"

முதன்முதலாக நிரந்தரமாக உருவம் பதியும் கேமராவைக் கண்டுபிடித்தவர் ஜோசப் நைஸ்ஃபோர் நிப்ஸ் (Nicephore Niepce) என்பவரார். இவர் 1765ஆம் ஆண்டு மார்ச் 7 அன்று பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். இவர் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர். மேலும் புகைப்படத்துறையின் முன்னோடி ஆவார். உலகில் முதன்முதலாக சில புகைப்படங்களை எடுத்த நபர் என்ற பெருமைக்கு உரியவர். இவரின் இந்த சாதனையால் உலகின் புரட்சியாளர்களில் ஒருவராகவும், விஞ்ஞான கண்டுபிடிப்பாளராகவும் விளங்கினார்.

இவர் 1816ஆம் ஆண்டிலிருந்தே கேமரா சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். ஊசித்துளைக் கேமரா மூலம் படங்களை வரையும்போது அவரின் கை நடுங்கியது. ஆகவே நிரந்தரமாக உருவம் பதியக்கூடிய புகைப்பட கருவியை கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். இவர் மைக்ராஸ்கோப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு லென்ஸை, ஒரு நகைப்பெட்டியில் பொருத்தி ஒரு கேமராவை உருவாக்கினார். அதன் பின்புறத்தில் ரசாயனம் தடவிய கண்ணாடி தகட்டைப் பொருத்தி புகைப்படம் எடுத்தார்.

நைஸ்ஃபோர் 17ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட படத்தை புகைப்படமாக எடுத்தார். அதில் மனிதன் ஒருவர் குதிரையை அழைத்துச் செல்வது போன்று வரையப்பட்ட காட்சி அடங்கியது, அவர் எடுத்த முதல் புகைப்படமாகக் கருதப்படுகிறது. அதன்பிறகு அவர் 1826ஆம் ஆண்டில் இன்னொரு புகைப்படம் எடுத்தார். இது ஜன்னல் வழியாகத் தெரியும் இயற்கைக் காட்சியாகும். இதுவே இயற்கை காட்சி அடங்கிய உலகின் முதல் புகைப்படமாகும். இந்த புகைப்படம் எடுக்க 8 மணி நேரம் ஆனது. போட்டோ தகட்டில் உருவம். பதிய எட்டு மணி நேரம் ஆனது. ஆகவே ஆரம்பத்தில் இயற்கைக் காட்சிகளை மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது. 1826ஆம் ஆண்டில் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் இன்றளவும் உள்ளது.

இவர் 1829ஆம் ஆண்டு முதல் லூயிஸ் டாகுவேரா என்பவருடன் இணைந்து புகைப்படக் கேமரா மற்றும் புகைப்படம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். இவர் 1833ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவர் 1825ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் 2002ஆம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது பிரான்ஸ் நாட்டில் ஏலத்தின் மூலம் 4 லட்சத்து 50 ஆயிரம் யூரோக்களுக்கு விற்பனையானது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book