16
பக்கி என்றொரு பறவை. இதன் ஆங்கிலப் பெயர் நைட் ஜார் என்பதாகும். இரவில் காதுக்கு நாராசமான “சச்….சர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று ஒலி (jarring sound) எழுப்புவதனால் இந்தப் பெயர் கொடுத்திருப்பார்களோ இதற்கு?
இந்தப் பறவையை பாதுகைக் குருவி என்று அழைப்பதும் உண்டு. காரணம் இது தரையில் உட்கார்ந்திருக்கும் போது கவிழ்த்துப் போட்ட பாதுகை, அதான் செருப்பு, போலக் காணப்படும்.
வாகனங்களில் நெடுஞ் சாலைகளில் பயணிக்கும் போது சில சமயம் சாலை ஓரங்களிலோ அல்லது தாழ்வான மரக் கிளைகளிலோ இரு மாணிக்கக் கற்கள் (இதை கெம்பு அல்லது சிவப்பு என்று சொல்வதும் உண்டு) ஜ்வலிப்பது போன்று தோன்றுவதைப் பார்த்திருப்பீர்கள். அவை நம் பக்கியின் கண்களே. பக்கி திடீரெனெப் பறந்து சாலையின் குறுக்கே செல்வதையும் பார்த்திருப்பீர்கள். அவை அவ்வாறு பறப்பது வாகனங்களின் விளக்கொளியில் துல்லியமாகத் தெரிந்திடும் பறக்கும் பூச்சிகளைப் பிடித்துத் தின்னதான்.
பறந்திடும் பூச்சிகளைப் பிடிக்கும் போது அவை தப்பி விடாமல் இருக்க பக்கியின் வாயின் இரு புறமும் வரிசையாக பல ‘மீசை’ மயிர்கள் இருக்கும்.
பகலில் பக்கிகள் மரக் கிளைகளிலோ அல்லது செடிகளின் அடியிலோ படுத்துரங்கும். அப்போது அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம். காரணங்கள் இரண்டு. ஒன்று அதன் நிறம் மரப் பட்டைக்ளோடும், தரையில் இருக்கும் சரகு, வேர், காய்ந்த புல் இவற்றோடும் ஒன்றி விடும். இரண்டாவது காரணம் அவை மரக் கிளைகளில் உட்காரும் போது மற்ற பறவைகளசிப் போல் குறுக்கு வாட்டத்தில் உட்காராமல் கிளை போகும் வாட்டத்திலேயே உட்காரும்.
கிளையின் நீள வாட்டத்தில் உறக்கம்.
(படம் நன்றி: இணையம்)
|
பக்கிகளின் மற்றொரு ஆங்கிலப் பெயர் ‘Goat sucker’ ஆட்டுப் பால் உறிஞ்சி. இப் பெயர் வரக் காரணம் இரவில் தொழுவங்களில் பறந்திடும் பூச்சிகளைப் பிடித்துத் தின்பதற்காக வந்திடும் பக்கிகளை அவை பாலை உறிஞ்சிக் குடிப்பதற்காக வந்துள்ளதாக மக்கள் எண்ணியது தான்.
சில மிருகங்கள் ஒத்துக் கொள்ளாத பருவ நிலையில் உணவு தேடி அலைந்திடாமல் நீண்ட உறக்கத்தில் ஈடு படுவது போல (Hibernation) அமெரிக்காவில் காணப்படும் பக்கிகள் பல வாரங்கள் பாறை இடுக்குகளில் படுத்துறங்கும். பறவை இனத்தில் ஆழ் உறக்கத்தில் ஈடுபடும் ஒரே பிராணி பக்கிதான்.
பக்கி தன் முட்டையையும் குஞ்சையும் அவற்றின் மீது படுத்துறங்கிக் காத்திடும்.
முட்டையைக் காத்திடும் பக்கி
படம்: கல்பட்டு நடராஜன்
|
குஞ்சின் மீது படுத்துறங்கும் பக்கி
படம்: கல்பட்டு நடராஜன்
|
குஞ்சின் மீது படுத்திருக்கும் போது அதன் கண்கள் மூடி இருக்குமே ஒழிய அவை முற்றிலுமாக நித்திரையில் ஆழ்ந்து விடுவதில்லை.
ஒரு முறை பக்கி படுத்திருந்த இடத்தை நெருங்கிய போது, குஞ்சு தன் சிறகினை அடித்துத் தாய்ப் பறவையை எழுப்பியது. தாயோ, “சும்மாக் கிட. அவுங்களாலெ நம்மெக் கண்டு பிடிக்க முடியாது” என்பது போல இருந்த்து. அவ்வளவு நம்பிக்கை தன் மாய்மாலத்தின் மீது!
அப்போது என் காலடியில் இருந்து ஒரு கல் நகர்ந்து கூட்டை நெருங்க, திடீரெனப் பறந்தது அது.
கூடு என நான் சொன்ன போது அது எதோ பிரமாதமாகத் தயார் செய்திருக்கும் என்று நினைக்காதீர்கள். சிறு கற்களிடையே முட்டையினை (ஒன்றோ இரண்டோ) இட்டிடும். அவ்வளவே. தன் முட்டைக்கோ குஞ்சுக்கோ ஆபத்து என்று தோன்றினால் அவற்றைத் தன் அலகினால் வேறு இடத்திற்கு அப்புறப் படுத்தி விடும். இந்த சாமர்த்தியம் இருக்கும் போது தனியாக சொந்த வீடு எதற்கு பக்கிக்கு?
***