“ஒரே ஒரு போட்டோவுக்கு எட்டு வாரம் ” என தினகரன் வசந்தத்தில் நடராஜன் கல்பட்டு அவர்கள் அளித்த பேட்டியை முன்னர் பகிர்ந்திருந்தோம். விரிவாக அந்த அனுபவத்தை விவரிக்கிறார் இதோ..
——————————————————————
ஆந்தைகளில் பல வகை உண்டு. நம் நாட்டிலேயே புள்ளி ஆந்தை, இந்திய பெரிய கொம்பு கொண்ட ஆந்தை, தானியக் கிடங்கு ஆந்தை, இமயத்து ஆந்தை, பழுப்பு மீன் பிடிக்கும் ஆந்தை, கோடு போட்ட ஆந்தை என்று ஆறு வகை ஆந்தைகள் உள்ளன.
ஆந்தைகள் இரவில் சஞ்சரிக்கும் பறவைகள். அவை தப்பித் தவறி பகல் நேரத்தில் வெளியே வந்து விட்டால் அவ்வளவுதான் காக்கைகளால் தாக்கப் பட்டு உயிரிழக்கும். அல்லது ஊடல் ஊனமடைந்து விடும்.
புள்ளி ஆந்தை மனித நடமாட்டம் உள்ள இடங்களில் கூட மரப் பொந்துகளிலும், கோவில்கள், இடிந்த கட்டிடங்கள் இவற்றிலும் வசிக்கும்.
(இந்திய பெரிய கொம்பு கொண்ட ஆந்தை)
கொம்பு கொண்ட ஆந்தை என்ற உடன் ஏதோ ஆடு மாடு போல கொம்பு இருக்கும் என்று எண்ண வேண்டாம். அதன் தலையில் உள்ள சில இறகுகள் சற்றே நீண்டு கொம்பு போல இருக்கும். அதனால் தான் அந்தப் பெயர்.
ஆந்தைக்கு பல விசேஷ்ங்கள் உண்டு.
1. அவற்றின் உணவு எலிகள். முழு எலியை விழுங்கி விட்டு சில மணி நேரங்களுக்குப் பின் வாயினால் ஒரு கோழி முட்டை வடிவிலான உருண்டையைக் கக்கும். அதைக் கையில் எடுத்து நசுக்கிப் பார்த்தால் முற்றிலும் சுத்தம் செய்யப்ப் பட்ட எலும்புகளும், மயிரும் இருக்கும். (உலகப் புகழ் பெற்ற ஜீரணி மருந்தான ஹ்யூலெட்ஸ் மிக்ஸ்சர் பாட்டிலின் விளம்பரப் படம் ஆந்தை!)
2. ஆந்தை பறக்கும் போது சத்தமே வராது. புறா, காடை, கௌதாரி போன்று பட பட வென்று சத்தம் வருமானால் எலிகள் எளிதாகத் தப்பித்து விடுமே! இது எப்படி முடிகிறது தெரியுமா? ஆந்தையின் இறக்கை சிறகுகள் மிக மிக மிக மிருதுவானவை. ஒரு முறை கையில் எடுத்துப் பார்த்தால் தான் தெரியும் அவை எவ்வளவு மிருதுவானவை என்று.
3. ஆந்தைக்கு இரவில் கண் மிகத் துல்லியமாகத் தெரியும். காரணம் அவற்றின் கண்களின் பாப்பா விரியும் போது முழுக் கரு விழியின் அளவுக்கு விரியும்.
4. இரவில் இரை தேட ஆந்தைகள் தங்களது சக்தி வாய்ந்த கேட்கும் திறனையும் கண் பார்வையையும் நம்புகின்றன.
ஆந்தைகளின் பிரதான உணவு எலிகள். ஆகவே தானியக் கிடங்குகள் அருகே அவற்றைப் பார்ப்பது ஒன்றும் அதிசயம் இல்லையே.
(பழுப்பு நிற மீன் பிடிக்கும் ஆந்தையும் கீழே அதன் குஞ்சும்..)
***
இந்திய பெரிய கொம்பு கொண்ட ஆந்தையைப் (பதிவின் இரண்டாவது படத்தில் இருக்கும் Indian Great Horned Owl) படம் பிடித்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று.
பங்களூரில் இருந்து ஒயிட்பீல்டுக்குப் போகும் பாதையில் அறுபதுகளில் கட்டிடங்கள் எதுவுமே கிடையாது. கரடு முரடான தரிசு நிலம் தான். அங்கு சுண்ணாம்புக் கற்கள் போன்ற ஒன்றினைத் தோண்டி எடுத்ததாலும், மழை நீர் அரிப்பினாலும் ஒரு சுமார் பதினைந்தடிப் ஆழம் கொண்ட ஒரு குட்டிப் பள்ளத்தாக்கு உண்டாகி இருந்தது. அதன் சுவற்றின் ஒரு பள்ளத்தில் ஜனவரி 1ம் தேதி ஒரு ஆந்தையின் கூட்டினையும் இரண்டு முட்டைக்ளையும் பார்த்தோம்.
மறு நாள் சென்று கூட்டருகே சுவற்றில் ஒரு மரக் கட்டை (சுமார் இரண்டடி நீட்டிக் கொண்டிடுக்கும் படியான பல துளைகள் கொண்ட கட்டை) ஒன்றினைச் சொருகினோம்.
அதற்கடுத்த வாரம் அந்தக் கட்டையில் கேமிரா அளவில் ஒரு சிறிய அட்டைப் பெட்டியைப் பொருத்தினோம். மூன்றாம் வாரம் அட்டைப் பெட்டிக்கு பதிலாக பள பளக்கும் தகர டப்பாவினைப் பொறுத்தினோம்.
நான்காவது வாரம் தகர டப்பாவிற்கு பதிலாக ஒரு சைகிளில் பொருத்திடும் பேட்டரி விளக்கினை வைத்து அதை எரிய விட்டு வந்தோம்.
ஐந்தாம் வாரம் பேட்டரி லைட்டின் அருகிலேயே கேமிராவும் ஃப்ளேஷ் லைட்டும் பொருத்தப் பட்டது. பள்ளத்தில் சுமார் இருபது அடி தூரத்தில் எங்களது சிறிய கூடாரம். கேமிராவில் பொருத்தப் பட்டுள்ள, தூரத்தில் இருந்து இயக்க உதவிடும் கருவியில் இருந்து ஒரு மெல்லிய ரப்பர் குழாய் கூடாரத்தினுள் இருப்பவரின் கையில் உள்ள ரப்பர் பந்தோடு இணைக்கப் பட்டது.
இப்படி இடைவெளி விட்டு விட்டு வேலை செய்யா விட்டால் ஆந்தை தன் கூட்டிற்குத் திரும்ப வராமலே இருந்து விடும்.
(இந்திய பெரிய கொம்பு ஆந்தை படமெடுக்க ஏற்பாடுகள் – ஏணியிம் மேல் உபேந்த்ரா. ஏணியைப் பிடித்துக் கொண்டிருப்பது எனது நண்பன் ஒருவன்.
வலது கீழ் மூலையில் கூடாரம்.)
இந்த வேலைகளுக் கெல்லாம் ஒரு சுமார் எட்டடி நீள ஏணி வேண்டி இருந்தது. ஆகவே எனது காரின் மேல் சனி ஞாயிறுகளில் ஒரு ஏணி கட்டி இருக்கும்.
படம் பிடிக்க ஒவ்வொருக்கும் ஒரு நாள் அவகாசம் கிடைக்கும். படம் பிடிக்கும் போது மூவருமாக சூரியன் மறையும் நேரம் கூடாரம் வரை சென்று விட்டுப் பின் இருவர் காருக்குத் திரும்பி விடுவோம். அப்படிச் செய்தால் தான் ஆந்தை தன் கூட்டிற்கு வரும். ஆந்தைகளுக்கு எண்ணத் தெரியாது என்பதால் அவை எமாந்து விடும் ஒரு வரும் கூடாரத்தில் இல்லை என்று நம்பி.
ஒரு ஆந்தை உயரமான ஒரு இடத்தில் உட்கார்ந்து, “பூ…புபோ…பூ…புபோ…” என்று கத்திக் கொண்டிருக்கும். (இவ்வாந்தையின் ஆங்கிலப் பெயர் ‘புபோ புபோ’) மற்றொரு ஆந்தை தான் தேடிப் பிடித்த எலியினை வாயில் கவ்விக் கொண்டு, “கீஷ்..கீஷ்..” என்று கத்தியபடி ஒவ்வொரு இடமாக உட்கார்ந்து மெல்ல கூட்டிற்கு வந்து எலியினைத் தன் குஞ்சிற்குக் கொடுக்கும். அப்போது படம் பிடிக வேண்டும்.
சூரியன் மறைந்ததும் அந்த இடத்தில் எலிகள், பாம்பு, தேள் இவை சகஜமாக நடமாடும். கூட்டம் கூட்டமாகக் கொசுக்கள் வந்து தாக்கும். கொசுக்களிடம் இருந்து தப்ப யூகலிப்டஸ் எண்ணையைத் தடவிக் கொள்ளுவோம். கண்களில் கண்ணீர் வந்து கொஞ்ச நஞ்சம் தெரிவதையும் மறைத்து விடும். (அந்த நாட்களில் ஓடோமாஸ் வரவில்லை.)
படம் எடுக்க ஆரம்பித்த மூன்றாவது ஞாயிறு எனது முறை. நான் அன்று கிளம்பு முன் எனது ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமிராவில் கருப்பு வெள்ளை ஃபிலிமும், எஸ்.எல்.ஆர். கேமிராவில் கலர் பிலிமும் போட்டு இரண்டையும் ஒரே ரப்ப்ர் குழாய்க்கு ஒரு ‘டி-.கனெக்ஷன்’ போட்டு இணைத்து கைப் பந்தை அழுத்தினால் வெண்ணை போலிருந்த ட்வின் லென்ஸ் கேமிராவின் ஷட்டர் இயங்கியது. எஸ்.எல்.ஆரின் ஷட்டர் இயயங்க வில்லை. எஸ்.எல்.ஆர். கேமிராவை வீட்டில் வைத்து விட்டு கிளம்பத் தயாரானேன்.
அப்போது என் மனைவி கேட்டாள், “உங்களிடம் இரண்டு கேமிராக்கள், இரண்டு இயக்கிகள், இரண்டு நீண்ட ரப்பர் குழாய்கள், இரண்டு பந்துகள் உள்ளன. உங்களுக்கோ இரண்டு கைகளும் உள்ளன. ஏன் ஒரே கையால் அவற்றை இயக்க நினைக்க வேண்டும்?” மீண்டும் என் சாமான்களைப் பையில் எடுத்துக் கொண்டேன். அன்று எனக்கு மிக நல்ல கலர் மற்றும் கருப்பு வெள்ளை படங்கள் கிடைத்தன.
பெரிய ஆந்தை இரண்டு குரல்களில் கத்துவது பற்றிச் சொன்னேன். அவற்றுக்கு ஒரு மூன்றாவது குரலும் உள்ளது. தப்பித் தவறி யாராவது அவற்றின் கண்களில் படும் படி கூட்டருகே சென்று விட்டால் அவை ஒரு பெண்ண்ணின் குரல்வளையை அழுத்திக் கொல்ல முயலும் போது அலறுவாளே அது போன்ற ஒரு ஒலியையும் எழுப்பிடும். அந்த சத்தம் கேட்பவரின் ரத்தத்தினை உறைய வைத்திடும். (blood curdling noise).
எனது நண்பர் ஒருவர் என் கூட ஒரு நாள் வந்திருந்தார். (படத்தில் ஏணியைப் பிடித்துக் கொண்டிருப்பவர்). அவர் தானும் கூட்டினைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி உபேந்த்ரா இறங்கியதும் ஏணியின் மீது ஏறினார். அப்போது கூட்டருகே ஆந்தை திரும்ப வந்திடவே அது ஒரு அலறல் சத்தம் எழுப்பியது. பயந்து போன நண்பர் ஏணியில் இருந்து எம்பிக் கீழே குதித்து ஓடினார். ஏணியைப் பிடித்துக் கொண்டிருந்த நான் அவர் அருகே சென்று அவர் இதயத் துடிப்பைப் பார்க்க எண்ணி என் கையை அவ்ர் மார்பின் மீது வைத்தேன். உடனே அவர், “நான் ஒன்றும் பயப்பட வில்லை. யாரோ கஷ்டத்தில் அலறுவது போலக் கேட்டது. ‘நான் இங்கிருக்கிறேன் உதவி செய்ய. வேண்டுமா உதவி?’ என்று கேட்டேன். அவ்வளவு தான்” என்று சொன்னார்!
மறு நாளும் போக வேண்டும் என்று தோன்றவே அவரைக் கேட்டேன், “நீ என் கூட வருகிறாயா?” என்று. அவர் சொன்ன பதில், “அப்பப்பா அந்தப் பக்கமே நான் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டேன்!”
மறக்க முடியுமா ஆந்தையைப் படம் பிடித்த அனுபவத்தை?
(படங்கள் அனைத்தும் எடுத்தது நடராஜன் கல்பட்டு)