மனிதக் குடும்பத்தின் ஓர் அழிந்துபோன இனத்தைச் சேர்ந்த ஆஸ்ட்ரலோபித்தேகஸ் அபரான்சிஸ் என்பதன் காலடி தடங்கள் 1978ஆம் ஆண்டு மேரி லீக்கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இருகாலில் நடந்த மிகப் பழங்கால காலடித் தடமாகும். இதன் புதைபடிமத்தை டான்சான்யாவிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள லேட்டோலி என்னும் இடத்தில் கண்டுபிடித்தார். இது சுமார் 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலடித் தடமாகும். 24 மீட்டர் தூரத்திற்கு காலடிகள் பதிந்துள்ள இது நமக்கு கிடைத்த மிகவும் பழமையான காலடியாகும். இப்பகுதியின் எரிமலைச் சாம்பல் சகதியில் இரண்டு பேரின் காலடிகள் பதிந்துள்ளன. இதன்மீது சாம்பல் மூடியதால் அவை அழியாமல் இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருந்தது. இரண்டு பெரியவர்களுடன் ஒரு குழந்தையும் தண்ணீரை தேடிச் சென்றுள்ளனர். ஒரு காலடியின் நீளம் 21.6 செ.மீ. மற்றும் அகலம் 10 செ.மீ., மற்றொரு காலடியின் நீளம் 18.5 செ.மீ., அகலம் 8.8 செ.மீ. ஆகும்.
காலடியின் இடைவெளியைக் கொண்டு கணக்கிட்டபோது வினாடிக்கு ஒரு மீட்டர் வேகத்தில் நடந்தன என்பது தெரிய வருகிறது. இதில் ஒரு பெண் தனது குழந்தையை தூக்கிச் சென்றுள்ளது என்பது தெரிகிறது. கிடைத்த இந்த காலடிகளானது விஞ்ஞானிகள் மட்டும் அல்லாமல் சாதாரண பாமர மக்களும் மனிதன் அல்லாத இருகாலில் நடக்கும் மனிதக் குடும்பத்தைச் சேர்ந்த இனங்கள் வாழ்ந்துள்ளன என்பதை அறிய உதவுகிறது.