கடல் மட்டத்திலிருந்து 2430 மீட்டர் (7970 அடி) உயரத்தில் ஒரு மலைநகரம் பெரு நாட்டின் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேல் உள்ள மலைத்தொடரில் உள்ளது. இது இன்கா பேரரசர் பாட்சாகுட்டி (Pachacuti) என்பவரால் 1450ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது ஒரு எஸ்டேட்டாக நிர்வாகிக்கப்பட்டது. இங்கு கருங்கற்களைக் கொண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை பளபளக்கும் சுவர்களை உடையது. கற்களுக்கு இடையே இடைவெளி இல்லை. இங்கு சூரியனுக்காக கட்டப்பட்ட இன்டிகுவாட்டானா என்கிற கோயில் மிகவும் முக்கியமானது. இந்த மலைத்தொடர் காண்பதற்கு அழகானது, 2000 அடிகள் செங்குத்தாக உள்ளது. இதன் அடியில் உருபாம்பா ஆறு வளைந்து ஓடுகிறது. இந்த புரதான மலை நகரத்தை மச்சு பிச்சு (Machu Picchu) என்று அழைக்கின்றனர். இன்கா பேரரசை 1572ஆம் ஆண்டில் ஸ்பானியர்கள் கைப்பற்றியதிலிருந்து இந்த நகரம் கைவிடப்பட்டது.
அமெரிக்கா வரலாற்று அறிஞரான ஹிராம் பிங்கம் (Hiram Bingham) என்பவர் 1911ஆம் ஆண்டில் இந்நகரைக் கண்டுபிடித்தார். இதன் பின்னர் இது உலகின் ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக மாறியது. தற்போது ஆண்டிற்கு 4 லட்சம் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வருகின்றனர். பெரு அரசாங்கம் இதனை 1981ஆம் ஆண்டில் வரலாற்றுச் சின்னமாக அறிவித்தது. யுனெஸ்கோ அமைப்பு 1983ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது. 2007ஆம் ஆண்டில் இதனை உலகின் புதிய 7 அதிசயங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.