"

கல்யாண்ஜி

ஒரு சிறு பறவை
எங்கள் வீட்டுக் கருவேப்பிலை மரத்திலிருந்து
எதிர் வீட்டு நெல்லி மரத்திற்கு
மாறி மாறிப் பறக்கிறது.
இப்போது எங்கள் வீட்டில் நெல்லிமரமும்
எதிர்வீட்டில் கருவேப்பிலையும்
வளர்ந்துகொண்டு இருக்கிறது
மாறி மாறி.

தேவதேவன்

காகம்:
இதற்குத்தான் நான் குளியலறையிலிருக்கும்
நேரம் பார்த்தாயோ?
மூடியிருந்த தட்டைத் திறந்து
ஒரே ஒரு சப்பாத்தியை உன் அலகால் கவ்வி
என் கண்முன்னாலுள்ள மரக்கிளை நின்று
சிரிக்கிறாய்
இயற்க்கையோடு மட்டுமே இருந்த
வெகுநீண்ட எனது ஏகாந்தவாசம் சலித்துவிடாது
உறவு கொள்வதாய் நினைப்போ?
என் ஏகாந்த வாசத்துள் தூசு கிளப்பி
பிறர் பொருளை அபகரித்தல், பசி, துயரம் முதலாய
மனித உலகச் சிந்தனையைத் திணித்துவிடும் நோக்கமா?

ஆத்மாநாம்

உலக மகா யுத்தம்:
ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும்
சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை

இசை

ஒரு பறவையை வழியனுப்புதல்:

ஒரு பறவை கூட்டை விட்டு
வெளியேறும் விருப்பத்தைத் தெரிவிக்கையில்
நீங்கள் அதற்குத் தகுந்த காலநிலை
தெரிவுசெய்து கொடுக்க வேண்டும்
அதன் சிறகுகளை ஒரு முறை
சோதித்துக்கொள்வது நல்லது
தேவையெனில்
அதன் வலிமையைக் கூட்டும் வழிகளையும் கற்பிக்கலாம்
அடிக்கடி அதைத் தடவிக்கொடுப்பதைக்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும்
அதன் கண்களைத் தவிர்த்துவிட வேண்டும்
வேடனின் தந்திரங்கள் மற்றும் அம்புகளின் கூர்மை பற்றி
கனிவோடு எச்சரிக்க வேண்டும்
போகும் வழியில் அதற்குப் பசிக்குமென்பதும்
உங்களுக்குத்தான் நினைவிருக்க வேண்டும்
வழக்கம்போல் தங்கள் அலகால் புகட்டாமல்
ஒரு தட்டில் வைத்து நீட்ட வேண்டும்
பிறகு வானத்தைப் பார்க்கும் சாக்கில்
அண்ணாந்து பார்க்காதிருக்க வேண்டும்

சமயவேல்

பறவைகள் நிரம்பிய முன்னிரவு:

ஒரு கலவரத்துக்கு ஒப்பான மாலைப்பொழுது
எப்படி நிகழ்கிறது
விவரிக்கவே முடியாத அந்த மாயக்கிளர்ச்சி
ஏன் ஏற்படுகிறது என்பதை
அந்தக் கண்மாய்க்கரையில்
சும்மா
கால்கடுக்க நின்றுதான் கண்டுபிடிக்க முடியும்

வற்றியும் வற்றாத நீர்க்குட்டைகளின்
காய்ந்தும் காயாத ஈரக்கம்பையில் படர்ந்த
மஞ்சள் வெயிலில்
கொக்குகள் குழுக்குழுக்களாக வந்திறங்குகின்றன
பூமிக் கூடாரத்தின் வர்ணங்கள் குழைந்து குழைந்து மாறுவதை
கொக்குச் சீரணிகள் மெல்லத் தியானிக்கின்றன

காக்கைகள் கூடிக் கூடி கரைந்து கரைந்து
பகலை விரட்டுகின்றன
மரங்களுக்குள் மைனாக்களும் குருவிகளும்
காணாததைக் கண்டது போல்
கத்திக் கச்சாளம் அடிக்கின்றன 

கிளைவிட்டுக் கிளை மரம் விட்டு மரம்
பறந்து ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
பகலெல்லாம் வெகுதூரம் எங்கெங்கோ
இரைதேடி அலைந்த அவை இங்கே
கூடிக் கும்மாளம் அடிக்கின்றன
கொக்குகள் நுனிக்கிளைகளில் உட்கார்ந்து
ஊஞ்சலாடியபடி தூங்கத் தொடங்குகின்றன

கண்மாய் நீரின் ஆர்ப்பாட்டமில்லாத சிற்றலைகள்
கரைக்கற்களில் சலப்சலப்பென மோதும் இசை
காற்றில் கரைந்து காதைத் தொடும்பொழுது
மாலைப்பொழுது முற்றிலுமாக இறங்கிவிடுகிறது

சும்மா நிற்பதின் இனிமை
பறவைகள் நிரம்பிய முன்னிரவாய் நிறைகிறது

ஞானக்கூத்தன்

‘குட்பை’ சொன்ன கிளி:

பேசுங் கிளிமேல் எனக்கு ஆசை பிறந்தது.

நானொரு பேசுங்கிளியை வாங்கி வந்தேன்

பேசுங்கிளியை என்னிடம் விற்றவன்
கிளியை எப்படி வளர்க்கணும் என்பதை
என்னிடம் விரிவாகச் சொன்னான்

கூண்டில் கிளியை வளர்ப்பது
பாவமென்று கூறினார்கள்
பக்கத்துப் போர்ஷன் பெரியவர்கள்.
நானதைப் பொருட்படுத்தாமல்
நல்ல இடமாகப் பார்த்து

பேசுங் கிளியின் கூண்டை அமர்த்தினேன்.

கூண்டில் இருந்த கிளி
பழங்களை விதைகளை நன்றாகத் தின்றது
ஆனால் ஒருநாள் கூடப் பேசவே இல்லை.

என்ன குறையோ என்ன கோபமோ
பேசப் பிடிக்காமல் போயிற்றென்று
சும்மா இருந்தேன் சிலநாட்கள்
என்னிடம் இல்லை என்றாலும்
வேறு யாரிடமாவது
பேச வேண்டும் அல்லவா அந்தக் கிளி

‘குட் மார்னிங்’ சொன்னேன்.

சுவையாய் இருந்தனவா பழங்கள் என்றேன்
எதற்கும் பேசவில்லை அந்தக் கிளி
வீட்டுக்கு வந்தவர்கள் கிளியிடம்
பேச்சுக் கொடுத்தார்கள். பதிலுக்குப்
பேசவே இல்லை அந்தக் கிளி
பேசாத கிளியை வளர்ப்பானேன்
என்றார்கள் வீட்டில். நானும்
கிளியை விற்கலாம் என்று தீர்மானித்தேன்.

விலைக்கு வாங்க வந்தவர் கேட்டார்
‘பேசுமா?’ என்று. ‘பேசுமே’ என்றேன்.
வீட்டுக்குக் கொண்டுபோய்ப்
பழங்கள் தந்து பழக்குங்கள். இரண்டே நாளில்
நன்றாய்ப் பேசும் என்றேன்.
பொய் சொன்ன நெஞ்சில்
பூதங்கள் ஐந்தும் புன்னகை செய்தன.
விலைக்குப் பெற்றவர் கிளியுடன்
கூண்டைப் பெற்றுக்கொண்டு
புறப்படும் போது திடுக்கிட்டுப் போனேன்
‘குட்பை’ என்றது அந்தக் கிளி.

மனுஷ்யபுத்திரன்

 பறவை எச்சம்:

அவ்வளவு பெரிய
வெட்ட வெளியில்
சரியாக என் தலையில்
சிறு பறவை
ஒரு மனிதன்
ஒரு பறவை
தன்மீது எச்சமிட்டுவிட்டதாக
அந்த இடத்தை
ஒரு மெல்லிய புகாருடன்
கழுவிக்கொண்டிருக்கிறான்
ஆனால் பறவைகள்
எச்சமிடுவது
மனிதர்கள் மேல் அல்ல
பூமியின்மீது
நான் என்மீதிருக்கும்
ஒரு பறவையின் எச்சத்தை துடைக்கும்போது
இந்த பூமியின் சிறு பகுதியொன்றைத்
துடைத்துக்கொண்டிருக்கிறேன்

நன்றி: கல்யாண்ஜி, தேவதேவன், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், சமயவேல், மனுஷ்யபுத்திரன், இசை

License

Icon for the Public Domain license

This work (இல்லம் மாத இதழ் - 2 by illammonthly) is free of known copyright restrictions.

Share This Book