அன்பே சிவம்.
என்னடா HTML புத்தகத்திற்கான ஆசிரியர் உரையை ‘அன்பே சிவம்’ என்று தொடங்குகிறேனே என்று யாரும் பயந்து விட வேண்டாம். தற்போது ஒருசில மாதங்களாக, கடவுள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். பல புது விஷயங்களை உணர்கிறேன். நாம் அனைவரும், நம் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமைய, பணம் தேடி ஓடுகிறோம். ஆனால், ஓரே இடத்தில் பணம் குவிப்பதைவிட, தேவையுள்ளோருக்கு பகிரும் போது, அதிக சந்தோஷம் கிடைக்கிறது. இவ்வாறு பிறருக்கு உதவும் போது, நாம் ஆசைப்படும் விஷயங்கள் தானாகவே நடக்கின்றன. உதவியானது, பணமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. சரியான நேரத்தில் சொல்லப்படும், அன்பான, ஆதரவான, நம்பிக்கையூட்டும் வார்த்தைகளாகவோ, புது விஷயங்களை கற்றுத் தருவதாகவோ கூட இருக்கலாம். இவ்வாறு பகிர்வதால் கிடைக்கும் சந்தோஷத்தையே கடவுள் தன்மையாக அறிகிறேன்.
எனவே, எனக்கு மகிழ்ச்சி கிடைக்க, பணம் மட்டுமே போதுமானதல்ல. என்னிடம் உள்ளவற்றை பிறருக்கு பகிர்தல், நான் அறிந்தவற்றை பிறருக்கு கற்பித்தல் போன்றவற்றைச் செய்தாலே, நான் நினைக்கும் விஷயங்கள் இயல்பாகவே நடந்து விடுகின்றன என்பதை உணர்கிறேன்.
தமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”
என்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், என் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி.
தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் என் குடும்பத்தினருக்கும், கணியம் குழுவினருக்கும், FreeTamilEbooks.com குழுவினருக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.
து. நித்யா
நியூ காசில்,
இங்கிலாந்து.,
21 ஏப்ரல் 2015
மின்னஞ்சல்: nithyadurai87@gmail.com
வலை பதிவு: http://nithyashrinivasan.wordpress.com