மனித இனத்தை மெல்லக் கொல்லும் ஒரு விஷமாக எண்டோசல்பான் (Endosulfan) என்னும் பூச்சிக்கொல்லி மருந்து விளங்குகிறது. கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தின் கிராமங்களில் 1970ஆம் ஆண்டுகளில் இருந்து எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்டது. பல்வேறு வகையான செடிகளை தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இது நன்மை செய்யும் பூச்சிகளையும் அழித்துவிடுகிறது. பட்டாம்பூச்சி, தவளை, மீன், தேனீக்கள், பறவைகள், எறும்புகள், ஊர்வன, பாலூட்டிகள், குரங்குகள் என அனைத்து உயிர்களையும் பாதித்துள்ளது. ஆடு, மாடுகள் ஈனும் குட்டிகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. மனிதனுக்கும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகள் பிறக்கும்போது குறைபாடுகளுடன் பிறக்கின்றன. கேரளாவில் 250 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்ப்பாலிலும் எண்டோசல்பான் கலந்துள்ளது. துருவப் பிரதேசங்களிலும் இதன் கலவை நிறைந்துள்ளன. இதன் பாதிப்பை உணர்ந்து உலகில் 70 நாடுகள் தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில் அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது. பல்வேறு போராட்டங்கள் மூலம் கேரளாவில் 2005ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எண்டோசல்பானின் பாதிப்பு தொடர்கிறது. இது மெல்லக் கொல்லும் ஒரு விஷமாக செயல்படுகிறது.