பூமியில் இருக்கும் நாம் நிலாவின் உதயத்தைக் காண்கிறோம். அதேபோல் நிலவில் இருந்தால் பூமி உதிப்பதையும், மறைதலையும் காணமுடியும். இது ஆச்சரியமான தகவல்தான். இப்படி பூமி உதயத்தை முதன்முதலில் கண்டு வியந்து, ஆச்சரியம் அடைந்ததோடு அதன் புகைப்படத்தையும் எடுத்தவர் வில்லியம் ஆண்டர்ஸ் என்கிற விண்வெளி வீரர் ஆவார். வில்லியம் ஆண்டர்ஸ், பிராங் போர்மன் மற்றும் ஜேம்ஸ் லவ்வல் ஆகிய மூவரும் அப்பலோ – 8 என்கிற விண்கலத்தில் நிலவின் சுற்றுப்பாதைக்கு பயணம் மேற்கொண்டு, நிலவை சுற்றிவிட்டு வெற்றிகரமாக பூமி திரும்பினர். இதுவே மனிதன் நிலவிற்கு மேற்கொண்ட முதல் விண்வெளிப் பயணம். இவர் 1968ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று இந்த அரிய புகைப்படத்தை எடுத்தார். இவர் இதற்கு பூமி உதயம் (Earth rise) எனப் பெயரிட்டார்.
புகைப்பட வரலாற்றில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப் பிரபலமான படங்களில் இது ஒன்றாகக் கருதப்படுகிறது. இதுபோன்று இயற்கை நிகழ்வை துல்லியமாக மீண்டும் யாராலும் எடுக்க முடியாது என பல பிரபலமான புகைப்படக் கலைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.