6
ஏற்கெனெவே சொன்னேன் படம் எடுக்கும் போது அந்தப் படத்தில் இருந்து வெளியே இழுத்துச் செல்லும் கோடுகளைத் தவிர்க்க வேண்டும் என்று. மனிதர்களைப் படம் பிடிக்கும் போது தவிர்க்கப் பட வேண்டியவை சில உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.
1. வெட்டப் பட்ட உருவங்கள் (பாதி உடல் படத்திலும் பாதி வெளியிலுமாக இருந்திடும் உருவங்கள், அதுவும் ஃப்ரேமில் இருந்து வெளியே செல்பவரின் அரை உருவம்).
2. முன் பகுதியிலோ அல்லது பக்கங்களிலோ, தனியாகக் கிடந்திடும் காலணிகள், துடைப்பம், பழய செய்தித் தாள்கள் இவை படத்தினுள் இருக்கக் கூடாது. படம் எடுக்கும் போது இருக்கும் ஆர்வத்தில் இவை இருப்பதை நீங்கள் பார்க்கத் தவறி விடுவீர்கள். பின்னால் படம் வந்த போது தான் புரியும் இவற்றின் கோரம். இன் நாட்களில் இவற்றைப் படம் எடுத்தபின்னும் அழித்திட முடியும் என்பது வேறு விஷயம். ஆனால் இது எல்லாராலும் முடியாது.
3. மனித உருவங்களின் பின்னிருந்து கிளம்பும் செடிகளோ, மரங்களோ. அவை அவர்கள் தலையில் இருந்து முளைப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்திவிடும்.
4. மர இலைகள், கிளைகள் வழியே வந்து உங்கள் பட நாயகன் / நாயகி முகத்தில் திட்டு திட்டாக விழுந்திடும் வெளிச்சம். (இப்படி எடுக்கப் பட்ட படம் அவருக்கு இல்லாத வெண் குஷ்டம் இருப்பது போன்ற் ஒரு பிரமையை உண்டாக்கி விடும்). இதே போன்று தரையிலும் சூரிய வெளிச்சம் திட்டுத் திட்டாக விழுமானால் அதுவும் படத்தைக் கெடுக்கும். அதே சமயம் திட்டாக விழுந்திடும் சூரிய வெளிச்சமே ஒரு நல்ல படத்தினை உங்களுக்கு அளித்திடலாம் கீழே உள்ள் படம் போல.
5. எந்த நிலையிலும் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று கேமிராவைப் பிடித்திருக்கும் கையின் நடுக்கம். சிலர் கேமிராவின் ஷட்டரை அழுத்தும் போது கேமெராவையே நகர்ந்திடச் செய்வர். இதைத் தவிர்க்க ஆள்காட்டி விரல் ஷட்டர் மீது இருந்தால் கட்டை விரலால் கேமிராவின் எதிர் பக்கத்தைப் பிடித்துக் கொண்டு இந்த இரு விரல்களுக்குமான இடை வெளி குறிகிடுமாறு செய்து ஷட்டரை இயக்க வேண்டும். மற்றொரு வழி கேமிராவை உங்கள் உட்லோடு ஒட்டினாற் போல வைத்துக் கொள்ளல். இரண்டாவதை விட முதல் வழி நல்லது.