சீனப் பெருஞ் சுவரை (Great Wall of China) உலகின் அதி நீளமான மயானம் என்றும் அழைக்கின்றனர். இச்சுவர் பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டது. இதனால் சுமார் 30 லட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதனாலேயே இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த சியோங்னுகள் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசை பாதுகாக்கவே அதன் வடக்கு எல்லையில் மிகப்பெரிய அரண் போன்ற தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. கிம் வம்சத்தின் முதலாவது பேரரசர் கின் சிஹுவாங் (Qin Shihuang) என்பவரின் ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக கட்டத்தொடங்கப்பட்டது. அதாவது கி.மு. 220 – 206ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டக் காலத்தில் கட்டத்தொடங்கினர். இது ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. ஆரம்பத்தில் கட்டப்பட்ட சுவர்கள் வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களை தாக்குபிடிக்கும் வகையிலேயே இருந்தன. கல்லாலும், மரத்தாலும், மண்ணாலுமே ஆரம்பத்தில் கட்டப்பட்டன.
இது மிங் வம்ச ஆட்சிக் காலத்தில்தான் தற்போதைய வடிவத்தைப் பெற்றது. இவரின் ஆட்சிக் காலத்தில் செங்கல், சுண்ணாம்பு, ஓடுகள், கற்கள் என்பன பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் இடம் பெற்றுள்ளன. இவை படை எடுப்பின்போது புகைச் சைகைகள் காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சுவர் நவீன உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. பிரிந்து செல்லும் அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சுமார் 21196 கி.மீ. நீளம் கொண்டது. தற்போது பல இடங்களில் சுவர் இடிந்து சேதம் அடைந்துள்ளது.