"

 

6496b0_0372eae7381e48a4a4215f3c07e28293.jpg_srz_p_357_357_75_22_0.5_1என் உறவினரின் மகள், 12ம் வகுப்பு படிக்கிறாள். அன்று, சோர்வாக இருந்த அவளிடம், என்னவென்று கேட்டேன். காரணம் சொல்ல தயங்கினாள். வற்புறுத்திக் கேட்டபோது, தனக்கு நாளை தேர்வு இருக்கிறது என்றும், தேர்வுக்குரிய சில பாடப்பகுதிகளை வகுப்பில் நடத்தவே இல்லை என்றும் கூறினாள். பிறகு, அவளுடன் பேசும்போது, விந்தணுக்கள் பற்றிய பாடப்பகுதியை உயிரியல் ஆசிரியை தவிர்த்து விட்டதைதெரிந்துக் கொண்டதும் சிரிப்பு தான் வந்தது.

பாலியல் கல்வியை கட்டாயமாக்கு என்று சமூக ஆர்வலர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படியொரு கூத்தும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய கல்விநிலை குறித்து அதிக அளவிலான விமர்சனம் பொதுவெளியில் வைக்கப்படுவது ஆரோக்கியமான ஒன்றே. ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமாக நீண்டகாலம் ஆகும்.

காரணம், இங்கே, எல்லாவற்றையும் மாற்றிவிட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், தன்னை மாற்றிக் கொள்ள அவர்களில் யாரும் தயாராக இல்லை, ஏன் என்று கேட்டால் சமூகத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்களுக்காகவே இக்கட்டுரைத் தொடர். தற்போதைய கல்விமுறை எனும் பெரும்படைக்கு எதிராக, ஒரு சிறு அம்பு எய்தல், அவ்வளவே! எல்லாம் நம் தலைமுறையோடு ஒழிந்து போகாதா? என்னும் ஏக்கம், அவ்வளவே!

இன்று நமது முதல் விருந்தாளியாக பெற்றோர்களை அழைக்கலாம். ஏனெனில், அவர்கள் பாடுதான் இச்சமூகத்தில் ரொம்ப கஷ்டம். அரசு பள்ளி துவங்கி, இன்டர்னேஷனல் பள்ளி வரை இருக்கு. ஐஐடி முதல் லோக்கல் கலைக் கல்லூரி வரை இருக்கு. கலெக்டர் முதல் இஞ்சினேயர் வரை (ஐயயோ, சாரி) கலெக்டர் முதல் கல் உடைப்பவன் வரை இருக்கு. இதில் எதை தன் மகனோ, மகளோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பெருங்குழப்பத்தில் இருக்கும் ஜீவன்களுக்காக இக்கட்டுரை.

உங்கள் குழந்தையை 4 மணிக்கு எழுப்பி, யோகா வகுப்புக்கு அனுப்பி, கணித வகுப்பிற்கு அனுப்பி, நீச்சல் பயிற்சிக்கு அனுப்பி, பின் எந்த சத்தும் இல்லாத உணவை காலை உணவாக கொடுத்து அவசரமாக பள்ளிக்கு அனுப்பி, பள்ளி முடிந்ததும் நேராக டியூசனுக்கு அனுப்பி, வீட்டிற்கு வந்ததும் ஏதோ ஒரு இரவு உணவை கொடுத்து, அன்று நடந்த ஏதோவொரு தேர்வில் ஒரேயொரு மதிப்பெண் குறைந்ததற்காக, பக்கத்து வீட்டு குழந்தையின் மதிப்பெண், வெளியூர் அத்தை மகள்/மகன் மதிப்பெண்களை எல்லாம் ஒப்பீடு செய்து ஒரு நீண்ட சொற்பொழிவை ஆற்றி விட்டு அவனைத் தூங்க அனுப்புகிறீர்கள். உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நீங்களே அழித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே உண்மை.

யோகா, நீச்சல் வகுப்புகளுக்கு அனுப்புவது குற்றமா?என் மகன்/மகள் மற்றவர்களை போல் நன்றாக படிக்க வேண்டும் என்றுசொல்ல எனக்கு உரிமை இல்லையா? என கேள்வி கணைகள் தொடுக்க போகிறீர்கள் அப்படித்தானே?

உங்கள் நேரத்தை எப்படி செலவிட வேண்டும்? யாருடன் செலவிட வேண்டும்? எதற்காக செலவிட வேண்டும்? உங்கள் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்? எந்த சினிமா பார்க்க வேண்டும்? எந்த இடத்திற்கு போக வேண்டும்? என உங்கள் வாழ்விற்கு எது தேவையோ எது மகிழ்ச்சியோ அதை முடிவு செய்ய உங்களுக்கு முழு உரிமை இருப்பது போல் உங்கள் பிள்ளைக்கும் இருக்கிறது என்பதே உங்கள் கேள்விகளுக்கு பதில்.

அவனுக்கு 5 மணிக்கு தான் எழும்ப பிடிக்கிறது என்றால், ஏன் 4 மணிக்கு எழ வேண்டும்? அதை மாற்றி அமைக்க நீங்கள் யார்? தியான வகுப்பு தேவைதான். ஆனால், விடுமுறையில் மட்டும் பயிலலாம் என்று அவனுக்குத் தோன்றினால், அப்போது தான் பயில முடியும். அவனுக்கு தியான வகுப்பு பிடிக்காது என்றால், அதன் அவசியத்தை புரிந்துக் கொள்ள வைப்பது மட்டுமே உங்கள் வேலை.

உங்கள் வயதில் இருந்தவர் பிரதமர் ஆகிவிட்டார், மந்திரி ஆகி விட்டார், நீங்கள் ஏன் அவர்களைப்போல ஆகவில்லை?

இப்படிக் கேட்கும்போது, உங்களுக்கு ஏற்படும் உணர்வுதான் பிள்ளைகளை அவர்களைப் போன்ற மற்றவர்களுடன் ஒப்பிடும் போது, அவர்களுக்கும் உண்டாகிறது.

அவனது ஆற்றல் எவ்வளவோ, அவனது விருப்பம் என்னவோ அதில் தான் அவன் கவனம் செலுத்த முடியும். மற்றவர் செய்கிறார் என்பதற்காக, அவனும் அதையெல்லாம் செய்து கொண்டிருக்க முடியாது. இப்படி நீங்கள் செய்வதன் விளைவு என்ன தெரியுமா? நண்பனுக்கு அவனது தந்தை ஒரு லட்சத்திற்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தால் அதே போல் தனக்கும் வாங்கி கொடு என்று அடம்பிடிக்கத்தான் செய்வான். அதன் விளைவாக, மற்றவர்களை பார்த்தே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவன் பழகி விடுகிறான்.

இதன் காரணமாகவே, சமூகத்தில் பேராசை, பொறாமை, வன்மம் போன்றவை மனித மனதில் வேரூன்றுகிறது. உங்களை அறியாமலே, உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தன் படிப்புக்காக கடன் வாங்கும்படி அவன் சொன்னானா? அவன் அறியாமல் நீங்கள் வாங்கிய பெருங்கடனுக்கு அவன் ஈடுகொடுக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்? ஆமாம், அவனுக்கு படிப்பில் விருப்பமே இல்லை. சமையல்கலைஞராகத்தான் ஆசை. கடன்வாங்கிப் பணம் திரட்டி, அவனைப் பொறியியல் வல்லுநர் ஆக்க நினைத்தால் எப்படி?

அவனுக்கு குறிப்பிட்ட துறை படிப்பில் விருப்பம் இல்லை என்றால், நீங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலே சேர்த்தாலும் அவன் படிக்காமல் தான் இருப்பான். உங்கள் குடும்ப கஷ்டம் பற்றியோ, கடன் பிரச்சனை பற்றியோ பேசும் போது முழுக்க முழுக்க அவன் சுயநலம் உடையவனாகவே கட்டமைக்கப்படுகிறான். இப்படி சுயநலத்தை அவனுள் விதைத்துவிட்டால், பின்னாளில் உங்களுக்காக எப்படி வாழ்வான்?

நேற்று பிரபலமாக இருந்த பொறியியல் படிப்பு இன்று வேலைச்சந்தையில் ஆபத்தானதாகிவிட்டது. அவனுக்கு பிடிக்காத ஒரு துறையை உங்கள் விருப்பத்துக்காக படித்து பின் நாளை சரியான தகுதி இல்லை என்பதாலோ, துறை பலவீனமாகியோ வேலை கிடைக்கவில்லை என்றால் யார் அவன் வருங்காலத்தை பாதுகாப்பது? ‘தெண்டச்சோறு, வெட்டியா ஊர் சுத்திட்டு இருக்கான் கழுத’ என சபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஏராளமான இளைஞர்களின் இன்றைய நிலைக்கு முழுக்க முழுக்க இதுதான் காரணம்.

ஒரு தனி மனிதனை சுதந்திரமாக வாழவிடாத, அவர்கள் வாழ்வுரிமைக்கு பங்கம் விளைவிக்கும் ஒவ்வொருவரும் குற்றவாளிகளே!

நான் ஒன்று கேட்கிறேன், உங்களுக்கு மனசு இருப்பது போல தானே உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ மனசு இருக்கும்!

மகன் என்ன படிக்கிறான்? எப்படி படிக்கிறான்? அவனுக்கு தேவை என்ன? அவன் தோழர்கள் யார்? யாருடன் எல்லாம் பழகுகிறான்? என்று எதுவுமே தெரியாதவர்கள். ‘நம்ம மகன்தான் ஒழுங்கா படிச்சிடுவானே, டியூசன் எல்லாம் வேண்டாம், வீணாகப் பணம் பறிப்பார்கள்’ என்ற எண்ணம் உள்ளவர்கள். இப்படி பொற்றோரில் பல ரகங்களைப் பட்டியலிட முடியும். இந்த வகையான பெற்றோர் செய்தித்தாள் வாசிப்பார்கள் என்றுகூட நான் நம்பவில்லை. இதை வாசித்துக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை.

‘அவனுடைய தோழனைப் பற்றி, அவன் ஒழுக்கத்தைப் பற்றி நான் ஏன் கேட்க வேண்டும்? அவன் என் மகன், நீ ஒன்றும் பாடம் நடத்த வேண்டாம்! எனக்கு நேரமே இருப்பது இல்லை. என்ன செய்ய? எனக்கு ஒன்றும் அவன் படிப்பு பற்றி விபரம் தெரியாது, பள்ளிக்கே காசு கொடுத்து முடியல டியூசனுக்கு வேறு கொடுக்கணுமா? அதெல்லாம் வேண்டியதில்லை?’ – அப்படித்தானே?

பால் எது, தண்ணீர் எது என இனம் பிரித்து தரும் அன்னப்பறவை தான் பெற்றோரும், ஆசிரியர்களும். உங்கள் பங்கு இதோடு முடிந்து போய் விட்டது. இந்த எளிய வேலையைதான் பெற்றோரின் கடமை.

இக்காலத்தில் பாசத்திற்காக அதிகம் ஏங்கும் குழந்தைகள் பள்ளிகளில் அதிகம். முக்கியமாக, பெண் பிள்ளைகள் இதன் காரணமாகவே பல இளம்பெண்கள் காதலிக்கின்றனர். ‘அவன் நல்லவனா, கெட்டவனா என்பதை தாண்டி தனக்கான பாதுகாப்பாளனாகவும், அன்பாக வழிநடத்துபவனாகவும் இருப்பான்’ என்று நம்பிக்கொண்டு காதலிக்கிறாள். இப்போது, ஆண் பிள்ளைகளுக்கும் இதே பிரச்சனை அதிகரித்து வருகிறது.

சமீபகாலமாக, ஓரினச் சேர்க்கை பள்ளிகளில் அதிகரித்து வருவதாக உளவியல் நிபுணர் யுவராஜ் வருத்தப்படுகிறார். ஓரினச் சேர்க்கை மாணவர்களை ஆசிரியர்களும் தங்கள் உடல் தேவைக்கு பயன்படுத்துகின்றனர்.  அதனால், அந்த மாணவர்கள் அதிக மன அழுத்தத்தை உணர்கின்றனர் என்கிறார் அவர்.

இந்தியாவில் பட்டப்படிப்பு படித்தவர்களில் 3% பேர் மட்டுமே ஏதேனுமொரு தொழில் நிறுவனத்தில், பெரும் சம்பளத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறுகின்றனர். இதன் மூலம், இவ்வளவு பாடுபட்டதும் வீணாக்கொண்டிருப்பது தெரியவில்லையா?

கைபேசி, கணிணி போன்ற சாதனங்களை அதிகம் உபயோகப்படுத்துவதன் விளைவாக, இன்று ஆபாசப்படங்கள் விதவிதமாக கிடைக்கின்றன. 2TB ஆபாசப்பட கலெக்ஷனை மட்டுமே கொண்டுள்ள ஹார்ட் டிஸ்க் வைத்திருக்கும் பள்ளி மாணவனை எனக்குத் தெரியும். அதன் விளைவு, உடன் படிக்கும் மாணவி, ஆசிரியை, பக்கத்து வீட்டு பெண், தன்னுடன் பிறந்த சகோதரி என முதிர்ந்து காலப்போக்கில் தன் தாயையும் ஆபாசமாகப் பார்க்கப் பழகி விடுவான்!

எல்லாரும் இப்படி குறை சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள், யார் தான் தீர்வை முன் வைப்பது என்று சலித்துக் கொள்பவர்கள் இங்கு அதிகம். என்னால், ஏதோ, சில பரிந்துரைகளை கொடுக்க இயலும், உங்களையும் கொடுக்க வைக்க இயலும்.

மது அருந்துபவர்களால் தான் சமூகத்தில் 75% தவறுகள் நடக்கின்றன. அப்படி இருந்தும் ஏன் அரசு அதை வழிநடத்துகிறது? காதல் என்பதன் உண்மையான வரையறை என்ன? உலகம் முழுவதும் இருந்து இந்தியாவிற்கு வரும் குப்பைகள் எடை எவ்வளவு தெரியுமா? நாம் ஏன் குப்பை நாடாக இருக்கிறோம்? காஷ்மீரில் என்ன பிரச்சனை என தெரியுமா? நக்சலைட்கள், மாவோயிஸ்ட்கள் யார்? அனாதை இல்லங்கள் ஏன் உருவாகின்றன? சர்வதேச அரசியல் என்ன தெரியுமா? இப்படி பொதுநலன் சார்ந்த, சமூக அக்கறையுள்ள எதையும் சொல்லிக் கொடுப்பது இல்லை.

ஆனால், உண்மையில் நீங்கள் இதைத் தான் சொல்லித்தர வேண்டும். இந்த சமூகம் எனக்கு தேவையில்லை என்று தட்டையான கருத்துகளைச் சொல்லிவிட்டு கழண்டுகொள்ள முடியாது. நாம் அனைவரும் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ கண்டிப்பாக சமூகம் சார்ந்தே இயங்க வேண்டியது கட்டாயம்.

பெற்றோராக இருப்பதை விட, நல்ல நண்பனாக இருக்க முயலுங்கள். பாடம் நடத்துபவர் எல்லாம் ஆசிரியராக ஆகிவிட முடியாது. நல்ல ஆசிரியர்கள் இல்லாத வரை டியூசன் சென்டர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். அவன் பிரச்சனைகளை காது கொடுத்துக் கேளுங்கள். அவனுக்காக, நேரம் ஒதுக்குங்கள் அதே போதும்.

இன்றைய வாழ்க்கை சூழலை மாற்ற பெரும் முயற்சி தேவை. ஆனால், அது கஷ்டமில்லை.  படிப்படியாக விடாமுயற்சியோடு செயல்பட்டாலே போதுமானது. அதை பெற்றோர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். அங்கேதான் மாற்றுக்கல்வி தொடங்குகிறது.

நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டேன், இனி உங்கள் முடிவு. நன்றி.

*

தொடர் என்பதால், முதல் கட்டுரையின் முடிவில் அடுத்த கட்டுரையை வாசிக்கத் தூண்டும் விதமாக ஏதாவது எழுதுங்கள் என்று இதழாசிரியர் பணித்தார். அதற்காகவே பின்வரும் வாக்கியம். ‘பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுக்கே வகுப்பு எடுக்க போறோம்’

  • சந்தோஷ்ஶ்ரீ
  • directorsanthoshsri@gmail.com

License

Icon for the Public Domain license

This work (இல்லம் மாத இதழ் - 2 by illammonthly) is free of known copyright restrictions.

Share This Book