விண்வெளியில் ஹப்பிள் என்றழைக்கப்படும் ஒரு தொலைநோக்கி பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க வானவியல் அறிஞர் எட்வின் ஹப்பிள் என்பவரின் நினைவாக அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 11,110 கிலோ எடை கொண்டது. இந்தத் தொலைநோக்கியில் சக்தி வாய்ந்த 8 அடி விட்டமுடைய கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. தரைத் தொலைநோக்கிகளைவிட 300 – 400 மடங்கு சக்தி வாய்ந்தது. இத்தொலைநோக்கியை அமெரிக்காவின் விண்வெளி ஓடம் டிஸ்கவரி மூலம் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று விண்வெளியில் ஏவினர். பூமியை சுற்றிக்கொண்டிருக்கும் இத்தொலைநோக்கியை ஒரு ஜொலிக்கும் வைரம் என்று அழைக்கின்றனர். இந்த தொலைநோக்கியை விண்வெளியிலேயே நான்குமுறை பழுதுபார்த்து சரி செய்துள்ளனர். இதனை உருவாக்க 150 கோடி அமெரிக்க டாலர் செலவானது. இது பூமியை ஒருமுறை சுற்றி வர 96 நிமிடங்கள் ஆகிறது.
ஹப்பிள் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் எழில்மிகு விண்மீன்கள், வால்மீன்கள், சுருள்மீன்கள் மற்றும் பல ஒளிமயக் கதிர் கூட்டங்களைத் தெளிவாகப் படமெடுத்து பூமிக்கு அனுப்பி உள்ளது. பால்வழி மண்டலத்தின் ஒளிக்கதிர் வீச்சின் வேகத்தையும், தூர மாறுபாட்டையும் கொண்டு பிரபஞ்சத்தின் வயதை விஞ்ஞானிகள் கணக்கிட ஹப்பிள் தொலைநோக்கி எடுத்தனுப்பிய படங்கள் உதவுகின்றன. 12 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள நட்சத்திரங்களையும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. நமது சூரியனைவிட மூன்று பில்லியன் மடங்கு பிரமாண்டமான ஓர் அண்டம் இருப்பதையும் இது காட்டியுள்ளது.