17

1970_ல் ஹைதராபாதில் புகைப் படக் கலையில் ஆர்வம் உள்ள ஒரு வக்கீல் நண்பருடன் வாரங்கல் சாலையில் சென்று கொண்டிருந்தேன்.

எனக்கு எப்போதுமெ ஒரு பழக்கம் வாகனத்தில் பயணிக்கும் போது எனது கவனம் சாலையில் மட்டும் இராது.  சாலையிலும் அதன் இரு புறங்களிலும் பறந்திடும் பறவைகளையும் பார்த்துக் கொண்டே செல்வேன்.  அன்று என் கண்களில், அலகில் இரையுடன் பறந்து சென்று வயலில் இறங்கிய, ஒரு வானம்பாடி பட்டது.

உடனே காரை நிறுத்தி விட்டு அந்த இடத்தை நோக்கி நடந்தோம்.  நாங்கள் அந்த இடத்தை அடைவதற்குள் அந்தப் பறவை பறந்து சென்று விட்டது.  ஆனால் அதன் கூடும் அதில் இருந்த இரு குஞ்சுகளும் என் கண்ணில் பட்டன.  நண்பர் நான் பார்த்த்தைக் கவனிக்க வில்லை.  உடனே அந்தக் கூட்டைச் சுற்றி ஒரு ஆறடி ஆரத்தில் ஒரு வட்டக் கோடு போட்டு, “இந்த வட்டத்திற்குள் ஒரு பறவையின் கூடு இருக்கிறது.  உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?” என்று கேட்டேன்.  அவர் சுற்றிச் சுற்றி வந்தார்.  ஆனால் அவரால் கூட்டினைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  காரணம் அது சுற்றுப் புரத்தோடு அவ்வளவு அழகாக ஒன்றி இருந்த்து.

நண்பர் கூட்டின் மீது கால் வைத்திடப் போகும் சமயம் அவரைத் தடுத்து நிறுத்தி அவருக்கு அந்த வானம்பாடியின் கூட்டினையும் அதில் இருந்த இரண்டு குஞ்சுகளையும் காட்டினேன்.  பின்னர் தாய்ப் பறவை தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்ட வந்த போது அந்த அழகினை தூரத்தில் இருந்து படம் பிடித்தேன்.  அந்தப் படம் இதோ:

#1

(சாம்பல் தலை வானம்பாடி – Ashy crowned  finch lark
புகைப்படம்: நடராஜன் கல்பட்டு)

வானம்பாடிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?

சாதாரணமாக பிப்ரவரி முதல் ஜுலை வரையிலான நாட்களில் ஆண் வானம்பாடி தான் உட்கார்ந்திருக்கும் கல்லிலிருந்தோ அல்லது செடியிலிருந்தோ செங்குத்தாக மேலே பறந்து கண்ணுக் கெட்டாத தூரத்தை அடையும்.  பின் தன் இறக்கைகளை மெதுவாக அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் இருந்தபடி தன் அழகான குரலில் சிறிது நேரம் இசை எழுப்பும்.  அவ்வாறு இசை எழுப்புவது சில சமயம் ஐந்து நிமிஷங்களுக்குக் கூட நிகழும்.  பின் தன் இறக்கைகளை மடித்துக் கொண்டு ஒரு கல் விழுவது போல செங்குத்தாக கீழே சில மீடர் தூரம் இறங்கி தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு மீண்டும் சிறிது நேரம் இசை எழுப்பும்.  இவ்வாறு இரண்டு மூன்று மட்டங்களில் பாடி முடித்தபின் வானம்பாடி முன்பு உட்கார்ந்து இருந்த இடத்தினை வந்தடையும்.

இந்த இசைக் கச்சேரி வாழ்க்கைத் துணை கிடைக்கும் வரை தொடரும்.
#2

(ஆகாசத்துலெ இருந்து நான் பாடற பாட்டு ஒங்களுக்குப் புடிச்சிருக்கா?
படம்: இணையத்திலிருந்து..)

இப்படி வானத்தில் இசை எழுப்பி துணை தேடுவதை ஒரு ஆண் குருவி மட்டடுமின்றி பல ஆண் குருவிகள் போட்டி போட்டுக் கொண்டு செய்வதும் உண்டு.

வானம்பாடியின் இசை கேட்டிட இந்தச் சுட்டியில் அழுத்தவும் (Control + Click)
http://www.youtube.com/watch?v=tkk7bnTG5JM&feature=related

நம் நாட்டில் மூன்று வித வானம்பாடிகள் உள்ளன.  அவை ஆகாசத்து வானம்பாடி (Sky lark),  சாம்பல் நிறத் தலை கொண்ட வானம்பாடி (Ashy crowned finch lark)  மற்றும் கொண்டை கொண்ட வானம்பாடி (Crested lark) என்பவை ஆகும்.

#3

(ஆகாசத்து வானம்பாடி – Sky lark
படம்: கல்பட்டு நடராஜன்)

#4

(கொண்டை கொண்ட வானம்பாடி – Crested lark
படம்: இணையத்திலிருந்து..)

பள்ளி நாட்களில் இந்தக் கதையைப் படித்திருப்பீர்கள்.

ஒரு நெல் வயலில் வானம்பாடி ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்தது.  ஒரு நாள் இரையுடன் திரும்பிய தாய்ப் பறவையிடம் குஞ்சுகள், “அம்மா, அம்மா… இன்று இருவர் வந்திருந்தனர்.  ஒருவர் சொன்னார் நெல் கதிர்கள் நன்றாக முற்றி விட்டன.  வெளி ஊரில் உள்ள நம் சொந்தக் காரர்களுக்கு சேதி அனுப்பி அவர்கள் வந்ததும் அறுவடை செய்ய்ய வேண்டும் என்று.  எங்களுக்கு பயமா இருக்கம்மா.  வேறெ எங்கயாவது போயிடலாம்மா” என்றன.

தாய்ப் பறவை சொல்லிற்று, “கவலைப் படாதீங்க.  மறுபடி அவங்க வந்து பேசினா கவனமாக் கேட்டு எங்கிட்டெ சொல்லுங்க என்ன பேசிகிட்டாங்கன்னு.”  “சரிம்மா” என்றன குஞ்சுகள்.

இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு குஞ்சு சொல்லிற்று, “அம்மா, அம்மா இன்னெக்கி மறுபடி அந்த ஆளுங்க வந்து பேசிக்கிட்டாங்க சொந்தக் காரங்க வரதாக் காணும்.  கூலி ஆளுங்களுக்கு சொல்லி அனுப்பலாம்னு.  அம்மா ரொம்ப பயமா இருக்கும்மா.  ஆளுங்க வந்து எங்களெ மிதிச்சுட்டா நாங்க செத்துப் போயிடுவோமேம்மா.”

தாய்ப் பறவை, “கவலைப் படாதீங்க.  மறுபடி வந்தா என்ன பேசினாங்கன்னு கவனமா கேட்டு சொல்லுங்க,” என்றது.

மறு நாள் மாலை, “அம்மா, அம்மா இன்னெக்கி அவர் சொல்லிட்டு இருந்தார், ஆளுங்க வர்ரதாக் காணும்.  நாளெக்கி நாமே வந்து அறுவடை செஞ்சிடலாம்னு,”  என்றது ஒரு குஞ்சு.  இதைக் கேட்ட தாய்ப்பறவை, “இப்போ நாம வேறெ எடத்துக்குக் கெளம்ப வேண்டியதுதான்” என்று சொல்லி ஒவ்வொரு குஞ்சாக வாயில் கவ்விச்சென்று பாதுகாப்பான இடத்திற்கு குஞ்சுகளை மாற்றியது.

இந்தக் கதையில் நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகின்றன.  ஒன்று தன் கையே தனக்குதவி என்பது.  மற்றொன்று வானம்பாடி தரையில் கூடு கட்டும் என்பது.

தரிசல் நிலங்கள், ஆற்றுப் படுகைகள், வயல் வெளிகள் இவற்றில் ஈர மண்ணில் மாட்டுக் குள்ம்பினால் ஏற்பட்ட குழி அல்லது இயற்கையிலேயே செடிகளின் வேர் அருகே உள்ள சிறிய பள்ளம் இவற்றில் காய்ந்த வேர், இலை, சரகுகளைக் கொண்டு கிண்ணம் போன்ற தனது கூட்டினை வானம்பாடி அமைக்கும்.  குஞ்சுகளுக்கு இரை அளிப்பது ஆண் பெண் இரண்டு குருவிகளுமே.

இயற்கையில்தான் பார்த்து ரசித்திட எத்தனை அழகிய காட்சிகள்!  காட்டிலும் மேட்டிலும் சுற்றித் திரியும் போது நீங்கள் சுவாசிக்கும் தூய்மையான காற்றே ஒர் அலாதி சுகமளிக்கும்.  கூட்டுப் புழுவாய் வீட்டுச் சுவற்றுள் அடைந்து கிடக்காது வெளியே வாருங்கள்.  இயற்கையின் அழகினக் கண்டு ரசியுங்கள்.

(வண்ணப் படங்கள் மட்டும் இணைய தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை)
***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புகைப்பட அனுபவங்கள் Copyright © 2015 by கல்பட்டு நடராஜன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book