்

இருந்து வேலை செய்யும்அவர்

இடமே உலைக்கூடம்

திருந்திய தென் றால்ஊர்அவர்

செய்த தொண்டா லேதான்!

வருந்தித் தொழில் செய்வார்அவர்

வாழ்க வாழ்க வாழ்க!

7. இலை தைத்தல்

வேலை யில்லா நேரம்

வீட்டில் உள்ளோர் யாரும்

ஆலிலையைத் தைப்பார்

அதைக் கடையில் விற்பார்!

மூலை யிலே குந்தி

இருப்பவ ளோர் மந்தி வேலை

செய்யும் பெண்கள்

வீட்டின் இரு கண்கள்!

8. கூடை முறம் கட்டுகின்ற குறத்த

கூடே மொறே கட்டிலியே என்று

குளறிக் கொண்டு வருவாள்அந்தக்

குறத்தி யிடம் கூடை முறம்

கொடுத்துக் கட்டச் சொல்வோம்.

கூடை களில் மூங்கிற் கூடை

கசங்கு, பிரப்பங் கூடைஅவை

கூட்டு விட்டால் கட்டு விட்டால்

கொடுத்துத் திருத்தச் சொல்வோம்.

மாடு தவிடு தின்னுங் கூடை

மற்ற இறை கூடை

மாவு சலிக்கும் சல்லடைகள்

வட்டத் தட்டும் உண்டு.

பாடு பட்டு வாங்கி வைத்த

கூடை முறம் எல்லாம்

பாணி கெடா திருக்க வேண்டும்

சாணி மெழுக வேண்டும்.

9. குடை பழுது பார்ப்பவர்

மழைக்கும் குடை வேண்டும்நல்ல

வெய்யி லுக்கும் வேண்டும்குடை

ஒழுக்கிருந்தால் உடைந்தி ருந்தால்

என்ன செய்ய வேண்டும்?

அழைக்க வேண்டும் உடனேகுடை

பழுது பார்க்கும் அவரை,

கிழிந்த துணியை மாற்றா விட்டால்

கேட்பது தான் எவரை?

கிழிந்த துணியைப் புதுக்குகம்பிக்

கீல் உடைந்தால் பொருத்து.

வழியில் போவார் கூவிக் கொண்டே

வரவழைத்துத் திருத்து.

கழி உடைந்தால் மாற்றுதடி

கழன் றிருந்தால் மாட்டு.

பழுதில் லாமல் அழுக்கில் லாமல்

அதை நீகாப் பாற்று.

10. சாணை பிடிக்கவில்லையா?

சாணை பிடிக்க வில்லையா?

சாணை பிடிக்க வில்லையா?

சரசர என்று பொரி பறக்கச்

சாணை பிடிக்க வில்லையா?

வீணாய்க் கிடக்க விடுவதா?

வீணாய்க் கிடக்க விடுவதா?

வீர வாளும் கூர் மழுங்கி

வீணாய்க் கிடக்க விடுவதா?

ஆணி கெட்டுப் போனதா?

அரிய முடிய வில்லையா?

அரியும் கத்தி அரிவாள் மணை

ஆணி கெட்டுப் போனதா?

ஏணி வைத்த சாணைக்கல்

எடுத்துக் கொண்டு போகின்றார்

இட்டுக் கொண்டு வந்து நீங்கள்

சாணை பிடிக்க வில்லையா?

11. பெட்டி பூட்டுச் சாவி

பூட்டுக்குச் சாவி போட வில்லையா?

வீட்டுக்குப் பூட்டுத் தைக்க வில்லையா?

கேட்டுக் கொண்டே போகின்றார் இப்படியே!

நாட்டுக்கு நல்லஓர் பாட்டாளி அவர்!

கதவின் பூட்டைக் கழற்றிப் பார்த்தார்;

அதை அராவிப் பழுது பார்த்தார்

புதிய சாவி காணாமற் போனதால்

அதற்கும் ஒன்று செய்து கொடுத்தார்.

நாலு பணம் வேண்டும் கூலி என்றார்

நாலு பணம் இந்தா கூலி என்றோம்

வேலை முடிந்ததும் பெட்டி எடுத்தார்

மேலும் அப்படியே கூவி நடந்தார்.


12.
வடை தோசை

அண்டை வீட்டு நடையில்

அழகாய்ச் சுட்ட வடையில்

துண்டாய் இரண்டு வாங்கித்

தோசை நாலு வாங்கிக்

குன்டா னுக்குள் வைத்துக்

கொடுப்பேன் காசை எடுத்து

அண்டை வீட்டார் உதவி

அடடா! மிகவும் பெரிது!


13.
எண்ணெய்

எள்ளை நன்றாய்க் கழுவி

எடுத்து வெயிலில் துழவி

அள்ளிப் புடைத்துச் செக்கில்

ஆட்டி எண்ணெய் எடுப்பார்

தெள்ளத் தெளிந்த எண்ணெய்க்கே

சேர்ந்த திப்பி பிண்ணாக்கே

உள்ள எண்ணெய் வீட்டுக்கு!

பிண்ணாக் கெல்லாம் மாட்டுக்கு!


14.
அப்பளம்

சப்பளம் போட்டுக் குந்தி அம்மா

அப்பளம் போட்டார் சும்மா சும்மா,

கொப்பளம் காணப் பொரித தெடுத்தார்

கொம்மாளம் போட்டுத் தின்னக் கொடுத்தார்

ஒப்பனை யாக உளுத்த மாவை

உருட்டி உருட்டி வைப்பது தேவை

அப்பள மணையில் எண்ணெய் தடவி

அதில் உருட்ட உருளும் குழவி!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்-இளைஞர் இலக்கியம் Copyright © by புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book