செல்லின் உள்ளே உள்ள குரோமோசோமில் டி.என்.ஏ. (Deoxyribose nucleic acid) என்ற மூலக்கூறுகள் உள்ளன. இதுவே உயிரின் ஆதாரம். உயிரினங்களின் பரம்பரைப் பண்புகளை அவற்றின் சந்ததிகளுக்கும் வருவதற்கு டி.என்.ஏ.யே காரணமாகும். இனப்பெருக்கத்தின்பொழுது டி.என்.ஏ. மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. இதன் வடிவம், ஓர் ஏணியை முறுக்கியது போன்று இரட்டைச் சுருள் (Double Helix) வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இது ஒரு சுழல் படிகட்டு போன்றது. இதனை முதன்முதலாக 1953ஆம் ஆண்டு ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகிய இருவரும் இதனைக் கண்டுபிடித்தனர். எக்ஸ்கதிர் படிகவியல் மூலம் டி.என்.ஏ., மூலக்கூறு ஒரு முறுக்கப்பட்ட ஏணி போன்ற வடிவத்திலுள்ள ஒரு இரட்டைச் சுருள் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த இரட்டை துண்டுகளை ஒரு முப்பரிமாண அமைப்பில் பொருந்த வைப்பதிலும், அதனை கண்டுபிடிப்பதிலும் இந்த இரு விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர். இது உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இரு இழைகள் ஒன்றை ஒன்று சுற்றி இருப்பதினால் இரட்டைச் சுருளி அமைப்பைப் பெறுகின்றது. இது ஒரே சீரான அகலத்தைக் கொண்டது. அடினின் – தையமின் மற்றும் சைடேசின் – குவானின் என்கிற இரண்டு எதிர் எதிர் நியூக்ளியோடைடுகள் இணைவதால்தான் ஏணிப்படி போன்ற அமைப்பு கிடைக்கிறது என்பதை இவர்கள் கண்டுபிடித்தனர். இதுபோன்ற ஒரு மாடலையும் உருவாக்கி காட்டியுள்ளனர்.