மனிதப் பேரினத்தைச் சேர்ந்த முதல் காலடியின் புதைப்படிமம் 2006 – 2008ஆம் ஆண்டிற்கு இடைப்பட்டக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மனிதப் பரிணாமத்தைக் கண்டறிவதற்கு மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. கென்யா நாட்டில் உள்ள இலிரட் (Ileret) என்னும் கிராமத்தின் அருகில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இலிரட் காலடி என்று அழைக்கப்படுகிறது. இதனை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேத்தீவ் பென்னெட் என்பவர் கண்டுபிடித்தார். இந்த காலடியானது சுமார் 1.51 – 1.53 மில்லியன் ஆண்டுகள் பழமையானது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஹோமோ எரக்டஸ் என்கிற மனித இனத்தின் காலடி என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த காலடியானது தற்கால மனிதனாகிய நம்முடைய காலடியை ஒத்ததாகவே இருக்கிறது.
ஹோமோ எரக்டஸ் மனித இனத்தின் உயரம், எடை அது காலடியை எடுத்து வைக்கும் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்ததில் இது ஹோமோ எரக்டஸின் காலடியாக இருக்கும் என்கின்றனர். இதன் கட்டை விரலின் அளவானது தற்கால மனிதனை ஒத்திருக்கிறது. இதன் வளைந்த பாதம், கட்டை விரல் அமைப்பை கொண்டு ஆராயும் பொழுது இது ஓடுவதற்கு ஏற்றது. வேட்டை விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக வேகமாக ஓடவும் முடிந்தது.