3
தையூர் பண்ணையாரின் தோப்புக்குள் சுவரேறிக் குதித்து பத்மநாபன் பம்ப் செட் கிணற்றை அடைந்தபோது அவனது நண்பர்கள் ஏற்கெனவே கிணற்றுக்குள் குதித்திருந்தார்கள்.
‘ஏண்டா லேட்டு?’ என்றான் பனங்கொட்டை என்கிற ரவிக்குமார். பண்ணையார் கிணற்றை நாரடிப்பதற்காகவே திருவிடந்தையிலிருந்து சைக்கிள் மிதித்து வருகிறவன்.
‘ட்ரீம்ஸ்ல இருந்திருப்பாண்டா. டேய் குடுமி, லவ் மேட்டரெல்லாம் நமக்குள்ள மட்டும்தாண்டா பேசிக்கணும். பொண்ணுங்க கிட்டபோய் சொல்லி அது பிரச்னையாகி பெரிசாச்சுன்னா உஸ்கோல்ல டிசி குடுத்துருவாங்கடா’ என்றான் மோகனசுந்தரம்.
எந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று பத்மநாபன் தனக்குள்ளே மட்டும் பொத்தி வைத்துப் பாதுகாத்துவந்தானோ அந்த விஷயத்தை முன் தினம் போட்டு உடைக்கவேண்டியதாகிவிட்டது. வகுப்பில் அவன் வளர்மதியிடம் நீட்டிய தாள் என்ன?
முதல் வினா, கலியமூர்த்தியிடமிருந்து வந்தது. அப்படியா? லெட்டரா குடுத்தான் என்று முதல் பெஞ்ச் பன்னீர் செல்வம் ஆர்வத்துடன் நாக்கைத் துருத்திக்கொண்டு முன்னால் வந்தான்.
இது விபரீதம் என்று பத்மநாபனுக்குத் தோன்றிவிட்டது. அதிர்ஷ்டம் ஓரளவு அவன்பக்கம் இருந்தபடியால் வளர்மதி அழுது ஆகாத்தியமெல்லாம் பண்ணாமல் வாங்கிய கடிதத்தைப் பையில் வைத்துக்கொண்டு வெளியே போய்விட்டாள். ஒருவேளை அது காதல் கடிதம் என்று அவளுக்குத் தோன்றாதிருந்திருக்கலாம். பத்மநாபன் சொல்லித்தான் கொடுத்தான். ஆனாலும் காதில் விழாமல் போயிருக்கக்கூடும்.
புத்திக்குத் தெரிந்திருக்காதா என்ன? பகா எண்கள் பற்றியா எழுதிக் கொடுத்திருப்பான்?
அது தனக்கும் அவளுக்குமான ஒரு மௌனப்போராட்டம் என்பதாக அவன் தன் மனத்துக்குள் கருதியிருந்தான். தன் காதலை அவள் ஏற்றுக்கொண்டுவிடுகிற பட்சத்தில் தனது நட்பு வட்டத்தையே மாற்றி அமைத்து முதல் பெஞ்ச் பன்னீருடன் கூட நட்பு பேணத் தயாராக இருந்தான். பெண்களுக்கு முதல் பெஞ்ச் பசங்களை ஏனோ மிகவும் பிடித்திருக்கிறது. நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு, நோட்டைத் திறந்ததும் ‘உ’ போடுகிறவர்கள் அவர்களைப் பொருத்தவரை உலக உத்தமர் காந்தியடிகளுக்கு அடுத்தப் படியில் இருப்பவர்கள்.
பிரச்னையில்லை. தன்னாலும் இயலும். திருநீறு வைக்கவும் திருவாசகம் படிக்கவும். கொஞ்சம் மெனக்கெட்டால் ஒன்றிரண்டு பாடங்களிலாவது முதலிடத்தைப் பெற்றுவிடவும் முடியும். சனியன் பிடித்த ஆங்கிலத்தை மட்டும் பன்னீருக்கு நேர்ந்துவிடத்தான் வேண்டும். ஏதாவது சாலாக்கு செய்து அப்பாவைப் பேசிச்சரிக்கட்டி, பேண்ட் கூட வாங்கிவிடலாம். எல்லாமே சாத்தியம்தான். அவள் அங்கீகரிக்கவேண்டும். அது முக்கியம். அது மட்டும்தான்.
‘டேய், அவகிட்ட என்ன குடுத்தே?’
கலியமூர்த்திதான் கேட்டான்.
‘என்னது? என்னது?’ என்றான் பத்மநாபன். உள்ளுக்குள் உஷாராகிக்கொண்டிருந்தான்.
‘எல்லாம் பாத்துட்டோம். மரியாதையா நீயே சொல்லிடு. லவ் லெட்டரா?’
‘இல்லியே?’ என்றான் வருவான் வடிவேலன் படத்து ஸ்ரீதேவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு.
‘சும்மா கதவிடாத. அவ நேரா அவங்க தாத்தாகிட்ட போயி குடுக்கப்போறா. மொதலியாரு வெளக்குமாற தூக்கிக்கிட்டு உங்க வீட்டாண்ட வந்து நிப்பாரு. ஏண்டா இப்படியெல்லாம் பண்ற?’
பத்மநாபனுக்கு லேசாக பயம் வந்தது. ஆத்திரம் மிகுந்த ஒரு கணத்தில் கடிதத்தைக் கொடுத்துவிட்டான். முன்னப்பின்ன வேறு யாருக்கும் இவ்வாறெல்லாம் கொடுத்ததில்லை. எல்லா காதலும் மனத்தில் பிறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதாகத்தான் இதுவரை இருந்துவந்திருக்கிறது. இதுதான் சற்று விபரீதக் காதலாக இருக்கிறது. பத்தாம் வகுப்புக்குப் போகவிருக்கிற வேளையில் இந்த அவஸ்தை மிகப்பெரிதாக உள்ளது. என்ன செய்தால் தணியும் என்று தெரியாமல் கடிதம் கொடுத்துப் பார்த்தது, இப்போது நண்பர்களின் விசாரணைக்கு உட்பட்டிருக்கிறது. பிரச்னை என்று ஏதும் வந்தால் உண்மையிலேயே எப்படிச் சமாளிப்பது?
அது குறித்து அவன் யோசித்திருக்கவில்லை. எனவே கவலை கொண்டான்.
‘டேய் மூர்த்தி, உன்னை என் பெஸ்ட் ·ப்ரெண்டா நினைச்சி சொல்லுறேன். ஆமா. லவ் லெட்டர்தான் குடுத்தேன். அவ ஏத்துப்பான்னு நம்பிக்கை இருக்கு. ஆனா ஒருவேளை நீ சொன்னமாதிரி அவங்க தாத்தாவாண்ட காட்டிட்டா?’
கலியமூர்த்தி கங்கைகொண்ட சோழன் போல் பெருமிதப் புன்னகை புரிந்தான். ‘நெனச்சேன். சரி, கவலைப்படாத. நான் திங்க் பண்றேன். கண்டிப்பா ஒரு ஐடியா சிக்கும்.’ என்றவன், ஒருகணம் இடைவெளிவிட்டு ‘கீழ கையெழுத்து போட்டிருக்கியா?’
பத்மநாபன் யோசித்தான். சரியாக நினைவில்லை. யுவர்ஸ் ஒபீடியண்ட்லி என்று போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடலாமா என்று யோசித்தது நினைவிருந்தது. ஆனால் கையெழுத்துப் போட்டோமா இல்லையா?
‘சரியா ஞாபகம் இல்லடா’
‘போடாம இருந்தேன்னா நாளைக்கு ஒரு ப்ராப்ளம்னு வந்தா அது நான் குடுக்கலன்னு சொல்லிடலாம்’
அடடே, எத்தனை சிறந்த யோசனை! உண்மைத் தோழன் மட்டும்தான் இப்படியெல்லாம் உதவுவான். கடவுளே, நான் கையெழுத்துப் போடாமல் இருக்கவேண்டும்.
‘மூர்த்தி, ரொம்ப தேங்ஸ்டா. கையெழுத்துப் போடலனுதான் நினைக்கறேன். ஆனா இந்த விஷயத்த நீ யாராண்டயும் சொல்லாதடா. அவ அக்செப்ட் பண்ணிட்டான்னா அப்பறம் சொல்லிக்கலாம்’ என்று சொன்னான்.
‘சேச்சே. இதெல்லாம் உன் பர்சனல். நான் யாராண்டயும் சொல்லமாட்டேன்’ என்று நம்பிக்கை சொல்லிவிட்டு, சத்துணவுக்கூடத்துக்குப் பின்புறமிருக்கும் வேலிக்காத்தான் புதர் அருகே போய் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொருவரையாகக் கூப்பிட்டு அனுப்பியிருக்கிறான்.
‘மேட்டர் தெரியுமா? குடுமி, வளருக்கு லவ் லெட்டர் குடுத்துட்டான். அது அளுதுக்கிட்டே வீட்டுக்கு ஓடுது. நான் பாத்தேன்.’
‘சேச்சே. அவ ஒண்ணும் அழுதுக்கிட்டு போகல. சாதாரணமாத்தான் போனா’ என்று பத்மநாபனே பிறகு அனைவரிடமும் விளக்கம் தரவேண்டியிருந்தது.
‘நீ ஒரு கூமுட்டடா. கலியமூர்த்தியாண்ட ஏன் மேட்டர சொன்ன? என்னாண்ட சொல்லியிருக்கலாம்ல?’ என்று பனங்கொட்டை கேட்டான்.
‘இவுரு ரொம்ப ஓக்யம். பாபு ஜெயலலிதாவ லவ் பண்றேன்னு உன்னாண்ட தானே சொன்னான். நீ என்னா செஞ்ச? நேருக்கா போயி அவங்கம்மாவாண்ட சொல்லி மாட்டிவுட்ட இல்ல?’
‘அது வேற இதுவேற. அப்ப அவன் என்னிய சா·ப்ட் பால் டீம்ல சேத்துக்கமாட்டேன்னு சொல்லிட்டான்.’
‘க்ளாரா, சரவணன் லவ்வு கெட்டதும் உன்னாலதான். மறந்துடுச்சா?’
‘போடாங். என்னிய ஒளுங்கா நம்பினா கண்டிசனா லவ்வுக்கு ஹெல்ப் பண்றவன் நான். பாஸ்கருக்கு எத்தன வாட்டி நான் லெட்டரு கொண்ட்டுபோயி குடுத்திருக்கேன் தெரியுமா? வந்தான்னா கேட்டுப்பாரு.’
தையூர் பண்ணையின் கிணற்றை அதகளப்படுத்திக்கொண்டிருந்தார்கள். நூறடி ஆழக் கிணறு அது. அகல வாய் திறந்த பூதம் மாதிரி தரையோடு கிடக்கிற கிணறு. பதினொரு மணிக்கு மோட்டார் போட மருதய்யன் வருவான். அதுவரை கேட்க நாதி கிடையாது. ஞாயிறு ஆனால் பத்மநாபனும் நண்பர்களும் தூங்கி எழுந்ததும் கிணற்றுக்கு வந்துவிடுவார்கள்.
கண் சிவக்கும் வரை குதித்துக் குளித்துவிட்டு கையோடு இரண்டொரு மாங்காய் அடித்துச் சாப்பிட்டுவிட்டுப் பொடிநடையாக வீடு போய்ச் சேர்ந்தால் மதியச் சாப்பாட்டுக்குச் சரியாக இருக்கும்.
அந்தக் குளியலுக்கும் ஞாயிற்றுக்கிழமைப் பகலுணவுக்கும் வருகிற தூக்கம் அபாரமாக இருக்கும்.
பத்மநாபனுக்கு எப்போதும் அந்தத்தூக்கம் பிடிக்கும். இப்போது மிகவுமே பிடித்திருந்தது. பகலில் படுத்து வளர்மதியை நினைத்துக்கொண்டிருக்கலாம். நினைவிலிருந்து உறக்கத்துக்கு நழுவும்போது அவளும் உடன் வந்து கனவில் கதவு திறப்பாள். பாட்டுப் பாடலாம். கையைப் பிடித்துக்கொண்டு கோவளம் கடற்கரையில் அலைந்து திரியலாம். புதிதாக அங்கே திறந்திருக்கும் தாஜ் கொரமாண்டல் ஓட்டலில் அவளோடு உட்கார்ந்து காப்பி சாப்பிடலாம். சாப்பிட்டுவிட்டு பில்லுக்கு அவள் பணம் கொடுக்க முனையும்போது கையைப் பிடித்துத் தடுத்துவிட்டு தானே கொடுக்கலாம். அவள் புன்னகை செய்வாள். எடுத்து சட்டைப்பையில் பத்திரப் படுத்திக்கொள்ளலாம்.
‘தபார் குடுமி, நீ லெட்டர் குடுத்தது தப்புன்னு சொல்லல. ஆனா எங்களாண்ட ஒருவார்த்த கேட்டுட்டுக் குடுத்திருக்கலாம். எதனா ப்ராப்ளம் வருமான்னு நாங்க திங்க் பண்ணியிருப்பம்ல?’
‘ஒண்ணும் வராதுடா. இன்னிக்கி சண்டே. ஒருநாள் எப்படியாச்சும் போயிருச்சின்னா நாளைக்கு அவ ஸ்கூலுக்கு வந்துடுவா. அப்ப தெரிஞ்சிட்டுப்போவுது!’
‘அவ ஒண்ணும் சொல்லலன்னா?’
‘அதெப்பிடிடா சொல்லாம இருப்பா? ஒண்ணு, சரின்னு சொல்லணும். இல்லனா அவங்க தாத்தாவையாவது இட்டுக்கினு வரணும்’ என்றான் பனங்கொட்டை.
பத்மநாபனுக்கு அவன்மீது மிகவும் சந்தேகமாகவே இருந்தது. தன்னை முன்வைத்து ஒரு முழுநீளப் பொழுதுபோக்குச் சித்திரத்தை அவன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறானோ என்று தோன்றியது. கோபம் வந்தது. அப்படியே கிணற்றடிக்குத் தள்ளிக்கொண்டுபோய் அழுத்திவிட்டால் என்ன?
அடக்கிக்கொண்டான். யார் என்ன சொன்னாலும் தன் காதல் அப்பழுக்கில்லாதது. உள்நோக்கம் அதில் கிடையாது. நான் அவளைக் காதலிக்கிறேன். அவ்வளவுதான். அவள் ஏற்றுக்கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.
ஒரு சௌகரியம். அது ஒரு சந்தோஷமும் கூட. இனிமேல் வெளிப்படையாகப் பள்ளி வளாகத்தில் யாரும் வளர்மதியைக் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கமாட்டார்கள். வளர்மதி குறித்துப் பேச்சுவந்தால், ‘அவ குடுமியோட ஆளுடா’ என்பார்கள்.
சமூக அங்கீகாரம் என்பது இவ்வாறாகத்தான் வெளிப்படும். காலப்போக்கில் அதுவே நிலைக்கும். பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியாதவரைக்கும் இம்மாதிரியான அங்கீகாரங்கள் அற்புத சுகமளிக்கும். பத்மநாபனுக்கு அது உவகை தரக்கூடிய சிந்தனையாக இருந்தது.
அன்றைக்குப் பத்தரைக்கெல்லாம் குளியல் ஆட்டம் முடிவடைந்துவிட்டது. நண்பர்கள் அனைவரும் துடைத்துக்கொண்டு துணிகளைப் பிழிந்து தோளில் போட்டுக்கொண்டு வழியில் தென்படும் கொய்யா, மாங்காய் வகையறாக்களை டிராயர் பைகளில் திணித்தபடி பேசிக்கொண்டே தோப்பைவிட்டு வெளியேறினார்கள்.
‘ரைட்ரா குடுமி, நாளைக்குப் பாப்போம்’ என்றான் பனங்கொட்டை. பத்மநாபன் அவனுக்கு ‘ஓகேடா’ சொல்லவில்லை. மற்ற அனைவரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றான்.
வீட்டுக்குப் போகிறவரை திரும்பத் திரும்ப பனங்கொட்டையைப் பற்றியே நினைத்துக்கொண்டான். தன் காதலுக்கு அவன் ஒரு வில்லனாவானோ என்கிற சந்தேகம் எழுந்தது. அப்படியாகிற பட்சத்தில் தன்னுடைய நண்பர்களில் யார் யார் எல்லாம் தன் பக்கமிருந்து தனக்காக வாதிடுவார்கள் என்று யோசித்துப் பார்த்தான்.
வளர்மதி தன் காதலை ஏற்றுக்கொண்டுவிடுகிற பட்சத்தில் இவர்கள் யாருமே ஒரு பொருட்டில்லை. ஞாயிற்றுக்கிழமை காலைகளை கிணற்றுக்குப் போய் குதித்து வீணாக்கிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமுமில்லை. அடித்த பாவத்துக்குப் புளித்த மாங்காய்களைத் தின்று தீர்க்கவேண்டியதில்லை. மாறாக வளர்மதியை அழைத்துக்கொண்டு திருவான்மியூர் ஜெயந்திக்கு பாயும் புலி பார்க்கப் போய்விடலாம். அடடே, பணத்துக்கு என்ன செய்வது?
இவ்வாறெல்லாம் நடக்க வாய்ப்பில்லாதவற்றை யோசிக்கிறோம் என்பதை அறிந்தே அவன் அது குறித்து யோசித்துக்கொண்டிருந்தான். அதுவும் சந்தோஷம் தரக்கூடியதாகவே இருந்தது. காதல்தான் எத்தனை அழகான பைத்தியக்காரத்தனம்! அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான். வெட்கப்பட்டான். வேகமாக வீட்டுக்குப் போனான்.
காம்பவுண்டு கதவைத் திறக்கும்போது பிடறியில் பேயடித்தமாதிரி இருந்தது. கடவுளே! இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது?
அவனது வீட்டு காம்பவுண்டு வாசலில் வளர்மதி நின்றுகொண்டிருந்தாள். அம்மாவுடன்தான் பேசிக்கொண்டிருந்தாள்.