10

நான் படம் பிடித்த இரண்டாவது பறவை தேன் சிட்டு.

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் “கீ வூ…கிக்வூ…கிக்வூ…” என்று கத்தியபடி பறந்த நிலையிலேயே செம்பருத்திப் பூவில் தேன் குடித்திட வரும் ஒரு சிறு பறவையைப் பார்த்திருப்பீர்கள் அதுதான் தேன் சிட்டு. ஒரே இடத்திலேயோ, முன்னும் பின்னுமோ பறந்திடும் சக்தி கொண்டது இப்பறவை. இதை அமெரிக்காவின் ஹம்மிங்க் பேர்டின் சொந்தக் காரன் எனலாம்.

# 1 தேன் சிட்டு பெண் பறவை (படம் – சுதீர் ஷிவ்ராம்)

# 2 பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் – ஆண் பறவை (படம் – சுதீர் ஷிவ்ராம்)

இந்தப் பறவை நம் தோட்டங்களில் உள்ள செடிகளில் இருந்து தொங்கிடும் கூடு ஒன்றை அமைத்து, அதில் நான்கு முட்டைகள் இட்டு, அடை காத்துக் குஞ்சு பொரிக்கும். கூடு காய்ந்த இலை, சரகு, மெல்லிய குச்சிகள், பேபர் துண்டுகள், தட்டு போன்ற எட்டுக் கால் பூச்சியின் முட்ட்டைகளின் பைத் தோல் இவற்றை ஒட்டடை, சிலந்தி வலை இவற்றால் ஒட்டித் தயார் செய்திடும்.

கூடு கட்டும் போது பெண் பறவை கூட்டிற்குத் தேவையான பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து கூட்டைத் தயார் செய்யும். ஆண் பறவை தானும் கஷ்டப் பட்டு வேலை செய்வது போலக் கூடக் கூடப் பறந்திடும்.

(கீழ்வரும் அனைத்து கருப்பு வெள்ளைப் படங்களும்: நடராஜன் கல்பட்டு)

# 3 தேன் சிட்டு பெண் பறவை

# 4 தேன் சிட்டு ஆண் பறவை

பறவைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றின் உணவும் ஒரு விதம். தேன், தானியம், பழம், கொட்டைகள், தேனீ, புழு பூச்சிகள், பல்லி, ஓணான், எலி, பாம்பு, இறந்த மிருகங்களின் இறைச்சி, ஏன் மனிதனின் மலம் கூட பறவைகளின் உணவு. ஆனால் எல்லாப் பறவைகளுமே தங்கள் குஞ்சுகளுக்கு மாமிச பதார்த்தங்களையே உணவாக அளிக்கும். காரணம் என்ன தெரியுமா? குஞ்சுகள் குறைந்த கால அவகாசத்தில் வளர்ந்து பறக்கும் திறமையை அடைய வேண்டும். அதற்குப் புரதச் சத்து (protein) அதிகமுள்ள உணவு தேவை.

தேன் சிட்டு கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கு சிறிது நேரம் உணவளித்த பின் தாய்ப் பறவை தங்களுக்கே தெரிந்த மொழியில், “நீ இவ்வளவு நேரம் உணவு உட்கொண்டுவிட்டாய். இனி மலம் கழிக்க வெண்டும்”, என்று சொல்லும். குஞ்சும் திரும்பிக் கொண்டு மலம் கழிக்கும். அவ்வாறு வெளியேற்றப் படும் மலத்தினை தாய்ப் பறவை அலகில் கொத்திக் கொண்டு வெகுதூரம் எடுத்துச் சென்று எறிந்துவிடும். மலமும் கூட்டிலோ அல்லது தாயின் அலகிலோ ஒட்டிக் கொள்ளாத வகையில் ஒரு மெல்லிய தோல் பொன்ற வஸ்துவால் மூடி இருக்கும். மலப் பை (fecal sac) என்று அதற்குப் பெயர். இவ்வாறு மலம் கூட்டில் படாமல் வெளியேற்றப் படுவதற்கு கூட்டின் சுத்தம் (nest hygiene) என்று சொல்வார்கள்.
இதற்கு நேர் எதிர் புறாக்கள். குஞ்சுகள் கூட்டிலேயே மலம் கழிக்கும். ஆனால் கூடு இடைவளி அதிகம் கொண்டு குச்சிகளால் கட்டப் பட்டு இருக்குமாதலால் மலம் வெளியே விழுந்து விடும்.

# 5

(மலம் கூட்டினுள் விழுமுன் வெளியேற்றப் படுகிறது)

‏தேன் சிட்டில் இரு வகைகளைக் காணலாம். ஒன்று பர்பிள் ரம்ப்ட் சன்பேர்ட். மற்றொன்று பர்பிள் சன்பேர்ட். முன்னதை நம் தோட்டங்களில் காணலாம். பின்னதை சாதாரணமாக காடுகளில் காணலாம்.

தேன் சிட்டினை நான் படம் பிடித்த போது ‘பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட்’ அதிகம் கலவரப் படவில்லை. ஆனால் ‘பர்பிள் சன் பேர்டோ’ மிகுந்த கலவரப் பட்டு ஆத்திரத்தில் கேமராவையே தாக்கியது. அதை மற்றொரு கேமெரா மூலம் பதிவு செய்தேன். அந்தப் படம் இதோ:

# 6 “என்னிடம் அனுமதி பெறாமல் என்னையா படம் பிடிகிறாய் நீ?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புகைப்பட அனுபவங்கள் Copyright © 2015 by கல்பட்டு நடராஜன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book