புகைப்படம் எடுத்தல் என்பது மிக எளிமையாக மாறியதற்கு டிஜிட்டல் கேமராவின் பங்களிப்பே காரணம். யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம். இன்று பெரும்பாலான செல்போன்களிலும் இந்த கேமரா வந்துவிட்டது. அது மட்டும் அல்லாமல் பிலிம் போட்டு புகைப்படம் எடுக்க வேண்டியதும் இல்லாமல் போய்விட்டது. போட்டோ எடுக்கும் போது கவலைப்பட வேண்டியது இல்லை. படம் சரியாக வரவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை தெளிவாக எடுத்துக் கொள்ளலாம்.
பிலிம் போட்டு எடுக்கும் கேமராக்கள் இன்று இல்லாமல் போய்விட்டது. டிஜிட்டல் கேமரா வந்த பிறகு பிலிம் விற்பனை என்பது கிடையாது. அனைத்தும் கணினி முறையாகி விட்டது. டிஜிட்டல் கேமரா என்பது முதன்முதலாக 1950ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் டிஜிட்டல் கணினி புகைப்படம் 1957ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. 1959ஆம் ஆண்டில் தானாக இயங்கும் முதல் ஆட்டோமேடிக் கேமிரா கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் டிஜிட்டல் கேமராவின் விலை அதிகமாக இருந்தது. அதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமே வைத்திருந்தனர். செல்போனிலும் டிஜிட்டல் கேமரா வந்ததன் பலனாக பெரும்பாலானவர்களின் கைகளில் கேமரா உள்ள செல்போன்கள் உள்ளன.
பழைய கேமராவில் புகைப்படம் எடுக்கும் போது அதில் உள்ள பிலிமில் ஒளிப்பட்டவுடன் ரசாயன மாற்றம் ஏற்பட்டு உருவம் பிலிமில் பதியும். தற்போதுள்ள டிஜிட்டல் கேமராவில் பிலிமிற்கு பதிலாக அங்கு செவ்வக வடிவத்தில் சில்லு (Chip) இருக்கும். அதில் ஒளியை உணரக்கூடிய பல புள்ளிகள் நெருக்கமாக இருக்கும். இதனை பிக்சல் (Pixel) என்று சொல்வார்கள். இவற்றில் ஒளிபட்டவுடன் மின்னூட்டம் ஏற்படும். லென்ஸ் வழியே செல்லும் ஒளி சில்லுவில் பட்டவுடன் பிம்பம் பதிவாகும். இதில் உள்ள பிக்சல் எனப்படும் புள்ளிகள் மிக அதிகளவில் இருக்கும். அதாவது 5 மெகா பிக்சல் என்றால் சுமார் 50 லட்சம் புள்ளிகள் என்று பொருள். இது மிகச் சிறிய அளவில் வைத்திருப்பதால் புகைப்படம் மிக நன்றாகவே வருகிறது.
மெகா பிக்சலின் அளவுகள் அதிகமாக இருக்கும் போது படம் தெளிவாக இருக்கும். உதாரணத்திற்கு 1 அல்லது 2 மெகா பிக்சல் என்றால் 10 லட்சம் அல்லது 20 லட்சம் புள்ளிகள் இருக்கும். இதனால் படங்கள் தெளிவாக இருக்காது.
ஒருமுறை போட்டோ எடுத்ததும், சில்லில் இருக்கும் மென்பொருள். அதில் இருக்கும் ஒவ்வொரு பிக்சலிலும் இருக்கும் மின்னூட்டத்தைக் குறித்துக்கொள்ளும். அதாவது பதிவு (Record) செய்து கொள்ளும். இதுதான் நமக்கு கிடைக்கும் படம். இதை மெமரி ஸ்டிக் என்ற பகுதியில் சேமித்துக் கொள்ளும். அடுத்து எல்லா பிக்சலிலும் மின்னூட்டத்தை பூஜ்ஜியமாக்கிவிடும். இது ஒரு போட்டோ எடுத்ததும், அடுத்த பிலிம் வருவது போல, காலி சிலேட் என்ற நிலைக்கு வந்துவிடும்.
புகைப்படக் கலை 1850ஆம் ஆண்டுகளிலேயே இந்தியாவிற்கும் வந்துவிட்டது. முன்பெல்லாம் புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு அரிதான செயலாக இருந்தது. டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் புகைப்படம் எடுத்தல் என்பது எளிதாகி விட்டது. தரம், வேகம், தூரம் என அனைத்து விதங்களிலும் புகைப்படக் கலை முன்னேறிவிட்டது. விண்வெளியில் இயங்கும் ஹப்பிள் தொலைநோக்கியில்கூட டிஜிட்டல் கேமராவே உள்ளது. தானாகவே புகைப்படம் எடுக்கும் டிஜிட்டல் கேமராக்களும் உள்ளன. குழந்தைகள்கூட இன்றைக்கு டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
புகைப்படங்கள் வரலாற்றில் பல மாற்றங்களைச் செய்துள்ளன. நாம் பிறப்பதற்கு முன்புள்ள கண்டுபிடிப்புகளைக் கண்டு மகிழ உதவுகிறது. நேரில் கண்டிராத, காணமுடியாத காட்சிகளை, அறிவியலின் அற்புதங்களை நாம் காண நமக்கு உதவுகின்றன. நாம் அரிய புகைப்படங்களை காண்போம் வாருங்கள்.