ஜெர்மனி நாட்டில் மீட்சல் என்னும் இடத்தில் ஒரு புதைபடிமம் 1980ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதற்கு ஐடா (Ida) எனப் பெயரிடப்பட்டது. இதனை 2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்த புதைபடிமத்தை ஆராய்ந்தபோது அது குரங்கு இனத்தையும், மனித இனத்தையும் இணைக்கக்கூடிய ஒருவகை உயிரினம் எனத் தெரிய வந்தது. இது சுமார் 4.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது எனத் தெரிய வருகிறது. சார்லஸ் டார்வின் 200ஆவது பிறந்த நாள் விழா 2009ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபோது இதற்கு டார்வினியஸ் மாசில்லியே எனப் பெயரிடப்பட்டது. இது 95 சதவீதம் சேதாரம் இல்லாமல் முழு புதைபடிமம் கிடைத்தது. இந்த விலங்கின் தோல் நிழல்கூட பதிந்திருந்தது. இதனை புகைப்படமாகவும், எக்ஸ்ரே வரைபடமாகவும் எடுத்துள்ளனர்.
இது 58 செ.மீ. நீளம் கொண்டது. உடல் தவிர இதன் வால் 24 செ.மீ. நீளம் உடையது. இது பிரைமேட் குடும்ப மரத்தின் மனிதக் கிளையில் இடம் பெறுகிறது. இது கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் மனிதப் பரிணாமத்தின் கடந்த காலத்தை அறிய உதவுகிறது. இதன் காலில் டாலஸ் (Talus) எலும்பு உள்ளது. இதுவே பரிணாமத்தில் குரங்கு மற்றும் மனிதக் குரங்குகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு மனிதன் இரு காலில் நடக்க உதவியது.