ஸஃப்தர் ஹாஷிமி, ஷாஹித் ஆஜ்மி.
இரண்டு பெயர்களுக்குமான பொருள் வேறானாலும் அவற்றை ஒலிக்கும்போது ஓசையில் ஒரு வித ஒற்றுமை காணப்படுவது போல அவர்கள் வாழ்ந்து நிறைந்த வாழ்க்கைகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை மனங்கொள்ளத்தக்கது.
இந்த இருவரும் வாழ அனுமதிக்கப்பட்ட வருடங்கள் : 34 , 32
எதிரிகள் இவர்கள் பணிகளை அங்கீகரித்த நாட்கள்:
ஸஃப்தர் ஹாஷிமிக்கு ஜனவரி 02, 1989
ஷாஹித் ஆஜ்மிக்கு பிப்ரவரி 11, 2010
முன்னவர் காங்கிரஸ் குண்டர்களாலும் பின்னவர் பேரினவாத ஃபாஸிஸ்டுகளாலும் கொல்லப்பட்டவர்கள்.
ஹாஷிமியின் நாடக பணியை அவர் கொல்லப்பட்ட களத்திலிருந்தே அவரது மனைவி முன்னெடுத்தார். குற்றமற்ற முஸ்லிம்களுக்காக வாதாடும் ஆஜ்மியின் பணியை அவரது நண்பர் முன்னெடுத்து வருகின்றார்.
இந்த இருவரின் கொலைகளுக்கும் இடையேயான இடைவெளியின் வயது 21 வருடங்கள்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் ஆள்வோரின் கண்ணோட்டங்களில் மாறுபாடு இருப்பதில்லை.
“பயங்கரவாதிகளுக்கு மதம் கிடையாது“ என ஷாஹித் ஆஜ்மி சொன்னது போல மனித குல விடுதலைக்காக போராடுபவர்களை கையாளுவதில் காங்கிரஸிற்கும் வலதுசாரி ஃபாஸிஸ்டுகளுக்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை .
ஒடுக்குபவர்களிடையே ஒரு வித ஒற்றுமை நிலவுகின்றது. ஒடுக்கப்படுபவர்களிடமும் ஒரு வித ஒற்றுமை நிலவுகின்றது.
****
முதலில் இயக்குநர் ஹன்ஸல் மேத்தாவிற்கும் படத் தயாரிப்பாளர்களுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். வணிக சமரசங்கள் , பேரினவாதத்தின் வெறுப்பு அரசியல் , தேச வெறி , வெகு மக்களின் பழக்கப்படுத்தப்பட்ட ஒற்றை ரசனை போக்கு போன்ற பெருந்தடைகளை ஒரு தூசியை கடப்பது போல கடந்து இந்த படத்தை எடுத்திருக்கின்றனர்.
ஒரு பயிலரங்கில் ஷாஹித் ஆஜ்மி உரையாற்றும் காட்சிக்கீற்று ஒன்றை இணைய தளத்தில் பார்க்க நேர்ந்தது.
அதில் ஒரு இடத்தில், “குற்றமற்றவர்கள் மீது அரசு தொடுக்கும் பொய் வழக்குகளின் ஓட்டைகளை ஆவணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வருடங்களின் சுமையில் அவை நம் நினைவுகளில் இருந்து தேய்ந்து அழிந்து விடும்” என சொல்வார்.
அரச பயங்கரவாதம் எந்த அளவில் ஆவணப்படுத்தப்படுகின்றது ? என நமக்கு தெரியாது. ஆனால் தன் சொந்த மக்களையே கொன்று தின்னும் பிணந்தின்னி அரச , நீதி அமைப்பின் உண்மை வடிவத்தை தன் உயிரைக் கொடுத்து வரைந்து காட்டிய ஷாஹித் ஆஜ்மியின் வாழ்க்கையானது இந்த திரைப்படத்தின் வழியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது மிக முக்கியமான செய்தியாகும்.
ஸஃப்தர் ஹாஷ்மியும் ஷாஹித் ஆஜ்மியும் இன்றும் இந்த அரங்கில் நினைத்துப்பார்க்கப்படுவதே மாபெரும் சாதனையாகும் . நாம் இப்படி நினைத்து பார்க்கப்படுவோம் என்றெல்லாம் சிந்தித்து அவர்கள் தங்கள் வாழ்க்கைகையும் இறப்பையும் தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்பே இல்லை. மாறாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் உயர அகலங்கள்தான் தனக்கே உரிய தர்க்கப்பூர்வமான அடைவை பெற்றிருக்கின்றது என சொல்ல முடியும்.
****
ஷாஹித் ஆஜ்மியின் உயிர் கொடை மூலம் அவரின் வாழ்விற்குள் நுழைந்த ஹன்ஸல் மேத்தா தன்னை ஷாஹித் ஆஜ்மியாகவே உணர்ந்திருக்கின்றார். அதை தனது படவியின் முன் மீண்டும் நிகழ்த்தியிருக்கின்றார்.
ஷாஹித் ஆஜ்மி தன் மனைவியை தேர்ந்தெடுக்கும் தருணங்களை இயக்குநர் ஹன்ஸல் மேத்தாவால் காதல் ரசம் சொட்ட சொட்ட காட்சிப்படுத்தி இருக்க முடியும் . அதன் மூலம் படத்தின் வருவாய் தொகையை கூடுதலாக்கியிருக்க முடியும்.
ஆனால் அது ஷாஹித் ஆஜ்மியின் வாழ்க்கைக்கு செய்யும் நியாயமாக இருக்க முடியாது என்பதை ஹன்ஸல் மேத்தா உணர்ந்த காரணத்தால்தான் அவ்வாறு செய்யவில்லை. ஒரு படைப்பை உருவாக்கும் கலைஞனுக்குரிய உரிமை என்ற வகையிலும் கூட எந்த ஒரு கூடுதல் எத்தனங்களையும் அவர் இந்த படத்திற்குள் செய்யவில்லை என்றேபடுகின்றது.
ஷாஹித் ஆஜ்மியின் சகோதரர் இந்த படத்தை பற்றி கூறும்போது , “இந்தப்படம் 95% அவரது வாழ்க்கையை அப்படியே காட்டுகின்றது“ என்றார்.
****
ஷாஹித் என்ற உருதுச்சொல்லின் வேர் அரபி மொழியில் இருந்து வந்தது. “சாட்சியாளன்” என்பது அதன் பொருள். ஷஹாதத் = குருதி சாட்சியம் . ஷஹீத் = குருதி சாட்சியாளன்.
இந்த சொற்கள் என்ன உணர்வில் சமூகத்தினுள் ஆளப்படுகின்றது என்பதையும் கொஞ்சம் பார்க்க வேண்டியுள்ளது.
மெய்மையின் மீதும் உயர்ந்த இலட்சியத்தின் மீதுமான தனது நம்பிக்கையை ஒரு மனிதன் வாய் மூலமாக வெளிப்படுத்துவதற்கும், தனது நம்பிக்கை குறித்து சாட்சி பகர்வதற்கும் ஷஹாதத் என சொல்வர்.
அதே போல மெய்மையின், உயர்ந்த இலட்சியத்தின் மீதான தனது பற்றுறுதியை தனது உயிர் குருதி உள்ளிட்ட அனைத்து விதமான உடைமைகளையும் அர்ப்பணித்து ஒரு மனிதன் மெய்ப்படுத்தி சாட்சி சொல்வதற்கும் ஷஹாதத் என சொல்வதுண்டு.
அதாவது தனது ஆக உயர்ந்த கொடை மூலம் தனது இலட்சியத்திற்கு சாட்சி கூறியவன் ஷஹீத் என பொருள்படும்.
தனக்கு சுற்றிலும் தன் மீதும் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு ஷாஹித் ஆஜ்மி ஆற்றிய எதிர் வினைகளை நான்காக பிரித்துக் கொள்ளலாம்.
-
வகுப்பு வெறி வன்முறைகள் மூலம் நடத்தப்படும் இன அழித்தொழிப்பிற்கு எதிராக மனம் கொதித்தார். அதற்கு தீர்வு சொல்லும் முகமாக ஆயுதந்தாங்கிய வன்செயல் குழுவினரிடம் போய் சேர்ந்தார்.
-
வெளியில் தான் பார்த்த வன்முறையானது சற்றும் குறையாமல் அதே வடிவத்தில் இந்த கடுங்கோட்பாட்டாளர்களின் அமைப்புக்குள்ளும் நீடிப்பதை பார்த்து அந்த குழுவிலிருந்தும் வெளியேறினார்.
-
.குண்டு வெடிப்பை நிகழ்த்திய உண்மை குற்றவாளிகளின் விடுதலைக்கு தான் எந்த வகையிலும் உதவிடக்கூடாது என்ற தெளிவு அவருக்கு இருந்தது. அந்த தெளிவுதான். நீதமா? தனது சொந்த சமூக பற்றா ? என்ற தேர்வு வரும்போது அறிவு மயக்கம் ஏதுமின்றி நீதியின் பக்கம் அவரை நிற்க வைத்தது.
-
அப்பாவிகளை கொன்று தீர்க்க முனையும் அரச பொறியமைப்பின் துடிப்பு , பொதுப்புத்தியில் ஆல் போல படர்ந்து நிற்கும் இஸ்லாமிய வெறுப்பு போன்ற அநீதத்தின் பேருரு வடிவங்களுக்கு எதிராக சட்டத்தின் வழியாக நீதிக்கும் உண்மைக்கும் ஆதரவாக தன்னந்தனியாக நின்று போராடியது.
என தான் வாழ்ந்த காலத்தில் தன்னைச்சுற்றிலும் நடந்த அநீதத்திற்கு எதிராக தனது சொல்லாலும் செயலாலும் சாட்சி பகர்ந்து கடைசியில் அந்த சாட்சியத்தை தனது உயிர் கொடை மூலம் நிறைவு செய்கின்றார் ஷாஹித் ஆஜ்மி.
அவரின் பெயரைப்பார்த்த பிறகு “நான் இந்த பெயருக்கு ஏற்ற வழியில்தான் நடைபோட வேண்டும்“ என அவரின் வாழ்க்கையானது தனக்குள்ளே தீர்மானித்ததைப் போல இருக்கின்றது ஷாஹித் ஆஜ்மியின் வாழ்வும் இறப்பும்.
****
ஷாஹித் ஆஜ்மி தனது சமூக வாழ்விற்கு இசைவாக தனது அந்தரங்க வாழ்வை எப்படி பழக்கப்படுத்துகின்றார் என்பது மிக தலையாய பகுதி.
ஆயுத குழுவின் பயிற்சி முகாமில் சில நாட்கள் இருந்த காரணத்தால் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் 7 வருடங்களை கழித்த பிறகு நீதி மன்றத்தால் குற்றமற்றவர் என ஷாஹித் விடுவிக்கப்படுகின்றார்.
ஒரு மனிதனின் இளமைக்காலத்தில் ஏழு வருடங்களை ஒன்றுமில்லாத காரணங்களுக்காக பறித்தெடுப்பது என்பது எவ்வளவு பெரிய அநீதி? ஒரு போதும் திருப்பித்தர இயலாத ஈடு செய்ய இயலாத இழப்பு அது.
இது போன்ற தொடர் அநீதிகளை சந்திக்கும் சராசரி மனிதர்கள் ஒன்று உள்ளுக்குள் சுருங்கி மேலும் இறுகி கடினமாகி விடுவார்கள் அல்லது கடல் அலை ஒதுக்கும் குப்பை போல மொத்த வாழ்க்கையிலிருந்தும் பின்வாங்கி ஒதுங்கி விடுவர்.
தனது வாழ்வின் மிக முக்கிய வருடங்களை சித்திரவதைகளிடமும் சிறையிடமும் பறி கொடுத்த பிறகும் கூட வெறுப்பு , பழி வாங்கும் உணர்வு , விரக்தி போன்ற எந்த விதமான எதிர்மறை உணர்வுகளுக்குள்ளும் சிக்கி விடாமல் தனது ஆன்மாவின் அந்தரங்க அடுக்குகளை தூய்மையாக வைத்திருக்க ஷாஹித் ஆஜ்மியால் முடிந்திருக்கின்றது.
ஷாஹித் ஆஜ்மியின் அலுவலகத்தில் எழுதப்பட்டிருக்கும் வரிகள்:
“அநீதத்தை.
காட்டியதின் வழியாக
இறைவன் எனக்கு
நீதியைப்
போதித்திருக்கின்றான்
வலியையும்
துயரங்களையும்
சுமத்தியதன்
மூலம்
அவன் எனக்கு
போராடும்
மன உரத்தை
தந்திருக்கின்றான்
உதவியற்றோருக்கு
உதவும்படி
அவன் எனக்கு
கற்பித்துள்ளான் “
இந்த சொற்களின் வாயிலாக ஷாஹித் ஆஜ்மி தன்னை மீட்டுகொண்டதோடு மட்டுமில்லாமல் பெருவாரியான மனிதர்கள் ஏறாத ஒரு சிகரத்தில் கொண்டு போய் தனது வாழ்வை நிறுத்தவும் செய்கின்றார்.
ஒரு வன்முறைக்கெதிராக இன்னொரு வன்முறை ஒரு அநீதிக்கெதிராக இன்னொரு அநீதி என்ற மிக எளிதான வழமையான பாதையை மறுத்து தனது தொன்மங்களின் நம்பிக்கைகளின் வழியாக உன்னதமான ஒரு வழியை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்.
அந்த பாதையில் நடை போட்ட ஷாஹித் ஆஜ்மிக்கு ஃபாஸிஸ்டுகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அவரை பொறுத்த வரை கொலை மிரட்டல்களை தலைக்கு மேலே பறந்து செல்லும் காற்றைப்போலவே அணுகியிருக்கின்றார்.
தொடர் மிரட்டல்களின் விளைவாக விரும்பி கைபிடித்த மனைவி நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து அவரது வாழ்க்கையிலிருந்து வெளியேறுகின்றாள். இருக்க இடமில்லாமல் ஷாஹித் தனது தாய் வீட்டிற்கே திரும்புகின்றார்.
தனது தனிப்பட்ட வாழ்வின் கொந்தளிப்பான தருணத்தை பெரும் மன அலைக்கழிப்புகள் ஏதுமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் ஷாஹித் பொய் வழக்குகளுக்கு எதிராக தொடர்ந்து வாதாடியே தீருவது என தீர்மானிக்கின்றார்.
இந்த தீர்மானத்தின் வழியாக தனக்கு முன்னால் இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டுமே வைக்கப்பட்ட ஓரிடத்திற்கு அவர் வந்து சேர்கின்றார். வாழ்வா ? சாவா ? என்ற நான்கு சொற்களுக்குள் பொதியப்பட்ட மிக கடினமான தேர்வு அது. தன் மீது திணிக்கப்படும் சாவை தனது முழு உணர்வோடும் நினைவோடும் ஷாஹித் எதிர் கொள்ள அணியமாகி விட்டதையே அது காட்டுகின்றது.
எதிரிகள் அவரின் முடிவை கொண்டு வரும் முன்னரேயே எதிரிகளின் தார்மீக தோல்வியை எழுதி அறிவித்த உயிர் துணிச்சல் அது. தனது சொந்த துயரங்களிலிருந்து கற்ற பாடத்தின் பொருள் முழுமையடைந்த நேரமும் கூட.
ஷாஹித் ஆஜ்மியின் உயிர் கொடைக்கு பிறகு அவர் நடத்திய வழக்குகளை அவரது நண்பர் ஏற்றெடுத்ததும் இதே போல பணியாற்ற 7 வழக்கறிஞர்கள் ஆயத்தமானதும் அவரின் வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றி என்றே கொள்ள வேண்டும்.
அடுக்கடுக்காக
கொந்தளித்து வரும்
அலைகளுக்கு
எதிராக
நீந்துவது
என்பது
கடினமானதுதான்
ஆனால்
அதை
நீ
நீந்திக்கடந்து விட்டால்
இதுவரை
யாரும்
பார்த்தேயிராத
ஒரு கரையை
நீ
காண்பாய்…
ஷாஹித் ஆஜ்மிக்கு சிறையில் வைத்து பேரா. சக்ஸேனா நடத்திய இந்த அறிவுரை வரிகளின் மூலம் ஷாஹித் கண்ட கரை உண்மையிலேயே புதியதுதான்.
அதை நிரூபிக்க இப்போது ஒரு சிறிய கணக்கு ஒன்றை பார்ப்போம்:
ஷாஹிதின் ஏழு வருட வழக்கறிஞர் பணிக்காலத்தில் தனது திறமையான நேர்மையான வாதங்களின் வழியாக பதினேழு குற்றமற்றவர்களை விடுவிக்க உதவியிருக்கின்றார்.
ஒரு ஆளுக்கு குறைந்த பட்சம் பத்து வருட வாழ்க்கை என்று வைத்துக் கொண்டாலும் 17 X 10 = 170 வருடகால வாழ்க்கையை மீட்டுக்கொடுத்துள்ளார்.
33 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து மறைந்த ஷாஹிதின் ஆயுள் 170 வருடங்களையும் தாண்டி பெருகிய அதிசயம் . யாரும் காணாத புதியதோர் கரைதானே அது?
ஷாஹிதுக்கு மட்டுமல்ல இந்த வரிகளை தன் வாழ்வின் கருவுக்குள் பொதிந்து கொள்ளும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அவை புதிய புதிய கரைகளையும் பெருக்கங்களையும் காட்டிக்கொண்டேதான் இருக்கும்.
****
இந்த படம் சொல்ல வந்த செய்தியை இன்றைய இந்திய தமிழகச் சூழலில் பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் இந்திய அரசிடம் தானாக பணிந்து தன்னை ஒப்படைத்து கொண்டவர் யாகூப் மேமன். குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பான பல அரிய தகவல்களை அரசிடம் தெரிவித்தவர். குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாத கையாலாகாத தனம், வெறுப்பு வாக்கு வங்கி அரசியல் போன்ற காரணங்களுக்காக அவரை தூக்கில் ஏற்றில் கொலை செய்து விட்டது இந்திய அரசு.
தமிழகத்தில் ராஜீவ் கொலை வழக்கு, கோவை குண்டு வெடிப்பு பொய் வழக்குகள் , உளவுத்துறை அரங்கேற்றும் போலி வகுப்பு வாத தாக்குதல்களில் சிக்க வைக்கப்பட்டோர் , மாவோவிஸ்டுகள் மீது புனையப்பட்ட வழக்குகள் என அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வழக்கை விசாரித்த மேனாள் சி.பி.அய் உயர் அலுவலர் உட்பட சாட்சியங்கள் அனைத்தும் பேரறிவாளன் உள்ளிட்டோரின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து விட்டனர். மாநில அரசும் அவர்களை விடுதலை செய்ய ஆயத்தமாக இருக்கின்றது.
ஆனால் காங்கிரஸ்/பாஜக தலைமையிலான அன்றைய இன்றைய நடுவண் அரசுகள் பேரறிவாளன் உளிட்டோர் சிறைக்குள்ளேய மடிந்து அழுகி மண்ணாகிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
உள் நாட்டு பன்னாட்டு சக்திகளின் கூட்டு சதியில்தான் ராஜீவ் காந்தி உயிரிழந்தார் . அத்துடன் இந்த உயிரிழப்பிற்கு தார்மீக பரிமாணம் ஒன்றும் இருக்கின்றது. தில்லி சீக்கிய நர வேட்டையை ஆதரித்தது, இலங்கையில் ராணுவத்தை அனுப்பி சீரழித்தது , வகுப்பு வாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடு போன்ற மன்னிக்க முடியாத அவரின் நடவடிக்கைகளின் அதிர்வுகள்தான் அவரை இயல்பாகவே இறுதியில் இப்படி ஒரு முடிவை நோக்கி நகர்த்தியிருக்கிறது.
ராஜீவின் இறப்பிற்கான சூத்திரதாரிகளை காங்கிரஸ் கட்சியின் தலைமைக்குள்ளும் சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி, நரசிம்மராவ், மொஸாத், சி.அய்.ஏ போன்றோர்களிடமும்தான் தேட வேண்டும்.
அவர்களை எல்லாம் விட்டு விட்டு பேரறிவாளன் உள்ளிட்டோரை பலி கொடுப்பதில் எந்த நியாயமுமில்லை.
ஷாஹித் ஆஜ்மிக்கு இந்த திரைப்படம் நியாயம் வழங்கியது போல பேரறிவாளன் உள்ளிட்டோருக்கும் கலையுலகிலும் அரசியல் அரங்கிலும் நீதி கொடுக்கப்பட வேண்டும்.
பொய்யான பரப்புரைகள் மூலம் பொதுப்புத்தியில் படிய வைக்கப்பட்டுள்ள எதிர்மறை பிம்ப அழுக்கை கழுவி நீக்குவதில் கலைத்துறைக்கு பெரும் பங்கு இருக்கின்றது.
- சாளை பஷீர், எழுத்தாளர்
- shalai_basheer@yahoo.com