பூமி அல்லாத வேறு ஒரு உலகம் எனக் கருதப்படும் நிலாவின் தரையில் முதன்முதலில் இறங்கிய மனிதன் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் (Neil Armstrong) ஆவார். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். 1930ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 அன்று பிறந்தார். அப்பலோ – 11 என்ற விண்கலத்தின்மூலம் இவருடன் மைக்கேல் கோலின்ஸ், புஜி ஆல்டிரின் ஆகிய மூவரும் பயணம் செய்தனர். நிலவில் ஈகிள் ஓடம் தரையிறங்கியது. 1969ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று திங்கள் கிழமை UTC நேரப்படி சரியாக 2.56 (10.56 PM – EDT) மணிக்கு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தனது இடது காலை நிலவின் தரையின்மீது வைத்தார். இதன்மூலம் பூமி அல்லாத வேறு ஒரு நிலத்தில் கால் பதித்த முதல் மனிதன் என்கிற பெருமையை, சரித்திரத்தை நீல் ஆர்ம்ஸ்ட்ராங் மனிதகுலத்தின் சார்பாக நிகழ்த்தினார். அதன் பிறகு 19 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் நிலவில் கால் பதித்தார்.
நிலவின் மேற்பரப்பில் நின்றுகொண்டு “இது மனிதனுக்கு ஒரு சிறு அடியாக இருந்தாலும், மனித குலத்திற்கு ஒரு பெரிய மைல் கல்லாகும்” எனக் கூறினார். இது வரலாற்றில் ஒரு பொன்மொழியாகக் கருதப்படுகிறது. அதன் பிறகு நிலவில் அமெரிக்காவின் தேசியக் கொடியை நட்டனர். பல ஆய்வுகள் உள்பட செய்தபிறகு மண் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமி திரும்பினார். இந்தப் பயணத்தின்மூலம் நிலவிற்கு மனிதர்களின் பயணம் சாத்தியம் என்று நிரூபிக்கப்பட்டது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் 2012ஆம் ஆண்டு ஆகஸ்டு 25 இல் இயற்கை எய்தினார்.