முதன்முதலாக விண்வெளிக்குச் சென்று பூமியைச் சுற்றிய விலங்கு லைக்கா (Laika) என்கிற பெண் நாயாகும். சோவியத் ரஷ்யா 1957ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஸ்புட்னிக் – 2 என்கிற விண்கலத்தின்மூலம் லைக்கா என்கிற நாயை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி கண்டது. இதன்மூலம் எடையற்ற தன்மையிலும் விலங்குகள் உயிர் வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. லைக்கா என்கிற நாய் ஒரு பகுதி டெரியர் (Terrier) என்னும் இனத்தைச் சேர்ந்தது. அது 6 கிலோ எடை கொண்டது. அதற்கு 20 நாட்கள் பயிற்சி கொடுத்த பின்னரே விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அது வாழ்வதற்கு ஏற்ப ஆக்ஸிஜனும், குடிக்க நீரும், பசை வடிவில் உணவும் வைக்கப்பட்டிருந்தது. கழிவுகள் வெளியேறுவதற்கான வசதிகளும் இடம் பெற்றிருந்தன.
லைக்காவின் நடவடிக்கைகளை பூமியிலிருந்தே கண்காணிக்கப்பட்டது. லைக்கா 10 நாட்கள் உயிருடன் இருந்தது. விண்வெளிப் பயணத்திற்காக உயிர்த்தியாகம் செய்தது. விண்கலத்தை பூமிக்கு திரும்பும் வசதி அப்போது இல்லாத காரணத்தாலேயே லைக்கா விண்வெளியிலேயே இறந்துபோனது. லைக்காவிற்கான சிலை 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று மாஸ்கோவில் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.