பூமியின்மீது விழுந்த விண்கற்களிலேயே மிகப் பெரிய விண்கல் ஒன்று 1920ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நமீபியா நாட்டில் ஹோபா என்னும் விவசாயப் பண்ணையில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு ஹோபா விண்கல் (Hoba Meterorite) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விண்கல் 3 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், சுமார் ஒன்றரை மீட்டர் தடிமனும் கொண்டது. இதன் எடை 60 டன், இந்த விண்கல் சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விழுந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது தட்டை வடிவத்தில் இருந்ததால் குறைவான வேகத்தில் பூமியின் மீது விழுந்துள்ளது. அதனால் பெரிய பள்ளம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விண்கல்லில் இரும்புத்தாதுகள் 82.4 சதவீதமும், நிக்கல் 16.4 சதவீதமும், கோபால்ட், பாஸ்பரஸ், செம்பு, துத்த நாகம், கார்பன், சல்பர், குரோமியம், இரிடியம், ஜெர்மனியம் போன்ற மூலகங்களும் சிறிதளவில் உள்ளன.
இந்த விண்கல் விழுந்த இடத்திலேயே அதனைப் பாதுகாத்து வருகின்றனர். இது ஒரு சுற்றுலா இடமாக மாறியுள்ளது. 1955ஆம் ஆண்டு நமீபியா அரசாங்கம் இதனை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது. இந்த விண்கல்லை கௌரவிக்கும் முறையில் நமீபியா அரசாங்கம் தபால் முத்திரையாக வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தினமும் இந்த விண்கல்லைக் காண வருகின்றனர்.