"

1

அந்திவானம் சிவக்க
வழிதெரியாமல்
சென்ற பறவை
மரக்கிளையில்
அமர்ந்து காலத்தை
கெக்கலிக்கிறது

2

நான் அறிந்த சொல்லுக்கும்
அறிந்திடாத சொல்லுக்கும்
இடையே
திரையிட்டுக் கொண்டு
அதை
கவிழ்க்கும் கலையை
நீ அறிவாய்

3

சுதந்திரம் என்றால் என்னவென்று?
தாய் என்னிடம் வினவினாள்
நான் சொன்னேன்
சிறகொடிந்த பறவைக்கு
சமுத்திரத்தைக் கொடுத்தல்

4

சமுத்திரத்தின்
ஆழம் காண
சென்றதொரு நீர்ப்பறவை
நிலத்தில் காணக்கிடைக்காத
தண்ணீரைக் கண்டு
குதூகலித்து
மரணித்தது
பாறையின் இடுக்கில்

5

பறவைகள் கூச்சலிட்டுக்
கொண்டே இருக்கின்றன
அதோ
வெள்ளை
கருநீலம்
வெளீர் நீலம்
கருப்பு
 நிறங்கள் பல
கொண்டதற்காகவா?
அல்லது
கூடடைந்த துயரத்தலோ?
தெரியவில்லை
அமைதியின் சூன்யத்தில்
அவைகள்
தீர்மானித்தன
மக்கிப் புழுவைத்து போகும்முன்
சிறகு படபடக்க
செவ்வானம் அடைய வேண்டும்

6

ஊர் கூடி தேர் இழுத்தார்கள்
தூணிலும்.துரும்பிலும்
பிரகாசிப்பவர்
முகம் காட்டாமல்
வஞ்சனை செய்தார்
எங்கும் சா”தீ”
கொளுந்து விட்டெரிகிறது
சோற்றுக்கு வெளியே
பூசணியை மறைக்கும்
பொய்யாட்டம் ஆடுகின்றன
ஊடகங்கள்
எலும்புக்கூடான தேருக்கு
துணையாய்
கூண்டுக்கிளியின் சாம்பல்
சூழ்ந்துக் கொண்ட புகை
பீடிகை போட
அதோ
குழந்தையின் பாதங்களில்
வன்முறை கொக்கரிக்கிறது
மூடிய கூந்தல் கலைத்து
இடுப்பில் வாரிய
புதுச் சேலைத்துணியுடன்
பெண்கள் ஒலமிடுகிறார்கள்
வேரருந்த குடிசைகள்
ஒன்று
சேர ஒப்பாரி வைக்கின்றன
’உங்கள் பசிக்கு
இரையாக
என்ன பாவம் செய்தோம் நாங்கள்?’

7

மின்கம்பியில் கருகிய
பறவையின் சாம்பலை அள்ளித் தின்று
மற்றொன்று
உய்யாரமாக
அங்கும்
இங்கும்
கொண்டாடி
ஒப்பாரி
வைக்கிறது
பாடை கட்டி
பங்காளி வராமல்

License

Icon for the Public Domain license

This work (இல்லம் மாத இதழ் - 2 by illammonthly) is free of known copyright restrictions.

Share This Book