லூயிஸ் டாகுவேரா (Louis Daguerre) 1787ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். இவர் புகைப்படக் கலைஞர் மற்றும் சிறந்த ஓவியர். இவர் நாடக மேடைகளின் துணிகளுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்து வந்தார். அவர் ஊசிதுளைக் கேமராமூலம் வரைந்த ஓவியங்களை நகல் எடுக்க விரும்பினார். இதனால் இவர் கேமரா சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டார். இவர் டாகுவேரியோ வகை (Daguerreo type) என்னும் ஒளிப்படம் எடுப்பதற்கான வழிமுறை ஒன்றை உருவாக்கியதன்மூலம் உலகப் புகழ் பெற்றார்.
இவர் நைஸ்ஃபோர் என்பவருடன் 1824ஆம் ஆண்டில் இணைந்து ஒளிப்படத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு 1833ஆம் ஆண்டில் ஒரு கேமராவைக் கண்டுபிடித்தார். இவர் திருந்திய புகைப்படமுறையைக் கண்டுபிடித்தார். இவரின் பெயராலேயே டாகுவேரியோ வகை என்று அதற்குப் பெயரிட்டு அழைத்தனர். அவரின் பெயரிலேயே பதிவும் செய்யப்பட்டது. இதற்கான உரிமத்தை பிரான்ஸ் அரசு 1839ஆம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று வழங்கியது.
டாகுவேரியோ வகையை பிரான்ஸ் அரசு உலகுக்கு அன்பளிப்பாக வழங்குவதாக, அதாவது “ப்ரீ டு தி வோல்டு” (Free to the world) என அறிவித்தது. 1839ஆம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று வணிக முறையில் போட்டோ எடுப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த நாளே உலகப் புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.
இவரின் இந்தக் கண்டுபிடிப்பிற்காக பிரான்ஸ் அரசாங்கம் டாகுவேரே இறக்கும் வரை ஆண்டுதோறும் 6000 பிராங்குகள் வழங்கி வந்தது. அதன்பிறகு அவரின் வாரிசுகளுக்கு ஆண்டுதோறும் 4000 பிராங்குகள் அரசாங்கம் வழங்கியது.
டாகுவேரா முதன்முதலாக மனிதர்களை புகைப்படமாக எடுத்தார். அவர் 1838ஆம் ஆண்டு பாரீஸ் நகர வீதியைப் புகைப்படம் எடுத்தார். அவர் புகைப்படம் எடுத்த போது 10 நிமிடங்கள் வீதியில் யாரும் செல்லவில்லை. ஒரு மனிதர் மட்டுமே தனது பூட்ஸிற்கு பாலிஸ் போடுவது போல் படத்தில் இடம் பெற்றிருந்தது. தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுவே. இதன் பின்னரே புகைப்படத்துறை வளர்ச்சியடைந்தது.
ஆரம்பத்தில் இவர் புகைப்படம் எடுக்க 30 நிமிடம் ஆனது. பிறகு அதில் பல்வேறு மாற்றங்கள் செய்ததன் மூலம் ஒரு நிமிடத்தில் போட்டோ எடுக்க முடிந்தது. இவர் தாமிரத் தட்டில் வெள்ளி முலாம் பூசி உருவங்களைப் பதிவு செய்யும் முறையைக் கண்டுபிடித்தார். பிம்பத்தை நிரந்தரமாக பதிவு செய்யும் இந்த முறையை டாகுவேரியோ வகை என்று அழைத்தனர். படங்கள் இந்த தட்டில் பதியும். ஆனால் பிரதி எடுக்க முடியாது. இதன் தொடர்ச்சியான வளர்ச்சியின் காரணமாக நகல் எடுக்கும் முறையும் வந்து சேர்ந்தது.
இவர் கண்டுபிடித்த மரத்தால் ஆன கேமரா இன்றும் இயங்கும் நிலையில் உள்ளது. இந்த கேமராவை ஒரு ஏலக்கம்பெனி ஏலம் விட்டபோது, அது 47 கோடிக்கு விலை போனது. இதுவே உலகில் அதிகமான விலை கொண்ட கேமரா ஆகும்.