அமெரிக்காவின் நாசா அமைப்பு 1977ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று வாயேஜர் – 1 (Voyager) என்ற கலத்தையும், அதற்கு 16 நாட்கள் பின்பு வாயேஜர் – 2 என்ற விண்கலத்தையும் ஏவியது. இவை 37 ஆண்டுகளாக விண்வெளியில் பயணித்து 1850 கோடி கிலோ மீட்டர்களை கடந்து சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இவை ஆரம்ப உந்து விசையோடு, கிரகங்களின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்திக்கொண்டு தனது பயணதிசையை மாற்றிக்கொண்டு சரியான பாதையில் வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இது 1990ஆம் சூரியக் குடும்பத்தின் முதல் குடும்பப் புகைப்படத்தையும் எடுத்து அனுப்பியுள்ளது. இதில் உள்ள 12 அடி விட்டமுள்ள டிஷ் ஆண்டனா, நட்சத்திர கண்காணிப்புக் கருவிகளும் உள்ளன. விண் பொருட்கள், கிரகங்களை ஆய்வு செய்ய 11 ஆய்வுக்கருவிகளும் உள்ளன.
வேற்றுக் கிரக உயிரினம் வாயேஜரை சந்திக்க நேர்ந்தால் அதற்கு பூமியைப் பற்றி அறிய பல தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒரு அடி விட்டமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட ஒரு பதிவுத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. அதில் பூமியில் உயிரினங்கள் வாழ்ந்துவருவதற்கான சான்றுகளான கடல் அலை, காற்று, இடி மற்றும் பறவைகள், திமிங்கலங்கள், விலங்குகள் உள்ளிட்ட இயற்கை ஒலிகள், பல்வேறு கலாச்சாரங்களின் இசைத் துணுக்குகளையும், 56 மொழிகளில் பேச்சுவாழ்த்துகளையும், சூரிய மண்டலம், பூமியின் வரைபடம், புவி வாழ் உயிரினங்கள் என 116 படங்களின் தொகுப்புகளும் பதியப்பட்டுள்ளன.