முதலாம் உலக யுத்தம் மற்றும் இரண்டாம் உலக யுத்தம் ஆகியவற்றிற்கு முன்பு நடந்த மிகப் பெரிய யுத்தமாக கிரிமியன் போரைக் குறிப்பிடுகின்றனர். இந்த யுத்தமானது 1853 – 1856 வரை நடந்தது. கிரிமியன் தீபகற்பத்திற்கு இடையே ரஷ்யா மற்றும் பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் ஒட்டோமான் ஆகிய வல்லரசுகளின் போராக இது நடந்தது. இந்தப் போருக்கான காரணம் மதவேறுபாடுகளே. முதலில் துருக்கியர்கள் ரஷ்யாமீது போரை அறிவித்தனர். பிறகு அது மிகப் பெரிய வல்லரசுகளுக்கு இடையிலான போராக மாறியது. இந்தப் போரில் 2,50,000க்கும் மேற்பட்ட ஆண்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரை நேரில் கண்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதனை வெளியிட்டனர். முதன்முதலாக நேரில் சென்று போரின் விளைவுகளை புகைப்படமாக எடுத்து வெளியிடப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு எந்த போரையும் புகைப்படம் எடுத்தது கிடையாது.
யுத்தம் தொடங்கிய சமயத்தில் போர்வீரர்கள் தங்கியிருந்த பாளக்லாவா (Balaklava) முகாமினை பென்டன் மற்றும் ரோஜர் என்பவர்களால் 1855ஆம் ஆண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். கூம்பு வடிவ கூடாரம், மனிதர்களும், குதிரைகளும் மற்றும் மலைத்தொடரும் இதன் பின்புறத்தில் உள்ளன. இது மிக அரிதான ஒரு புகைப்படமாகக் கருதப்படுகிறது. இந்த போரின்போது வீரர்கள் பலர் காயமடைந்ததை அறிந்து புளோரன்ஸ் நைட்டிங்கேல் அங்கு மருத்துவ சேவை புரிய சென்றார். இதன் பின்னர் செவிலியர் துறை வளர்ச்சி அடைந்தது.