இன்றைக்கு 550க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குப் பயணம் செய்துள்ளனர். இவர்களில் முதன்முதலாக விண்வெளிக்குச் சென்று வந்த விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) என்பவராவார். இவரே முதன்முதலாக விண்வெளிக்குச் சென்று பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதர். இதனால் யூரி ககாரினை நெம்பர் – 1 விண்வெளி வீரர் என்று அழைக்கின்றனர். சோவியத் ரஷ்யாவில் 1934ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று பிறந்தார். இவர் வோஸ்டாக் – 1 (Vostok) என்ற விண்கலத்தின்மூலம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று விண்வெளிக்குப் பயணித்து வெற்றி கண்டார்.
இவர் பூமியின் வடிவத்தை முதலில் கண்ணால் கண்டார். விண்வெளியின் எடையற்ற தன்மையில் விண்கலத்தின் உள்ளே பொருட்கள் மிதந்து செல்வதைக் கண்டார். எடையற்ற தன்மையில் உணவு மற்றும் நீர் அருந்த முடியும் என்பதை தனது பரிசோதனைமூலம் நிரூபித்தார். பூமியை 108 நிமிடத்தில் ஒருமுறை சுற்றி வெற்றிகரமாக பூமி திரும்பி சரித்திரத்தில் இடம் பிடித்தார். இவரின் பயணத்தின்மூலம் மனிதர்கள் விண்வெளியில் வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.