"

சீக்கிரமே கிளம்பியும் ஊருக்குள் போகிற முதல் பேருந்தைப் பிடிக்கமுடியாமல்போனது. காத்துச்சலித்து கடைசியில் வாய்த்த பேருத்தில் தொத்திக்கொண்டு காடன் குளம் சென்று, இரண்டு கிலோமீட்டர் நடைக்குச் சிக்கனப்பட்டு, ஒரு அண்ணாச்சியிடம் வார்த்தையைப் பிடுங்கி, பைக்கில் லிஃப்ட் கேட்டு கூந்தகுளம் ஊருக்குள் (அதாவது கூந்தகுளம் பஸ் ஸ்டாப்புக்கு) போய்ச்சேர்ந்தேன். அங்கேயிருந்து, லிஃப்ட் கொடுத்த முருகன் அண்ணாச்சியின் மகன் வழித்துணையோடு கூந்தகுளம் கரைக்குப் போனேன்.

 (அதிகமான போக்குவரத்து வசதியில்லாதவரையிலேயே ஓர் ஊர் கிராமமாக இருக்கும்.)

 தான் நட்ட மரத்தின் நிழலிலேயே பெஞ்சில் சாய்ந்து பறவைகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பிசியாக இருந்தார் பறவை மனிதர். இளிச்சவாய் சகிதம் அவரை அணுகி அவரைத் தொல்லைசெய்யத் தொடங்கினேன்.

 *

 வணக்கம்!

 ஒரு பறவை இனத்தில், ஆண் எப்படி இருக்கும் பெண் இப்படி இருக்கும்? எந்த மாதம் கூடுகட்டும்? கூட்டினுள் குஷணாக எதை வைக்கும்? இணைசேர்ந்த பிறகு எத்தனை நாளில் முட்டையிடும்? முட்டை என்ன நிறம்? முட்டையை ஆண் அடைகாத்தால் பெண் என்ன செய்யும்? பெண் அடைகாத்தால் ஆண் என்ன செய்யும்? எத்தனை நாளில் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும்? வெளிவந்த குஞ்சு கண்விழிக்க எத்தனை நாட்களாகும்? ரோமங்கள் என்ன நிறம்? குஞ்சுக்குத் தாய் என்ன உணவு ஊட்டும்?

 ஒரு பறவையின் பெயரைச் சொன்னாலே போதும், இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார் பறவை மனிதர் பால்பாண்டி.

 ஒரு நூறு பறவைகளின் திருநாமங்களை திக்கில்லாமல், ரகரகமாகப் பிரித்து ஒப்பித்து அசத்துகிறார்.

 சரி, போதும்.

 தொடர்வது….

பறவை மனிதரிடம் நான் கேட்டுக்கொண்டவவையும் தெரிந்துகொண்டவையும்.

கடைசியாக ஒரு வார்த்தை.

நன்றி.

 *

 பறவைகள் மீது உங்களுக்கு ஈடுபாடு உண்டாக காரணமாக இருந்தது எது? 

சின்ன வயது முதலே எனக்கு பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு பன்னிரெண்டு வயதானபோது, அப்பாவிடம் அடிவாங்கிய கோபத்தில் பூட்டியிருந்த ஒரு வீட்டு வாசலில் போய் தனியாக உட்கார்ந்திருந்தேன். அந்த வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு மரத்தடியில் சில செங்கால்நாரை குஞ்சுகள் கிடந்தன. கூட்டிலிருந்து தவறி கீழே விழுந்த குஞ்சுகளை எடுத்து அவற்றுக்கு உணவளித்து காயத்திற்கு மருந்தும் இட்டேன். கொஞ்சகாலம் அந்த குஞ்சுகள் என் பாராமரிப்பில் தான் இருந்தன. பிறகு, அவற்றின் கால்கள் குணமாயின. அந்த சம்பவத்திற்குப் பிறகு எனக்கு பறவைகள் மீது பிரியம் அதிகமானது.

நான் பள்ளிக்கூடம் போகும் போது நடந்தேதான் போவேன். போகும்போதும் வரும்போதும் ஆறு, ஆறு கிலோமீட்டர் நடந்து முனைஞ்சிபட்டி பள்ளிக்குப் போவேன். அப்போது என்னோடு படித்தவர்கள் எல்லோரும் சைக்கிளில்தான் பள்ளிகூடம் போவார்கள். நான் மட்டும் நடந்துபோவேன். ஒருநாள்  என் அப்பா என்னிடம், ‘எல்லாரும் சைக்கிள்ல பள்ளிகூடம் போறாங்க. உனக்கும் சைக்கிள் வாங்கித்தரேன். நீயும் சைக்கிள்ல போயேன்?’ என்று சொன்னார். நான் அப்போது ஒரு பொய் சொன்னேன். ‘சைக்களில் போனால் படிக்க முடியாது. பேசிக்கிட்டேதான் போவோம். நடந்தே போனா அன்னக்கி பாடத்த அன்னக்கே படிச்சிருலாம். அதனால, நான் நடந்தேன் போறேன். சைக்கிள் வேண்டாம்’ என்று கூறி முறுத்துவிட்டேன்.

அப்படி தினமும் நடந்து பள்ளிக்கூடம் போய்விட்டு வரும்போது வழியிலுள்ள கிணற்றில் மீன் பிடித்துக் கொண்டுவந்து அடிபட்ட பறவைகளுக்கும் குஞ்சுளுக்கும் உணவளிப்பேன்.

பள்ளிப்படிப்பிற்குப் பிறகு உங்கள் பணியனுபவம் பற்றி? 

பதினோறாம் வகுப்பு வரையில் படித்தபிறகு, வேலை தேடி குஜராத்திற்குப் போய்விட்டேன். அங்கே வெல்டிங் வேலை கற்றுகொண்டேன். பின், வாஷிங் பவுடர் நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கேயும் எனக்கொரு நல்ல பெயர் கிடைத்தது.

அந்தப் பகுதியில் ‘போர்’ என்ற அபாயகராமான பாம்பு உண்டு. ஒருநாள் வேலையில் இருந்தபோது அந்தப் பாம்பு வந்துவிட்டது. எல்லோரும் பயந்து ஓடினார்கள். ‘போர்… போர்…’ என்று அரற்றினார்கள். நான் அந்தப் பாம்பை அடித்துகொன்றேன். அதனால், என்மீது அங்குள்ளவர்களவர்களுக்கு நல்மதிப்பு ஏற்பட்டது.

அங்கே நான் வேலைபார்த்த இடத்தில் நிறைய குரங்குகள் உலவும். ஒருநாள் வேலை முடிந்து வீடு திரும்பும்போது, நிறைய குரங்குகள் ரயில்தண்டவாளத்தை வேகமாகக் கடந்துகொண்டிருந்தன. ஒரு குரங்கு மட்டும் மடியில் குட்டியுடன் தண்டவாளத்தில் கால் மாட்டிக்கொண்டு தவித்துக்கொண்டிருந்தது. அதே சமயம் ரயில் அந்த இடத்தை நெருங்கிவிட்டிருந்தது. உயிரைத் துச்சமாக மதித்து முயற்சி செய்ததில் குட்டியை மட்டுமே என்னால் காப்பாற்ற முடிந்தது. அந்த குட்டியை நானே வளர்த்தேன். ராமா என்று பெயர் வைத்திருந்தேன்.

திருமணமானத்திற்காக குஜராத்தில் வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வரலாமென்கிறபோது அந்த குரங்கை என்னோடு கூட்டிவர முடியவில்லை. பிறகு ஒரு வருடம் களித்து ராமாவைப் பார்பதற்காகவே குஜராத் போனேன். அங்கே விசாரித்து, எவ்வளவோ தேடியும் ராமாவைக் காணவில்லை. நான் சோர்வாகத் திரும்பி நடந்தபோது, திடீரென எங்கிருந்தோ வந்து என் கையைப் பற்றிக்கொண்டான் ராமா. அப்போது ராமாவைத் தூக்கிவைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தினேன்.

‘அன்பை மறக்காத பறவைகளும் விலங்குகளும் மனிதர்களைவிட மேல்’ என்று அப்போதே என் மனசில் ஊன்றிக்கொண்டேன்.

உங்களுடைய பறவைகள் மீதான ஈடுபாட்டுக்கு பக்கபலமாகவும் ஊக்க சக்தியாகவும் விளங்கியவர்(கள்)?

‘பறவைகளுக்காக நாம நம்மை வாழ்க்கையை தியாகம் செய்வோம். அதற்காக நான் உங்களுக்கு துணைநிற்பேன்’ என்று என்னிடம் சொன்னது என் மனைவிதான். என் மனைவி கொடுத்த ஊக்கத்தினால்தான் பறவைகள் மீது தீராத நாட்டம் கொண்டேன்.

என் மனைவி இறந்ததும் பறவைக் காய்ச்சலால் தான். கீழே விழுந்து அடிபட்ட பறவைகளுக்கு வாயில் இரத்தம் கட்டி நின்று சுவாசிக்க சங்கடப்படும். அப்போது அந்த பறவையின் வாயில் நமது வாய் வைத்து ஊதிவிட்டால் மூச்சு சீராகி பறவை பிழைத்துவிடும். இதைத் தொடர்ந்து செய்துவந்ததால்தான் என் மனைவிக்கு பறவைக்காய்ச்சல் கண்டது. அவரது உயிரையும் பலிகொண்டது.

மனைவி இறந்த பிறகு, நீராட்டும்போது ஒரு பறவை வந்து உடல் மீது வந்து அமர்ந்துகொண்டது. நகரவே இல்லை. ‘நம்ம அம்மா நம்மள விட்டுப் போறாங்க. அவங்களுக்கு நம்ம கடமைய  செய்யணும்’ என்று அந்த பறவை என் மனைவி வைத்த பாசத்தை அப்படி வெளியிட்டது. அதற்குப் பிறகு, என் மனைவியைப் பற்றிய ‘வள்ளித்தாய்’ என்கிற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வெளியானது. அதில் நானும் நடித்தேன். என்னோடு கேரளத்து டான்ஸ் மாஸ்டர் கலாவும் நடித்தார்கள். அந்தப் படத்திற்கு மொத்தம் 13 விருதுகள் கிடைத்திருக்கின்றன.  அந்தப் படித்தில் ஒரு பாடலும் நான் பாடியிருக்கிறேன். என் மனைவி இறந்தபோது பாடுவதாக அமையும் பாடல். இப்போது கேட்டாலும் எனக்கு அழுகை வரவழைக்கும் உருக்கமான பாடல் அது.

கூந்தகுளத்துப் பறவைகள் பற்றி தெரிந்துகொள்ள யாரெல்லாம் உங்களை அணுகுகிறார்கள்? 

நிறைய பள்ளிக்கூடங்களிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் மாணவ மாணவிகள் வருகிறார்கள். வனத்துறையிடம் அனுமதிபெற்றுக்கொண்டால், இங்கேயே அவர்களுக்கு சிற்றுண்டிக்கும் தங்குமிடத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும். 24 அடி உயரத்தில் Watch Tower லிருந்து பறவைகளைப் தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்.

ஆராய்ச்சிப் படிப்பிற்காக நிறைய பேர் என்னிடம் பயிற்சிபெற வருகிறார்கள். இங்கேயே என்னோடு தங்கியிருந்து அல்லது தினசரி வந்துபோய் அவர்கள் தங்களுக்கு வேண்டியதை அறிந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு என்னாலான உதவிகளைத்தான் நான் செய்துவருகிறேன். பயிற்சிக்காக வரும் பெண்கள் தினசரி இங்கே வரும் அவசியத்தைக் குறைப்பதற்காக நானே  பறவைகள் பற்றிய குறிப்புகளை நாள்தோறும் எழுதிவைத்து அவர்களிடம் கொடுத்துவிடுவேன். அப்படி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் காசு வாங்கமாட்டேன். பறவைகளை கவனிப்பதற்காக பைக்கில் அலையவேண்டியிருக்கும். அதற்காக அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை வாங்கிக்கொள்வேன்.

கூந்தகுளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின்னணியைப் பற்றி…. 

அப்போது குளத்தில் பறவைகள் இல்லை. ஊருக்குள் மட்டுமே இருந்தன. மரங்களிலெல்லாம் பறவைகள் கூடடைந்திருந்தன. கலெக்டர் தனவேல், கலெக்டர் பிந்துமாதவன் மற்றும் வனத்துறையிலிருந்த மங்கள்ராஜ் ஜான்சன் ஆகியோர்தான் அதற்கு முக்கியக்காரணம்.

கிராம மக்கள் இங்குள்ள பறவைகளுக்காக எந்தமாதிரியான ஒத்துழைப்புகள் செய்கிறார்கள்?

பறவைகளைப் பார்க்க வருபவர்களை யாரும் தடுப்பதில்லை. ஆனால், பறவைகளுக்குத் தீங்குவிளைவிக்க மக்கள் யாருமே அனுமதிபதில்லை. பறவைகளுக்காவே  கிராம மக்கள் யாரும் வெடி வெடிப்பது கிடையாது. அதைத்தான் ‘தை மாசம் பிறந்துவிட்டால் தம்பட்டமும் அடிக்கமாட்டோம். மேளத்தையும் தட்டமாட்டோம். ஒலிபெருக்கியும் எழுப்பமாட்டோம்’ என்று பறவைகள் பாடலில் நான் சொல்வேன்.

பறவைகளைக் கண்போல காத்துவரும் மக்கள் யாருன்னா…. அது கூந்தகுளத்து மக்கள்தான்.  ஆங்காங்கே பல வீடுகளின் முற்றத்தில் இறக்கை, காலில் அடிபட்ட பறவைகள் தரையில் உலவுவதைப் பார்க்கலாம். நானும் அவைகளைப் பார்க்கும்போது ஏதாவது தின்பதற்கு வாங்கிப்போடுவேன்.

பறவைகளை தெய்வமாக மதித்து நேசிப்பவர்கள் கூந்தகுளம் மக்கள்தான். அந்த அளவிற்கு பறவைகளுடன் இங்குள்ள மக்களின் உறவு பிணைந்திருக்கிறது.

பறவைகள் வரும் காலத்தை வைத்து மழை வரத்தைக் கணிக்க முடியுமா? 

இயற்கை வானிலை மாற்றங்களை பறவைகள் விலங்குகள் தெரிந்துகொண்டுவிடுகின்றன. ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம்தான் பல இழப்புகளைச் சந்திக்கிறோம்.

தைப்பூசத்தன்று பறவைகள் முள்ளெடுத்துக்கூடுகட்டினால் அந்த ஆண்டு ஊரில் நல்ல மழை பெய்து செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல, சரியாக ஆடி அம்மாவசையையொட்டி எல்லா பறவைகளும் திரும்பிப்போய்விடும்.

கோழி மண்ணில் உருண்டு பிறண்டு ஒரு மாதிரியாக நடந்துகொள்ளும். பொதுவாக, பறவைகள் எல்லாமே இறக்கையை நன்றாக விரித்து நிற்கும். அப்படி இறக்கையை விரித்துநின்றதென்றால், மழை வரப்போகிறதென்று அர்த்தம்.

சாண்ட் பைப்பர் (Sand Piper) வந்துவிட்டால் மழைவருமென்று அர்த்தம். இப்போது நிறைய  சாண்ட் பைப்பர் வந்திருந்தன. இந்தமுறை இங்கே தண்ணீர் குறைவாக உள்ளதால், நிறைய பறவைகள் பெங்குளத்திற்குச் சென்றுவிட்டன.

இங்குள்ள தரையில் கூடுகட்டும் பறவைகள் பற்றி? 

Yellow wattled lapwing, Red wattled lapwing, River lapwing, Gray head lapwing, White lapwing என்று ஐந்து வகைகள் உண்டு. தமிழில் அவற்றை ஆட்காட்டி என்று சொல்வோம்.

கெண்டிஸ் ஃப்ளவர் கூட்டை இந்த ஆண்டுதான் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த கூட்டை புகைப்படம் எடுத்து திருவனந்தபுரம் கோட்டை தம்பிராட்டி அம்மா தான்.

பிறகு, Blackwinged stilt, Little ringed plover, Painted snipe…. இதெல்லாமே தரையில் கூடுகட்டும் பறவைகள்தான்.

இங்கே வரும் பறவைகளில் அருகிவரும் இனம் என்று எவற்றையாவது சொல்லமுடியுமா? 

குறையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கூடத்தான் செய்கின்றன. மரங்கள் இன்னும் ஏராளமாக நடவேண்டும். ஏனென்றால், அதிக அளவில் பறவைகள் வருகின்றன. வரும் பறவைகளுக்கு கூடுகட்ட மரம்போதவில்லை. ஊருக்குள்ளே முள் மரங்கள் அதிகமாக உள்ளன. அவற்றைப் பிடுங்கிவிட இந்த வருடம் ஏற்பாடு நடந்தது. நான்தான் அவற்றைப் பிடுங்கவேண்டாமென்று தடுத்துவிட்டேன். மரங்கள் நிறைய வைத்து வளர்ந்த பிறகு இப்போதுள்ள முள் மரங்களை அழித்துக்கொள்ளலாம். இருக்கும் மரமும் இல்லையென்றால், பறவைகள் எங்கேபோய் கூடுகட்டும்?

அடிபட்ட பறவைக்கு மருத்துவம் பார்க்கும் பால்பாண்டி (படம்: மாணிக்கம்)
அடிபட்ட பறவைக்கு மருத்துவம் பார்க்கும் பால்பாண்டி (படம்: மாணிக்கம்)

புதிய பறவைகள் கூந்தகுளத்திற்கு வந்திருப்பதை எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள்? 

எனக்குத் தெரியாத புதிய பறவை எதையாவது பார்த்தால், உடனே சலிம் அலியுடைய புத்தகத்தை எடுத்துப் பார்ப்பேன். அதில் இன்ன பறவை இன்ன இடத்தில் தான் கூடுகட்டும் என்று தெளிவாக போடப்பட்டிருக்கும். அதைப் பார்த்துவிட்டு, பறவை பின்னாலேயே தொடர்ந்து சென்று எங்கே கூடுகட்டுகிறதென்று பார்த்துவிடுவேன். தினமும் இங்குள்ள பறவைகளை கவனித்து குறிப்பெழுதிவைத்துக்கொள்வேன். பெரும்பாலும் எந்த பறவை எங்கே கூடுகட்டும் என்று எனக்குத் தெரியும். போன ஜென்மத்தில் பறவையாகப் பிறந்திருப்பேனோ, என்னவோ, தெரியவில்லை.

எந்தெந்த நாடுகளிலிருந்து பறவைகள் இங்கே வருகின்றன? 

பெரும்பாலும் சைபீரியாவிலிருந்துதான் வருகின்றன. தவிர, மங்கோலியா, ஜெர்மனி, லடாக் போன்ற நாடுகளிலிருந்து வருகின்றன. ஆனால், சைபீரியாவிலிருந்து வருபவைதான் மிக அதிகம். அவற்றிற்குத்தான் இந்த இடம் முக்கித்துவம் வாய்ந்தது.

Ducks அக்டோபர் மாதம் வந்து மார்ச் கடைசிக்குள் போய்விடும். தாய்நாட்டில் பனிக்காலம் தொடங்கியதும் தண்ணீருக்காக இங்கே வரும் பறவைகள் முட்டையிடும் காலம் வந்ததும் தாய்நாடு திரும்பும்.

குருவிகள் அழிந்துவருவது பற்றி…. 

முன்னெல்லாம் வீடுகள் கூறை வீடுகளாகவும் ஓட்டு வீடுகளாவும் இருந்தன. இந்த வீடுகள் குருவிகள் கூடுகட்ட ஏற்றதாக இருக்கும். இப்போது கான்கிரிட் வீடுகள்தான் இருக்கின்றன. வீட்டு வாசலில் நெல்லைப் போட்டு அரிசிக்குக் குத்துவார்கள். அப்போது சிதறும் நெல்மணிகளை கொத்துவதற்கு குருவிகள் வரும்.

கதிர்வீச்சு முலமாக குருவிகள் அழியும் என்பது சரிதான். நாலில் ரெண்டு முட்டை கதிர்வீச்சில் பாதிப்படைகின்றன.

டிவிஸ் மூலமாக திருக்குறுங்குடியில் வீடுதோறும் குருவி கூடுகட்ட ஏதுவான பெட்டிகள் கொடுத்தார்கள். ஓசூரில் சில கிராமங்களில் பானையில் கூடு செய்து வைத்திருக்கிறார்கள். அதிலெல்லாம் குருவிகள் வந்து அடைந்திருக்கின்றன. அதனால், கதிர்வீச்சுதான் குருவிகள் அழிவுக்குக் காரணம் என்று முடிவுகட்ட முடியாது.

சிட்டுக்குருவிகளைப் பூனை ரொம்ப விரும்பும். அதனால், பூனை இருக்கும் வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டாது.

சிட்டுக்குருவிக்கூட்டை அடைக்கலம் கூடு என்று சொல்வார்கள். சிட்டுக்குருவி கூடுகட்டினால் அந்த வீட்டிலுள்ள பெண்மணிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

****

பறவை மனிதர் பால்பாண்டி
பறவை மனிதர் பால்பாண்டி

‘என் ஜீவன் உள்ளவரை சேவையும் செய்திடுவேன்; மடிந்தாலும் மடிவேனைய்யா குளத்தங்கரை மேட்டினிலே’ என்று பாடும் பால்பாண்டியை பறவை மனிதன், பறவைகளின் நண்பன், பூவுலகின் நண்பன், சிறகு முளைத்த மனிதன், செண்பக மனிதன் என்று ஏராளமான பெயர்களில் அழைக்கிறார்கள். பறவைகள் மீதான ஈடுபாடு மட்டுமின்றி பாடல்கள் எழுதுவதிலும் பாடுவதிலும் தாளாத ஆசையுடையவர். அரும்புகள் அறக்கட்டளையுடன் இணைந்து நிறைய இடங்களுக்குப் பயணித்திருக்கிறார். நடிப்பிலும் ஆர்வமுடையவர். ஏழு படங்களில் நடித்திருக்கிறார். இவரைப் பற்றி எடுக்கப்பட்ட A life for birds மற்றும் Bird Man ஆகிய ஆவணப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. பறவைகள் மீதான காதல் 42 விருதுகளைப் இவருக்குப் பெற்றுத்தந்திருக்கிறது. அவற்றில் 17 விருதுகள் கேரளத்தினர் அளித்தவை.

 அறுபது வயதிலும் சளைக்காமல் இன்னும் பறவைகளைத் தேடி உலாவிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரது 40 வருட அர்ப்பணிப்புள்ள பணிக்கு தமிழ்நாடு அரசாங்கத்திலிருந்து ஓய்வூதியம் அளிப்பது உள்ளிட்ட எந்த உதவியும் அங்கீகாரமும் இதுவரையில் கிடைக்கவில்லை என்பதை மட்டுமே தனது ஆதங்கமாகச் சொல்கிறார் பறவை மனிதர் பால்பாண்டி.

 பரவை முனியம்மாவுக்குப் படியளந்த அரசு பறவை மனிதரையும் கவனிக்குமா?

  • சந்திப்பு: வே.ஶ்ரீநிவாச கோபாலன்
  • balagzone@gmail.com

License

Icon for the Public Domain license

This work (இல்லம் மாத இதழ் - 2 by illammonthly) is free of known copyright restrictions.

Share This Book