ஒளிப்படக்கருவி, நிழற்படக் கருவி, ஒளி வாங்கி, ‘நி’னா வாங்கி என்கிற தமிழ்ப் பெயர்களில் கேமராவை அழைக்கின்றனர். புகைப்படம் எடுக்கப்பயன்படும் கருவி என்பதால் இதனைப் புகைப்படக் கருவி என்றும், படமி என்றும் அழைக்கின்றனர். இது காட்சிகளைப் படம் பிடிப்பதற்காக பயன்படுத்தும் கருவி. கேமராவில் பல வகைகள் உள்ளன. ஒற்றைப் படத்தை படம் எடுக்கக்கூடிய கருவிகளும், அடுத்தடுத்து தொடர்ச்சியாக படம் எடுக்கக்கூடிய கருவிகளும், படங்களோடு ஒலிகளை பதிவு செய்யும் கருவிகளும் உள்ளன.
ஒரு முனையில் ஒரு கண்ணாடி வில்லையும் (Lens), எதிர்முனையில் ஒளியுடன் ஒளி புகாப் பெட்டியும் கொண்டதுதான் கேமரா. ஒரு கேமரா மிக எளிய அமைப்பு கொண்டதுதான். ஆனால் இதனைக் கண்டுபிடித்து, அதில் பல மாற்றங்கள் செய்வதற்கு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. தற்போதும் கேமராவில் புதியபுதிய தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.
ஒரு எளிய வகையான கேமரா என்பது கி.மு. (BC) 5ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஊசித் துளைக் கேமரா (Pinhole) என்று அழைக்கின்றனர். இது அனைவரும் விளையாட்டாக, பொழுதுபோக்கிற்காக செய்து மகிழலாம். ஒளி ஒரு சிறிய துளை மூலம் ஒரு இருண்ட பெட்டியில் நுழைகிறது. துளையின் எதிர் சுவரில் அல்லது திரையில் ஒரு தலைகீழ் படம் உருவாகிறது. ஒரு ஊசித் துளை வழியாக ஒளியானது இருண்ட பகுதியைக் கடந்து செல்லும் போது ஒரு தலைகீழ் படத்தை உருவாக்குகிறது என்பதை சீன தத்துவஞானி மோ டி (Mo Ti) என்பவர் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் முதன்முதலாக ஒரு படத்தை வரைந்து எடுத்தார். நுண்துளைக் கேமராவே இன்றைக்கு புகைப்படம் எடுக்கும் கேமராவின் முன்னோடியாகும். இந்தக் கேமராவை இருள்படப் பெட்டி (Camera Obscura) என்று அழைக்கின்றனர்.
கேமராவின் அடிப்படை தத்துவத்தை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் எழுதி வைத்துள்ளார். கி.மு. 330 ஆம் ஆண்டில் நடந்த ஒரு பகுதி சூரிய கிரகணத்தை அவர் கண்டார். ஒரு மரத்தின் இலையின் இடையே உள்ள துவாரத்தின் வழியாக தரையில் விழுந்த நிழலின் மூலம் கண்டார். இவர் கண்டுபிடித்த தலைகீழ் கோட்பாடே புகைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இபின் அல் ஹேதம் (Ibn al Haytham) என்று அழைக்கப்பட்ட அல்ஹஜன் (Alhazen) ஒரு நுண்துளை மூலமாக சூரிய கிரகணத்தைக் கண்டார். அவர் ஒரு குண்டூசி துளையிட்ட ஒரு பெட்டியின் வழியாக சூரிய கிரகணத்தைக் கண்டு அதனை விவரித்து எழுதினார். ஒரு குண்டூசி துளை மூலம் ஒரு தெளிவான படத்தை உருவாக்க முடியும் என்பதை விவரித்தார்.
ஆங்கில தத்துவஞானி ரோஜர் பேகன் (Rogen Bacon) என்பவர் 1267ஆம் ஆண்டில் ஆப்டிகல் (Optical) கொள்கையை தனது புத்தகத்தில் எழுதினார். இந்த கொள்கையை அடிப்படையாகக்கொண்டு 15ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானிகளும், ஓவியர்களும் இயற்கை அற்புதங்களை கண்டு மகிழ்ந்ததோடு அதனை படமாகவும் வரைந்தனர். குண்டூசி துளை வழியாக ஒளியை இருண்ட அறையில் விழச் செய்தனர். வெளிப்புறத்தில் எந்த பொருள் உள்ளதோ அது இருண்ட அறையின் சுவற்றில் தலைகீழாக தெரிந்தது. இதனை கேமரா அப்ஸ்குரா (Obscura) என்றனர். இதற்கு லத்தின் மொழியில் இருண்ட அறை என்று பொருள். இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் ஜோஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler) என்பவராவார். இவர் கணிதவியல் மற்றும் வானவியல் அறிஞராவார். இவர் 1604ஆம் ஆண்டில் நுண்துறை பற்றி தனது புத்தகத்தில் எழுதியபோது அதனை கேமரா அப்ஸ்குரா என்று குறிப்பிட்டார்.
அப்ஸ்குரா கேமரா வந்தபோது ஓவியர்கள் அதனைக் கண்டு பயந்தனர். தங்களின் வாழ்க்கையை கெடுக்க வந்தது என்றனர். ஏனென்றால் கேமரா கண்டுபிடிப்பதற்கு முன்பு ஓவியர்களே மன்னர்களையும், வசதி படைத்த செல்வந்தர்களையும் ஓவியமாக வரைந்து கொடுத்தனர். ஓவியர்கள் சொல்வதைக் கேட்டு அவர்கள் அசையாமல் சில நாட்கள் உட்கார்ந்து இருந்தனர். தத்ரூபமாக ஓவியம் தீட்டும் ஓவியர்களுக்கு அதிக கிராக்கியும் இருந்தது.
அப்ஸ்குரா கேமரா வந்தபோது சில ஓவியர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகின்றனர். மோனலிசா ஓவியத்தை வரைந்த லியோனார்டோ டாவின்சி கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் வரைந்து வைத்திருந்த அரிய ஓவியங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளார். பின்னர்தான் அவருக்குத் தெரிந்தது. கேமராவின் வளர்ச்சி என்பது வேகமாக இல்லை. அதனால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை அவர் உணர்ந்தார். தான் கற்பனை செய்து வரையும் ஒரு ஓவியத்தை ஒரு கேமராவால் உருவாக்க முடியாது என்பதை அவர் உணர்ந்தார்.
அக்காலத்தில் ஓவியக் கலைஞர்களுக்கு இந்த வகை கேமரா மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. படம் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டி ஓவியங்கள் வரைவதற்காக இந்த கேமரா முறை 1600ஆம் ஆண்டு முதல் 1800ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. அக்காலத்தில் இது மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டில் எடுத்துச் செல்லக்கூடிய அப்ஸ்குரா கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த வகையான கேமரா செய்வது மிக எளிதானது. ஒரு அட்டைப் பெட்டியில் சிறுதுளையும் அதன் பின்புறம் எண்ணெய் தடவிய காகிதமும் இருக்கும். தூரத்தில் உள்ள மரத்தையோ, வீட்டையோ நோக்கும்படி வைத்தால், காகிதத்தில், அதன் பிம்பம் தலைகீழாகத் தெரியும். அதனை வரைந்து, வண்ணமிட்டு அழகிய படங்களாக எடுத்துக் கொள்ளலாம். அப்ஸ்குரா கேமராவைக் கொண்டு காகிதத்தில் உருவங்களை விழச் செய்து அதை வரைந்தனர். ஆனால் இதில் உருவங்கள் மங்கலாகவே தெரியும். இதனைப் பயன்படுத்தி இயற்கைக் காட்சிகளையும் ஓவியர்கள் படங்களாக வரைந்தனர்.
எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சிறுபெட்டியால் (Portable) தயாரிக்கப்பட்ட கேமராக்கள் 17ஆம் நூற்றாண்டில் வந்தது. இதனை கெப்ளர் (Kepler) என்கிற வானவியல் விஞ்ஞானி உருவாக்கினார். இவர் 1620ஆம் ஆண்டில் ஒரு கூடாரத்தின் முன்புறம் ஒரு லென்ஸை பொருத்தி போர்டபிள் கேமராவை உருவாக்கினார். இந்த வகை கேமராக்கள் 1800ஆம் ஆண்டுகளின் முன்புவரை பிரபலமாக இருந்தன. ராபர்ட் ஹுக் (Robert Hooke) என்கிற விஞ்ஞானி 1694ஆம் ஆண்டில் இந்த கேமரா சார்ந்த ஆய்வுக்கட்டுரையை ராயல் கழகத்தில் சமர்ப்பித்தார். இந்த கூம்பு வடிவக் கேமராக்களை பயன்படுத்துவோர் தலை மற்றும் தோள்பட்டையில் வைத்து சுமந்து சென்றனர். 1727ஆம் ஆண்டுகளில் நடந்த ஆராய்ச்சிகளில் வெள்ளி முலாம் பூசப்பட்ட தகட்டில் ஒளி பதிவு செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மன் விஞ்ஞானி ஜோகன் ஹென்ரிக் ஸ்கல்ஜ் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார்.