பலூன்களையும் பறவைகளையும் குழந்தைகளை விட வேறு யாராலும் அதிகம் ரசித்து விட முடியாது. வெடிக்காத பலூன் பறவையென்றால், பலூனை வெடிக்கிற பறவையெனச் சொல்லலாம். தொடர்ந்து காத்து வருகிற குழந்தை மனத்தால் மட்டுமே பலூன்களையும், பறவைகளையும் பார்த்தமட்டில் கொண்டாடித் தீர்க்க இயலும். தற்கொலை, தற்கொலை, தற்கொலை என வாழ்க்கையைச் சாகடிக்கத் துடிக்கும் சில்வியா பிளாத்தின் கவிதைகளில் பலூன்கள் சிரித்தபடி பறந்து கொண்டிருக்கும்.
குழந்தைகள் பலூனையும், பறவையும் ஒரே போலத்தான் பார்க்கிறார்கள். பலூனை ஊதி கொஞ்ச நாள் விளையாடி விட்டு பின் பறக்க விடுவார்கள். பறவைகளை கூண்டிலிட்டு கொஞ்ச நாள் விளையாடிய பின், அவற்றைப் பறக்கவிட ஆசை வந்துவிடுகிறது குழந்தைகளுக்கு. பலூன் பறந்து உடைபடுதலை கண்ணீரிலும், பறவை பறந்து விடுபடுதலை பரவசத்திலும் எய்துகிறார்கள்.
நம் இந்தியாவின் வெள்ளை புல் புல் சலீம் அலி (மக்கள் அவரை அப்படித்தான் அழைத்தார்கள்) குழந்தை பருவத்திலே பறவைக் காதலை துவங்கியவர். 1900களில் புவிச்சூடு தணிக்க மரங்களைக் காப்போம், பறவையைப் பேணுவோம், பல்லுயிர் பேணுவோம் என்பன போன்ற முழக்கங்களற்ற காலகட்டம். வேட்டைக்காரர்கள் உயர்ந்தவர்களாகவும், வேட்டையாடுதல் பெருமையாகவும் போற்றப்பட்ட ஆண்டுகள் அவை. நம் பறவை நாயகர் சலீம் அலிக்கும் தான் ஒரு வேட்டைக்காரனாக வந்துவிட மாட்டோமா என்று தீராத ஆசை. மாமா வாங்கிக் கொடுத்த காற்றுத் துப்பாக்கிகளுடன் வேட்டைக்குச் செல்லும் சிறுவர் சலீம் டுமீல் டுமீல் சத்தத்துடன் ஒரு பறவையையாவது பிடித்து விட்டுத்தான் வீடு திரும்புவார்.
அந்த வேட்டைக்கார சிறுவன் சலீமை பறவையியலாளர் சலீம் அலியாக மாற வைத்தது ஒரு நிறம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இரவு ஏன் கருப்பாக இருக்கிறது என்பதில் தொடங்கி பகல்கள் ஏன் வெள்ளையாக நீள்கிறது என்கிற கருப்பு வெள்ளை ஆட்டத்தில்தான் உலகமே இயங்குகிறது. இடை இடையில் ஒரு குட்டிப் பூ, வயல்வெளி, நீலமேகம், வயதுப்பெண்கள், பிறந்த குழந்தையின் முதல் பீ வாழ்க்கைக்கு தன் நிறத்தைப் பூசிப் பார்த்துக் கொள்கின்றன.
சலீமை மாற்றிய அந்த நிறம் மஞ்சள். அது ஒரு குருவியின் கழுத்து நிறம். மஞ்சள் குருவி. “இது நாம வழக்கமா பாக்குற குருவி இல்லயே”என்ற கேள்விதான் தேடலாகி இன்று அவரைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஒரு கேள்வி எல்லாவற்றையும் மாற்றி விடும். ஒரு தேடல் பல கேள்விகளை கேட்டு விடும். தொடர்ந்து பல பறவைகளையும், அவற்றை எவ்வாறு உற்று நோக்குவது என்ற யுக்திகளையும் அறிந்த சலீம் அலி வளர்ந்து பெரிய பறவையியலாளரான பிறகும் கூட ஒரு பறவையை முதல் தடவை பார்த்தால் எப்படிப் பார்ப்பாரோ அதே பரவசம், ஆர்வத்தோடுதான் வாழ்க்கை முழுவதும் பார்த்து வந்தார்.
பர்மாவில் மாமாவின் வியாபாரத்தை சிறிது நாள் செய்து வந்த சலீம் அலியின் ஆர்வத்துக்கு அந்த வேலை தீனி போடவில்லை. கடைக்கு மரம் வெட்டச் செல்லும்போது கூட அவரது கண்கள் பறவைகளைத் தான் தேடின.
பின்னாட்களில் வெளிநாடு சென்று பறவையியல் குறித்த நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டு இங்கு வந்து அதை செயல்படுத்த முனையும்போது கூட பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் அப்போதைய நிதி நிலைமை உதைத்தது. “எனக்குச் சம்பளம் வேண்டாம், என் வேலைக்கு, ஆய்வுக்கு தேவையானதை மட்டும் செய்துகொடுங்கள், நான் எங்கோ கற்ற கல்வி நம் நாட்டிற்கு பயன்படாவிட்டால் என்ன பயன்” என்று சம்பளமே வாங்காமல் வேலை பார்த்து பின்னாளில் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்துக்கே நிதி உதவி அளித்தார். அவர் எழுதிய புத்தகங்கள் அதிகமாக விற்றுத் தீர்ந்து கல்லா நிரப்பியது இதற்கொரு காரணம் எனலாம்.
தொடர்ந்து கடிதம் எழுதும் பழக்கம் உள்ளவர் சலீம் அலி. நேருவும் கூட இவரது கடிதப் போக்குவரத்தில் திளைத்திருந்திருக்கிறார். இரவு படுக்கை அறையை விட வராண்டாக்களிலேயே அதிகம் விரும்பிப் படுப்பார். காரணம் காலையில் காதில் பாடி எழுப்பும் பறவைகள் தான். தன் வாழ்நாளில் கடைசி வரை ஐஸ்கிரீம், சாக்லேட், மாம்பழம் இவை மூன்றையும் விரும்பி உண்டிருக்கிறார். இவை மூன்றும் அதிகம் விரும்பப்படும் குழந்தை உணவுகள். முதலில் சொன்னது போல அந்த குழந்தை மனம் தான் தொடர்ந்து சலீம் அலியை பறவையிலாளராக இயக்கியிருக்கிறது என்பதற்கு சலீம் அலி சாப்பிட்ட ஐஸ்கிரீமையும், சாக்லேட்டையுமே சாட்சியாகச் சொல்லலாம்.
ஆர்வம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு சலீம் அலியின் வாழ்வில் நடந்த பின்வரும் சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். இந்தியாவின் முதல் பறவையியலாளர் சலீம் அலியை பேட்டியெடுக்க நிருபர் ஒருவர் வந்திருந்தார். வயது முதிர்ந்த சலீம் அலிக்கு காது சரியாக கேட்கவில்லை. கேள்வியைத் திரும்ப திரும்ப கேட்கச்சொன்னார். திடீரென்று அவரது முகம் பிரகாசமானது. தோட்டத்தில் இருந்த மரத்தின் மீது அவரது பார்வை பதிந்தது.
“அந்தச் சத்தத்தைக் கேட்டீங்களா? அதுதான் பர்பெட் குருவியின் குரல்”
அந்த நிருபர் அசந்துபோனார். முதுமையால், அருகிலேயே அமர்ந்து கேட்கும் நிருபரின் கேள்விகள் சரியாகக் கேட்கவில்லை. ஆனால், மரத்தின் கிளைகளுக்கு இடையே தன்னை மறைத்துக்கொண்டு பேசும் ஒரு பறவையின் குரல் அவருக்குத் துல்லியமாகக் கேட்கிறது. ஒரு மனிதனுக்குத் தன் துறையில் எவ்வளவு ஆர்வம் இருக்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.
பறவைகளைப் பற்றி புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட கிராமத்து மக்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது மிகவும் பயனுடையது என்று உணர்ந்தவர் சலீம் அலி. பறவைகள் வலசை போவது குறித்தும், அழிந்த பறவையினங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்திருக்கிறார்.
“ஒரு பறவை உயிரோடு இருக்கும்போது மரக்கிளையில் வாழ்கிறது. உயிர் போன பிறகு உணவுமேசையில் பரிமாறப்படுகிறது. ஆராய்ச்சிக்காக அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்ட நிலையில் காட்சி தருகிறது. இவற்றுக்காக ஒரு பறவையைப் பாராட்டலாம். ஆனால் மனிதனின் நிலை அப்படிப்பட்டதல்ல” என்பது சலீம் அலியின் கூற்று.
பறவைகளைத் தன் “இறக்கைத் தோழர்கள்” என்கிறார். பறவைகளை உற்று நோக்குவதற்கு உங்களுக்கு வேண்டியது எல்லாம் ஒரு பைனாக்குலர், குறிப்பு நோட்டுப் புத்தகம், ஒரு பென்சில், இவற்றோடு பொறுமையும், ஆர்வமும் என்று சொல்லிச் சிரிக்கும் சலீம் அலி இறப்பதற்கு முன்பு கூட “நான் பறவைகள் பாடத்தின் மேற்பரப்பை மட்டுமே தொட்டிருக்கிறேன். ஆகவே இறப்பதற்கு விரும்பவில்லை” என்றார்.
ஆய்வுக்காக சில பறவைகளைக் கொல்ல வேண்டி வரும் சமயங்களில் அதையும் செய்திருக்கிறார். ஆனால், பறவைகளை கொல்ல வேண்டாமென சமஸ்தான மன்னர்களுக்கு எடுத்துச்சொல்லவும் செய்திருக்கிறார். ஒரு மன்னன் ஒரு நாளைக்கு எத்தனை பறவைகளை வேட்டையாடித் தீர்க்கிறான் என்ற சர்வேக்கள் செய்து பல திடுக்கிடும் உண்மை புள்ளி விவரங்கள் வாயிலாக பல இடங்களில் பறவைகள் சரணாலயம் கொண்டுவர வழிவகுத்தார்.
தெஹ்மியா என்ற அவரது மனைவியின் பெயரையும், சலீம் அலியின் பெயரையும் பல பறவைகளுக்கு துணைப்பெயர்களாக சூட்டியிருக்கிறார்கள். இரவு பன்னிரண்டு மணி. தெரு விளக்கு அணைந்து அணைந்து எரிகிறது. நீங்கள் மட்டும் தான் தெருவில். உங்கள் மனசு சுட்டிக் காட்டும் சில கற்பனைப் பேய்கள். பாகைமானியில் சுழற்றிய வட்டம் போல சுற்றி ஊளையிடும் நாய்கள். நினைத்துப் பார்க்கவே பயம் பரவும் சூழல்.
நம் பறவை நாயகர் சலீம் அலியின் வாழ்விலும் இப்படியொரு சூழல். இரண்டு திருத்தம் என்னவென்றால் தெருவுக்கு பதில் அடர்காடு. நாய்க்குப் பதில் காட்டுப்புலி. பறவையை ஆராய வேண்டிய இடத்தில் கார் பழுதானதால் நடந்த நிகழ்விது. ஆறு மணி நேரம் எப்போது புலி வருமோ என்று பயந்துகொண்டே காட்டைக் கடந்த நேரம் தன் வாழ்நாளின் மிகுந்த பதட்டமான மறக்கமுடியா நேரம் என்று சலீம் அலி குறிப்பிடுகிறார். இதே போல் மலையேறும் போது உச்சியிலிருந்து உருளப்பார்த்ததையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
மலையேறும் வீரர்களுக்கு ஒரு வித்தியாசமான வேண்டுகோள் விடுத்தார் சலீம் அலி. “நீங்கள் சாகசத்துக்காக மலையேறி விட்டு திரும்பி விடுகிறீர்கள்; நீங்கள் ஒவ்வொருவரும் அதோடு நின்றுவிடக் கூடாது. மலையைத் தாண்டியும் பறவைகள் உள்ளன. அவைகளை ரசிக்க வேண்டும், ஆராய வேண்டும்.. அதற்கு எங்கள் ஆராய்ச்சி நிறுவனம் எப்பொழுதும் உங்களுக்கான உதவியையும், பயிற்சியையும் வழங்கக் காத்திருக்கிறது என்றார்.
அன்றைய சமூகத்தில் இரண்டு மாறுபாடுதல்களை ஏற்படுத்தி விட்டுச்சென்றிருக்கிறார் சலீம் அலி. ஒன்று பறவை வேட்டையாடுதலை மாற்றி பறவை சரணாலயங்கள் அமைக்கும் அளவுக்குக் கொண்டு வந்தது. இரண்டு மலையேறும் வீரர்களின் உடல் வலிவுடன் பறவை ஆராய்தல் குறித்த அறிவு வலிவையும் உண்டுபண்ணியது.
சலீம் அலி மிகச் சிறந்த பறவையியலாளராக இருக்கலாம், சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கலாம், திறமைசாலியாக இருக்கலாம். ஆனால் அவரை அதிகம் பிடிக்கக் காரணம் சலீம் அலி என்ற தனிப்பட்ட ஆளுமை தான். ஒரு மனிதனின் நல்ல குணமும், அன்பும் தான் அவனை தூக்கி நிறுத்துகிறது. வயிற்றை நிரப்ப காசைத் துரத்திச் செல்லும் கல்விச் சூழலுக்கு மத்தியில் மனதை நிரப்ப கனவுகளைத் துரத்திச் செல்லுவதே இன்னொரு சலீம் அலியை உருவாக்க முடியும். அதுவே, சலீம் அலிக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையும் கூட.
- திவ்யா
- kavipuyalmammu@gmail.com