"

1

முடக்கால் நோக்கின்
திடக்கால் கொட்டும்
“உச் உச்” போலத்தான்
திடக்கால் நோக்குகிற
பறக்கும் பறவையின்
பின்னுறுப்பு கொட்டிச் செல்கிறது
ஒரு மில்லி எச்சத்தை

2

ஈச்ச மரம் தெரிகிறது
ஓய்வெடுக்கும் வேடனோடு
பறவை என்ன செய்யும்
பறந்துதான் போகும்
நிரந்தரக் கூடென்று
ஒன்றுண்டெனில்
ஆகாசம் மட்டுமே
3
சிறகு விற்று
சம்பாதிக்கும் பறவை
வயிறு விட்டு
வேறு தொலைவு
பறப்பதில்லை
4
பறக்கும் யாவும்
பறவைகளே
பசிக்கும் யாவரும்
வேடர்களே

5

 அங்கே சில
காகங்கள் திரிகின்றன

அழைக்கும்போது
தொலைகின்றன
அழையா விருந்தாளியாய்
அலைகின்றன

முன்னே ஒரு எட்டு வைக்கையில்
கத்திக்கத்திச் சலம்புகின்றன

என்
வானத்தில் மட்டும்
திரிகின்றன

அந்த விசித்திர காகங்கள்

நான் பார்க்கும்போது மட்டும்
எச்சமிட்டு
ஓடிகின்றன

6

சமீப இரவுகளில்
பறவைகளின் சுவடுகளில்லை

நீரருந்த எழும்பும்
நடு இரவின்
நுண்ணிய காதுகள் உணரும்
அவற்றின் குரலை

பிறந்த குழந்தையின்
முதல் விழிப்பிருக்கும்
அவற்றின் பாடல்களில்

முகச்சுருக்கங்களை
துளைத்துக்கொண்டு அரும்பும்
முதிர்ந்த அம்மாவின் இதழ் சிரித்திருக்கும்
அவற்றின் பாடல்களில்

ஒருத்தியின்
கொலுசொலியைக் கேட்டலையும்
ஒருவனின்
ஏக்கம் தொனிக்கும்
அவற்றின் பாடல்களில்

சமீப இரவுகளின்
நுண்ணிய காதுகள்
இவைகளைத் தேடுகின்றன

இவை இல்லா விரக்தியோடு
நீரருந்தி முடிக்கும் இந்த இரவுகள்
உடனடியாக
ஒரு பழைய மெல்லிசைப் பாடலை
கேட்கத் துவங்குகின்றன

சரியாகச் சொல்லப்போனால்
நல்ல இசையைக் கேட்டு
நாட்களாயிற்று

7

மழை
குடையில்லை 
மரம்
ஒதுங்கினேன்
குளிர்
குளிர்
இரு குயில்கள் மரக்கிளையில்
இட்டுக்கொண்ட முத்தம் 
இதமான சூடு
வெயில்
வெயில்
வெயில் பறந்தது
குக்கூ என்றபடி வானில்

8

 நேற்று வரை எங்கள் வீட்டிலிருந்த கிளி
சுதந்திரத்திரத்திற்காக
கூண்டுக்குள்
கத்திக்
கொண்டிருந்தது.

இன்றுதான்
அதை
விற்றுவிட்டு
வந்தோம்

இப்போது அது
சுதந்திரமாகக்
கூண்டுக்குள்
கத்திக்
கொண்டிருக்கும்

9

எங்கிருந்தோ
ஒரு பந்து வந்து
விழுந்தது

விரிந்த மைதானத்தின்
நட்டநடு வெளியில்
நிற்கும் எனக்கு
பந்தின் உரிமையாளர்
குறித்து அறிவது
அரிதான காரியம்

யாருடைய பெயரும்
எந்தவொரு மை கிறுக்கல்களும் கூட
பந்தின் உடம்பில் இல்லை

தான் இன்னாருக்குச் சொந்தம்
என்று அறிவித்துக்கொள்ளாத பந்து
பூமியைப் போலவே இருந்தது

என் உள்ளங்கைகளில்
பொதிந்திருந்த பந்து
ஒரே ஒரு முறை
சிரித்தது

பிரிவின் புன்னகையோடு
இழுத்துத்
தூக்கி எறிந்து
வாஞ்சையோடு
வானத்தை பார்க்கயில்,

ஏதேனும் ஒரு பறவை
பந்தை
அமுக்கிப் பிடித்து
தன் கூட்டிற்கு
கூட்டிச்செல்லாதா

10

 இசையின் நிறம் என்ன
ரஹ்மானுக்கோ
ராஜாவுக்கோ
தெரிந்திருக்க வாய்ப்புண்டா

உங்களில் யாரேனும்
அறிவீர்களா
இசையின் நிறத்தை

இசையின் நிறம்
நீலமாயின்
அலுத்துச் சலித்த
பறவைகளை
பறந்து திரிய
புதுவானம் புகுத்தலாம்
இசையின் நிறம்
பறவையறியுமோ

எந்த வானத்திலும்
இசைத்துத் திரியும்
குருட்டுக் குயிலொன்றின்
விழிகள் அறியும்
இசையின் நிறத்தை

11

மேற்புற வானம்
இடம் மாறுகிறது
பறவைக்குப் பின்புறம்

பறவைக்குப் பின்புறம்
வானமிருப்பதை
அறிவீர்களோ?

தனக்குப் பிடித்த நிறம் நீலம்
என்று காட்டிச் செல்கிறது
தூரப் பறவை

License

Icon for the Public Domain license

This work (இல்லம் மாத இதழ் - 2 by illammonthly) is free of known copyright restrictions.

Share This Book