உலகின் மிகப் பெரிய வானொலி தொலைநோக்கி ஒன்று நிருவப்பட்டு வருகிறது. இதற்கு தென்னாப்பிரிக்காவின் தென்மேற்கு பகுதியையும், ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியையும் தேர்ந்தெடுத்து செயல்படுத்தி வருகின்றனர். சீனா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்பட 20 நாடுகளின் ஒத்துழைப்புடன் பணி தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வுத்துறையில் மனித குலம் சாதிக்க போகும் மிக முக்கியமான காலடியாக இது கருதப்படுகிறது. இதில் பல ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில் 15 மீட்டர் வட்டமுடைய 3000 கோள கண்ணாடிகள் பொருத்தப்படும். நிலத்தடி கண்ணாடி இழை கேபிள் அவற்றை இணைக்கும் இத்தகைய ஒரு பெரிய கண்ணாடி தொகுதி (Mirror array) உருவாக்கப்படும். 3000 கோளக் கண்ணாடிகளைத் தொகுத்து வரிசையில் வைத்தால், அவற்றின் மொத்த பரப்பு ஒரு சதுர கிலோமீட்டராகும். ஆகவே இதனை சதுர கிலோமீட்டர் தொகுதி (Square kilometer Array) என்று அழைக்கின்றனர்.
இதன் முதல் நிலை கட்டுமான செலவு மட்டும் 650 மில்லியன் யூரோ என 2013 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை கட்டுமான செலவு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிரபஞ்சம் தோன்றிய போது ஏற்பட்ட பெருவெடிப்பு, கேலக்ஸியின் தோற்றம், நட்சத்திரங்களின் தோற்றம், வளர்ச்சி, இருள்பொருள், இருள்பொருள் ஆற்றல் ஆகியவற்றை ஆராய்தல் போன்ற பணிகளுக்காக இது நிறுவப்படுகிறது. 2019ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்.