"

6496b0_11b3758c8903416f8c8d94d446b67ee7.jpg_srz_p_363_241_75_22_0.5_1சின்ன வயசில் தட்டான்பூச்சியைப் பிடிப்பதற்கு கூட பயந்தது உண்டு. தட்டான்பூச்சிகள் கடிப்பது இல்லை. என்றாலும் கூட, அது விர் விர் ரென்று படபடக்கும் வேளையில், கையில் பிடித்திருக்கும் போதே அதன் சிறகுகள் விரல்களில் பட்டு,  விட்டு விட சொல்லும். சிறு கல்லை தட்டான்  கவ்வித் தூக்குவதை பார்த்து பார்த்து சிறுவர்கள் ரசிப்பார்கள்.

சாக்கடை முருகன் விடுமுறை நாட்களில் வரும் போதெல்லாம், குச்சிகள் இல்லாத தீப்பெட்டியில் பொன்வண்டை அடைத்து வருவான். அது சுவாசிக்க பெட்டியின் மேல்புறம் சிறிய ஓட்டை போட்டிருப்பான். பச்சை நிறத்தில் இருக்கும் பொன்வண்டு..கண்ணைப் பறிக்கும் அழகுடன் உள்ளே பதுங்கி இருக்கும். அந்த சின்ன இடத்தில அங்கும் இங்கும் நகரும். பச்சையும் நீலமும் கலந்த மயில் கழுத்து வண்ணத்தில் அது பார்க்கவே வசீகரமாய் இருக்கும்.

இவனுக்கு மாத்திரம் பொன்வண்டு எல்லாம் எங்கே இருந்து கிடைக்கின்றது?  வனாந்திரத்தில் சென்று தேடி எடுத்து வந்தது போல, அவன் பெரிதாய் பீற்றிக்கொள்வான். ஆனாலும், அது ஒரு சாதனை தான். அதன் பிறகு இன்றளவும், என்னால் ஒரு பொன்வண்டை பிடிக்க முடிந்ததில்லை.

பொன்வண்டின் ஊதா நிற சிறகுகளுக்குக்கீழே மெல்லிய பழுப்பு நிற சிறகு ஒன்று இருப்பதாகவும், அதனை பிய்த்து விட்டால்,அதனால் மேற்கொண்டு பறக்க முடியாது என்றும் சொல்வான் அவன். இதை எல்லாம் அவன் எங்கு கற்றுக் கொண்டான்?

அவன் சில சமயம் பேசும் போது, பறவைகளின் மொழியெல்லாம் தெரிந்தது போலவும் பேசுவான். பின்னொரு சமயம், லவ் பேர்ட்ஸ் இரண்டு கொண்டு வந்தான். அவை என்ன பேசுகின்றன என்றும் சொல்வான். இவனுக்கு மாத்திரம் எங்கே இந்த கிளிக்கூண்டுகள் எல்லாம் கிடைக்கின்றன?

பறவைகளுக்கு தின்பதற்கு என்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதைக் கூட, பால்யத்தில் அவன் அறிந்து வைத்திருந்தான். தினை விதைகள் போல, சிறிய சிறிய உருண்டைகள் கொண்ட பாக்கெட்டுகள் அவன் டவுசர் பைகளில் கிடக்கும்.

பொன்வண்டு இருக்கும் தீப்பெட்டியினை வகுப்பு நடக்கும் போது கூட, எந்த வித பயமும் இன்றி, பைக்கெட்டில் போட்டு வைத்திருப்பான். ரீசஸ் விடும் போது, அவன் தீப்பெட்டியை திறந்து தனது உள்ளங்கையில் பொன்வண்டை ஊற விடுவான். எப்படித்தான் இவனால் கூச்சம் இன்றி இருக்க முடிகிறதோ?

அவனுக்கு பல நண்பர்கள் இதனாலேயே சவ்வு மிட்டாய் எல்லாம் ஓசிக்கு  வாங்கித்தருவார்கள். வாங்கித் தரவேண்டியது உனது கடமை என்பது போல பேசுவான் அவன்.

பயமின்றி நான் பார்த்த பறவை காக்கா தான்.கீழ்  வீட்டு ஆச்சி, தினமும் காக்காவுக்கு சாப்பாடு வைத்து விட்டுத்தான் சாப்பிடுவாள். பத்திருபது காக்கைகள் வந்து அமரும். நம் பக்கத்தில் சில சோற்றுப் பருக்கைகள் கிடந்தால், அருகில் வந்து கொத்தி எடுத்து விட்டு பறக்கும். காக்கா கூட்டில், குயில் முட்டை இடும் என்று சொல்வார்கள். தனது குஞ்சு என்று கருதி அவற்றை வளர்க்கும் என்பார்கள்.

குயில் கூவுவதை கேட்க முடிந்தாலும், பொதுவாய் பார்க்க முடியாது.தனது முகத்தை மறைத்துக் கொள்ளும் என்று சொல்வார்கள். நான் திருமணம் முடிந்தபிறகு தான், எங்கள் வீட்டில் உள்ள பவளமல்லிகை  செடியின் உச்சியில் உட்கார்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன். அதுவரை நான் பார்த்தது இல்லை.

கழுகுமலை ஊரில் வசந்த மண்டபத்தில் புறாக்கள் வரிசையாய் அமர்ந்திருப்பதை பார்ப்பதே கண் கொள்ளாக்காட்சி. சாம்பலும், வெள்ளையுமான நிறத்தில் அவை மெது நடை போட்டு செல்வது அவ்வளவு அழகு. படபடவென்று அவை ஒவ்வொரு தூணுக்கும் பறப்பது இன்னும் அழகு. வசந்த மண்டபத்திற்கு அழகூட்டுவதே இந்தப் புறாக்கள் தாம்.

கோவில் கோபுரங்களும், புறாக்களும் பிரிக்க முடியாத சங்கதிகள் தான்..கோவிலின் திட்டி வாசலில் இவை குடியிருக்கும். பாழடைந்த சேரன்மகாதேவி சிவன் கோவில் மண்டபத்தில் வெவ்வால்கள் குறுக்கும் மருக்கும் பறந்தாலும், அங்கேயும் புறாக்களின் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. சேர்மாதேவி சுப்பையா அங்கே கூப்பிட்டுப் போய் தான், தனது கதைகளை சொல்வான். மனிதர்களை விடவும் பறவைகளை நேசிப்பவன் அவன்.

பெயர் தெரியாத பறவை என்று சொன்னால் அவன் சிரிப்பான்.

“தெரியாட்டாலும் , பார்த்த பொறகு அது என்ன பறவை ன்னு கேட்டு தெரிஞ்சுக்கணும்ல சார்..” என்பான். உண்மை தான்.எவ்வளவு நாள் தான் பெயர் தெரியாத பறவை..பெயர் தெரியாத பூ என்று சொல்லிக் கொண்டு இருப்பது?

திருப்பத்தூரில் வேலை பார்த்த போது,  தங்கி இருந்த விட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தான் எத்தனை எத்தனை வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்திருக்கிறேன். எத்தனை வகைகள்..ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில். இயற்கையின் அந்த வர்ண சேர்க்கை அபூர்வமானது. சலிப்பு தட்டாத நிறங்கள்..ஒன்றைப் போல ஒன்று இல்லை.

பாரதி சொல்வது போல, பறவைகள் போல பறந்து சென்று இந்த உலகை மானுட ஜென்மம் பார்க்க முடியாது தான். பறவைகள் நம்மை அற்பமாக பார்க்கும் என்று சொல்லி இருப்பார்.

வலசை போகும் பறவைகள் 5000,6000 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட போவதுண்டு. சைபீரியக் காடுகளில் இருந்து பயணித்து வரும் பறவைகள், இரண்டு மாத இடைவெளியில், இங்கே உள்ள கூந்தன்குளம் வந்து, ஒரு குறிப்பிட மரக் கிளையில் உட்கார்ந்து குஞ்சு பொரித்து விட்டு செல்லும். மீண்டும், ஒரு வருட இடைவெளியில் அதே இடத்தை கண்டடைந்து அதே மரக்கிளையில் தான் முன்பு உட்கார்ந்த அதே மரக் கொப்பில் உட்காரும் இயல்பு கொண்டவை. மனிதனை விடவும் விலங்குகளுக்கும், பறவை இனங்களுக்கும் மோப்ப சக்தி அதிகம் தான்.

எப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறதோ, அதை முன்பே அறிந்து பறவைகள் இடம் பெயரும் அதிசயம் இன்றும் நிகழத்தான் செய்கிறது.

பறக்கும் ஆசை யாருக்குத்தான் இல்லை. எல்லா மனிதர்களாலுமா வானில் பறக்க முடிகிறது. வசதி உள்ளவர்கள் மட்டும் தான். ஆனால், பறவைகள் அப்படி இல்லை. நினைத்த மாத்திரத்தில், சிறகு விரித்தபடி, எண்ணிய இடத்திற்கு பாஸ்போர்ட், விசா, ரூபாய் நோட்டுக்கள் இன்றி கண்டம் விட்டுக் கண்டம் போக முடிகிறது. நினைத்த இடத்தில், நினைத்த மரத்தில் உட்கார்ந்து இளைப்பாற முடிகிறது.

பறவைகளின் மொழிதெரிந்தவன் பாக்கியசாலிதான். அவர்களின் உலகம் தனி உலகம் தான். வனாந்திரத்தில் எதிரொலிக்கும் பறவைகளின் சங்கீதம் ஏதேதோ சொல்கிறது. மனிதர்கள். நமக்குத்தான் எதுவும் புரியமாட்டேன் என்கிறது.

  • இரா.நாறும்பூநாதன், எழுத்தாளர்
  • narumpu@gmail.com

License

Icon for the Public Domain license

This work (இல்லம் மாத இதழ் - 2 by illammonthly) is free of known copyright restrictions.

Share This Book