பூமியின் சுற்றுப்பாதைக்கு மனிதனால் ஏவப்பப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக் – 1 (Sputnik – 1) என்பதாகும். இதனை சோவியத் ரஷ்யா ஏவி வெற்றிகண்டது. இதன் மூலம் விண்வெளி வரலாறு தொடங்கியது எனலாம். ஸ்புட்னிக் – 1 என்கிற செயற்கைக்கோள் ஒரு கூடைப்பந்து அளவிற்கு பெரியது. இது 53 செ.மீ. விட்டமும், 83.6 கிலோ எடையும் கொண்டது. இதில் நான்கு ஆண்டனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவை 8 அடி நீளம் கொண்ட இரண்டு ஆண்டனாக்களும், 10 அடி நீளம் கொண்ட இரண்டு ஆண்டனாக்களும் ஆகும். இதனை ரஷ்யாவின் R-7 என்கிற ராக்கெட் 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று ஏவியது.
ஸ்புட்னிக் – 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக பூமியை 98 நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றி வந்தது. இது இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்தது. இது காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்களை அனுப்பியது. இந்த செயற்கைக்கோள் 92 நாட்கள் பூமியைச் சுற்றியது. அதன் பிறகு 1958ஆம் ஆண்டு ஜனவரி 4 அன்று பூமியின் வளிமண்டலத்தின் உள்ளே நுழைந்து எரிந்து போனது.