6
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்சொல்லியிருக்கும் அறிக்கைகள் எல்லாம் சிறுபான்மை இனத்தவர் மீது மாத்திரமே செல்லுபடியாகும். சிறுபான்மை இனத்தவர் மீதே பிரயோகிக்கப்படும். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே தண்டனைக்குள்ளாவர். சிறுபான்மை இனத்தவர் மாத்திரமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவர். கடத்தப்படுவர். கைது செய்யப்படுவர். காணாமல் போவர்.
முன்னர் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை அடித்துப் போட்டால் கூட கேட்பதற்கு ஆளில்லை என்ற கருத்தும், நிலைப்பாடும் பேரினவாத தலைமைகளிடம் இருந்தது. இதனால் எல்லாக் கொடுமைகளுக்கும், வன்முறைகளுக்கும், அழிவுகளுக்கும் அவர்களை ஆளாக்கினர். ஆனால், அண்மைய வன்முறைகளின் போது, தான் தனது நாட்டு ஊடகங்களை மௌனிக்கச் செய்த பின்னரும் கூட, சமூக வலைத்தளங்கள் மூலம் வன்முறைச் செய்திகள் உலகம் முழுவதும் பரவி, சர்வதேச அழுத்தங்கள் கிளம்பி, ஜனாதிபதியைக் கலவரத்துக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கை யுத்தத்தை வென்ற இறுமாப்பில், வெற்றிக் களிப்போடு எல்லா நாடுகளாலும் நோக்கப்படும் ஜனாதிபதி மீதும், இலங்கை மீதும் சர்வதேச சமூகத்தின் பார்வைகள் இக் கலவரங்கள் மூலமாக மீண்டும் திரும்பியுள்ளன.
இந் நிலையில் உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று, அந் நாட்டுத் தலைவர்களை சந்தித்து, ஞாபகார்த்த மரங்களை நட்டு, கௌரவங்களைப் பெற்று வரும் ஜனாதிபதியை, அந் நாட்டுத் தலைமைகள் அழைத்து வன்முறைகள் தொடர்பில் தீவிரமாக விசாரிக்கும்போது என்றுமில்லாதவாறு வெட்கத்துக்குள்ளாகிறார். தனது குட்டுக்கள் வெளிப்பட்டுவிட்டனவே என சங்கடத்துக்குள்ளாகிறார். அவர் எவ்வாறும் போகட்டும்.
கலவரத்தில் மாண்ட உயிர்கள் மீண்டு வராது. திரும்ப மீளக் கட்டியெழுப்ப முடியாத சேதங்கள். சூன்யமாகிப் போன வாழ்க்கைகள். எல்லோரையுமே அச்சத்தோடும், சந்தேகத்தோடும் பார்க்கப் போகும் பார்வைகள். ஒரு ஜனநாயக நாட்டில், இனியும் சிறுபான்மை இன மக்கள் இப்படித்தான் துயரத்தோடு வாழப் போகிறார்கள். வாழ்க்கையும், இருப்பிடங்களும், தமக்குரிய மத வழிபாட்டுத் தலங்களும் என எதுவுமே நிரந்தரமற்று, அவர்களை அல்லலுறச் செய்யப் போகிறது.
இலங்கை நிலவரம் இவ்வாறிருக்கையில், 16.06.2014 கலவர தினமன்று ஜனாதிபதியை பொலிவியா நாட்டுக்கு அழைத்து, இராணுவ மரியாதையோடு ஒரு விருதையும் வழங்கியிருக்கிறார்கள். அது ‘இலங்கையில் சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்காக வழங்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் பொலிவிய நாட்டின் அதியுயர் கௌரவ விருது !’