ஜேம்ஸ் கேமரன் (James Cameron) என்பவர் உலகின் புகழ்பெற்ற ஆங்கில பட இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். டைட்டானிக், அவதார் போன்ற படங்களை இயக்கியவர். ஆனால் இவர் ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு ஆராய்ச்சியாளர். கடலின் மிக ஆழமான பகுதியான மரியானா அகழி வரை தனி ஒரு மனிதராக சென்று சாதனை படைத்தவர். அவருக்கு முன்பு இருவர் சேர்ந்தே மரியானா அகழி வரை சென்று திரும்பினர். விண்வெளிக்குச் சென்று வருவதை விட ஆழ்கடலின் ஆழம் வரை சென்று வரும் பயணம் மிகக் கடுமையானது. வடக்கு பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுக்கு அருகில் மரியானா அகழி (Mariana Trench) உள்ளது. இது 10924 மீட்டர் (35,840 அடிகள்) கொண்டது. இவர் டீப்சீ சேலஞ்சர் என்னும் நீர்மூழ்கிக் கலத்தின் மூலம் 2012ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று மரியானா அகழி வரை சென்று திரும்பினார். இந்த டீப்சீ சேலஞ்சர் கலமானது 11 கி.மீ. ஆழத்தில் உள்ள நீரின் அழுத்தத்தைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. நீரின் அழுத்தத்தைத் தாங்க செயற்கை நுரை பஞ்சு பயன்படுத்தப்பட்டிருந்தது.
இவர் 2 மணி நேரத்தில் மரியானா அகழியின் ஆழத்தை அடைந்தார். கடலடியில் உள்ள பாறைகள், மண் ஆகியவற்றை தானியங்கி கருவி மூலம் சேகரித்தார். ஆழ்கடலில் வாழும் உயிரினங்கள், நீரின் தன்மை, நீரின் அழுத்தம் ஆகியவற்றை ஆராய்ந்தார். அவற்றினை புகைப்படங்களாகவும் எடுத்தார். மூன்று மணி நேர ஆய்விற்குப் பிறகு 3 மணி நேர பயணத்தில் கடலின் நீர் மட்டத்தை அடைந்தார்.