"

5

தமிழ் ஐயா திரு.வி.கவை வாணலியில் போட்டு வறுத்துக்கொண்டிருந்தார். பத்மநாபனுக்கு போரடித்தது. அவன் ஒரு யோசனையுடன் வந்திருந்தான். பள்ளிக்கூடம் முடிந்ததும் ஒரு பத்து நிமிடம் வளர்மதி தன்னுடன், தான் கூப்பிடும் இடத்துக்கு வருவாளா? கொட்டகை இல்லை. கடற்கரை இல்லை. தோப்பில்லை. ஹோட்டல் இல்லை. கோயில். பூசாரி உள்பட யாரும் எப்போதும் போகிற வழக்கமில்லாத முத்துமாரி அம்மன் கோயில். தையூர் பண்ணையின் தோப்பை ஒட்டிய வாய்க்கால் வழியில் இருபதடி நடந்தால் அரசமரப் பிள்ளையார் ஒருத்தர் எதிர்ப்படுவார். ஒரு கும்பிடு போட்டுவிட்டு அப்படியே மேலும் முப்பதடி போனால் கீரைத் தோட்டங்கள் ஆரம்பிக்கும் வரிசையில் திருப்போரூர் பைபாஸ் சாலையில் செம்மண் புழுதி பூசிய சிறிய கோயில்.

ஏதோ ஒரு காலத்தில் பூஜைகள் நடந்திருக்கவேண்டும். விளக்குகளும் எரிந்திருக்கலாம். வீதியோரச் சிறு ஆலயங்களுக்குப் பொதுவில் யாரும் மானியங்கள் தருவதில்லை. ஆயினும் தையூர் பண்ணையார் நெல்லுக்கு இறைத்தபொழுதுகளில் வாய்க்கால் வழியே இந்தப் பக்கமும் கொஞ்சம் வந்து சேரத்தான் செய்தது.

காலப்போக்கில் பைபாஸ் முத்துமாரியம்மன் கோயில், மக்களுக்கு மெல்ல மறக்கத் தொடங்கிவிட்டது. ஊரில் வேறு பெரிய சைஸ் கோயில்கள் முளைக்க ஆரம்பித்தன. புதிய புதிய வழிபாட்டு முறைகள் தோற்றுவிக்கப்பட்டன. மட்டைத் தேங்காயைப் பாதி உரித்துக் கட்டு. நாற்பத்தியெட்டு நாளில் திருமணம் ஆகிவிடும். மஞ்சள் துணியில் பத்து ரூபாய் முடிந்து குளத்தில் வீசிவிட்டுத் திரும்பிப் பாராமல் போய்ச் சேர். மஞ்சள் காமாலை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

ஹோட்டல் பைரவர் கோயிலில் இன்னும் விசேஷம். கோயில் வாசலில் கோழி பலியிட்டு, பக்கத்திலிருக்கும் ஓலைக்குடிசை ஹோட்டலில் கொண்டு கொடுத்துவிட வேண்டும். ஒரு மணிநேரம் காத்திருந்தால் பிரசாதம் அங்கிருந்து கிடைக்கும். பிரியாணிப் பிரசாதம். தொன்னையில் வைத்த பிரசாதம். பிரசாதத்தில் லெக் பீஸ் அகப்பட்டால், முட்டிவலி தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கையை கி.பி. 1979ம் ஆண்டில் உள்ளூர் மகான் பக்கிரிசாமிப் பண்டாரம் [முன்னாள் உப்புமண்டி கமிஷன் ஏஜண்ட்] உருவாக்கிவைத்துவிட்டு, ஆஸ்துமா தொல்லையில் செத்துப்போனார்.

தொடரத்தான் செய்கிறது நம்பிக்கைகள். பிரியாணி, மட்டைத் தேங்காய், மஞ்சள் துணியில் முடிந்த பத்து ரூபாய் உள்ளிட்ட எந்த டிக்கெட் செலவும் இல்லாமல் பைபாஸ் முத்துமாரியம்மனின் அருள் இலவசமாகச் சுரந்துகொண்டிருப்பதைப் போலவே.

பத்மநாபனுக்கு முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிடிக்கும். அங்கு கிடைக்கும் தனிமை மட்டுமல்ல காரணம். ஜிலுஜிலுஜிலுவென்று எப்போதும் வீசும் அரசமரக் காற்று. என்ன தப்பு காரியம் செய்தாலும் யார் கண்ணிலும் படவாய்ப்பில்லை. முத்துமாரியம்மன் பொதுவில் பிள்ளைகளின் சில்லுண்டி விளையாட்டுகளைக் கண்டுகொள்வதில்லை என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. பத்மநாபன் தனது முதல் திருட்டு பீடியை அங்கே வைத்துத்தான் இழுத்துப் பார்த்தான். தேர்வுகளுக்கான பிட்டுகளை அங்கு வைத்துத்தான் தயாரிப்பது வழக்கம். அம்மனின் அருள் தேர்வுக்கு மட்டுமல்லாமல் பிட்டுக்கும் அவசியமுண்டு.

எனவே வளர்மதியிடம் தான் பேச விரும்பிய விஷயத்தை அங்கு வைத்து தெய்வசாட்சியாகச் சொல்வதே சாலச் சிறந்தது என்று அவன் முடிவு செய்தான்.

விஷயம் சற்றுத் தீவிரமானதும் கூட. இந்த வயதில் அவனைத் தவிர வேறு யாராலும் அப்படிப்பட்ட தொலைநோக்கு மனப்பான்மையுடன் சிந்திக்கவும் இயலாது. செகண்ட் ரேங்க் வாங்கும் வளர்மதிக்கு அந்தத் தொலைநோக்கு அவசியம் பிடிக்கும். அவனை அவள் விரும்ப அதுவே ஒரு தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும். பைபாஸ் அம்மனே, இதற்கு ஏற்பாடு செய்து கொடு. உனக்கு ஐம்பது பைசா காணிக்கை இடுகிறேன்.

இப்படி யோசித்த உடனே அவனுக்கு வேறொரு கவலையும் வந்துவிட்டது. ஐம்பது பைசாவைக் கண்டிப்பாக அம்மன் எடுத்துச் சென்று அரைமுழம் பூ வாங்கி வைத்துக்கொள்ளப் போவதில்லை. பூசாரி யாரும் வராத நான்கடி உயரமும் மூன்றடி நீளமும் கொண்ட சிறு கோயில். எப்போதும் பூட்டியே இருக்கும் கதவு. கம்பிக்குப் பின்னால் கால் கடுக்க நிற்கும் அம்மன் அந்த ஐம்பது பைசாவை என்ன செய்வாள்?

வீணாகக் கீழே அல்லவா கிடக்கப்போகிறது? வேண்டாம். வீணாக்குவது தவறு. ஆனால் கடவுளே, போடுவதாக வேண்டிக்கொண்டுவிட்டு இப்படிப் பால் மாறினால் பிரச்னை வந்துவிடுமோ?

ஐம்பது பைசாவில் சாதிக்கக்கூடிய விஷயங்கள் அநேகம். மேற்கொண்டு நாற்பது பைசா போட்டால் ராஜலட்சுமி திரையரங்கில் பெஞ்ச் டிக்கெட்டில் படம் பார்க்கலாம். நாற்பது முடியாது என்றால் பத்து பைசா கூடுதலாகப் போதும். தரை டிக்கெட் கிடைத்துவிடும். வெறும் ஐம்பது பைசாவுக்கே முடியக்கூடியவை உண்டு. மன்னார் கடையில் இரண்டு இடியாப்பங்கள். தொட்டுக்கொள்ள தேங்காய்ப் பால். அல்லது ஒரு காற்றாடியுடன் கூடிய ஒரு கட்டு மாஞ்சா நூல். ஞாயிறு காலை அவர் சைக்கிள். அடக்கடவுளே, அம்மன் கைவிட்டுவிடுவாளா?

இவ்வாறு அவன் கோர்வையற்று யோசித்துக்கொண்டிருந்தபோது தமிழ் ஐயா, அழகு என்பது யாது? என்று பெருமாள் சாமியைப் பார்த்துக் கேட்டார்.

அழகு என்பது வளர்மதி என்று பத்மநாபன் தனக்குள் சொல்லிக்கொண்டான். ஒருகணம் அவளைத் திரும்பிப் பார்க்கவும் செய்தான். படிக்கிற பெண்ணான வளர்மதி தமிழ் ஐயாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘என்னடே, கேக்கறேன்ல? சொல்லு. அழகு என்பது யாது?’

பெருமாள் சாமி திருட்டு விழி விழித்தபோது தமிழ் ஐயாவின் பார்வை பெண்கள் வரிசைக்குத் தாவியது.

‘நீ சொல்லு வளரு. இப்பத்தானே சொன்னேன்?’

வளர்மதி எழுந்து நின்று திறந்துவிட்ட பம்ப் செட் போல் பொழிய ஆரம்பித்தாள். அழகு என்பது நிறத்திலோ மூக்குக் கண்ணாடியிலோ கழுத்துச் சுருக்கிலோ பட்டுடையிலோ பிற அணிகலன்களிலோ அமைவது அன்று. மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற பேருறுப்புகள் செழிய நிலையில் நின்று ஒழுங்கு பெறக் கடனாற்றலால், நரம்புக் கட்டினின்றும் தடைபடாக் குறுதியோட்டத்தினின்றும் முகிழ்க்கும் தசையிடை அரும்புவதே அழகாம்…

‘போடு, போடு. என்னாம்மா படிச்சிருக்கா பாரு. எதுக்குடே நீயெல்லாம் பள்ளியோடத்துக்கு வர? பன்னி மேய்க்கப் போவுறதுதான?’

தமிழ் ஐயா கையிலிருந்த சாக் பீஸைப் பாதி உடைத்து, பெருமாள் சாமியின் மீது வீசியெறிந்தார்.

வகுப்பறை சிரித்தது.

மணி என்ன இருக்கும் என்று பத்மநாபன் யோசித்தார். வகுப்பு இப்போதுதான் ஆரம்பித்தது போலவும், தொடங்கி இரண்டு நாள் ஆகிவிட்டது போலவும் இருவிதமான உணர்வுகள் ஒரே சமயத்தில் தோன்றின. தினத்தின் கடைசி வகுப்பு. சீக்கிரம் முடிந்துவிட்டால் சால நன்று. வளர்மதியிடம் ஒருவார்த்தை சொல்லவேண்டும். ஒரே வார்த்தைதான். அதனைப் பின்பற்றி அவள் தன்னுடன் பைபாஸ் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வந்துவிட வேண்டும். நீளக் கதைகள், விளக்கங்கள் உதவாது. என்ன சொல்லலாம்?

அவன் தீவிரமாக சொற்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் ‘உய்ய்ய்ய்’ என்றொரு சத்தம் கேட்டது.

பெருமாள் சாமிதான் அப்படி உதட்டைக் குவித்துக் கத்துவான். அது ஒரு சமிக்ஞை. ஒரு குறும்புக்கான முன்னெச்சரிக்கை. அனைவருக்கும் தெரியும்.

பத்மநாபன் தன்னிச்சையாகத் திரும்பிப் பார்க்க, பெருமாள் சாமி தன்னிரு கைகளையும் குவித்து ஒரு பேப்பர் ராக்கெட்டை இடையில் வைத்துக் குறிபார்த்துக்கொண்டிருந்தான்.

தமிழ் ஐயாவுக்கா?

ஒரு கணம் அவன் கண்ணிமைத்துத் திறந்தபோது பெருமாள் சாமியின் ராக்கெட் ஜிவ்வோவென்று பறந்து சென்று வளர்மதியின் காதோரம் சொருகி நின்றது.

வளர்மதி திடுக்கிட்டுத் திரும்பினாள். முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

‘டேய், லூசு..’ என்றாள் பெருமாளைப் பார்த்து.

‘என்னது? என்னது?’ என்றார் தமிழ் ஐயா.

‘ஒண்ணுமில்ல சார்’ என்று ராக்கெட்டை எடுத்து பெஞ்சுக்குக் கீழே போட்டாள். மீண்டும் பாடத்தில் ஆழ்ந்தாள்.

பத்மநாபனுக்கு ரத்தம் கொதிக்கத் தொடங்கியது. இது அத்துமீறல். சந்தேகமில்லாமல் அத்துமீறல். வகுப்பில் ராக்கெட் விடுவது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருப்பதுதான் எனினும் வளர்மதியின் மீது அவன் அதனை ஏவியது கண்டிக்கப்படவேண்டிய செயல். அரசல்புரசலாக முழு வகுப்புக்கும் வளர்மீது அவனுக்குள்ள காதல் தெரியும். இனி அவள் குடுமியின் ஆள். குறைந்தபட்சம் அவனது காதல் இன்னொருத்தியின்மீது திரும்பும் வரை. அந்தக் காலங்களில் ராக்கெட் விடுவது, கேலி செய்வது, சீண்டுவது போன்றவை அவசியம் தவிர்க்கப்பட்டாக வேண்டும். இது பொதுவிதி.

பெருமாள் சாமி எப்படி இதனை மீறுவான்? அவனது ஆளான நைன்த் சி மணிமேகலையின்மீது பத்மநாபன் ராக்கெட் விட்டால் சும்மா இருப்பானா?

உக்கிரமாக அவன் எழுந்து நின்றான். பெருமாள் சாமியை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

முதல் பெஞ்ச் தவிர அனைவரும் இதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தமிழ் ஐயா, போர்டில் திரு.வி.க.வின் தமிழுக்குப் பதம் பிரித்துப் பொருள் விளக்கம் எழுதிக்கொண்டிருந்தபடியால் அவர் கவனிக்கவில்லை.

பத்மநாபன் மெல்ல நடந்து பெருமாள் சாமியின் அருகே போய் நின்றான்.

பெருமாள் முறைத்தான். ‘என்னா?’

‘ஏன் அவமேல ராக்கெட் விட்ட?’

‘என் இஷ்டம்’

‘தபார்! அவ என் ஆளு.’

‘தூத்தேரி’ என்றான். பத்மநாபனுக்கு அது ஒரு கெட்டவார்த்தை என்று தோன்றியது. ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் பெருமாள் சாமியின் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விட்டான்.

பற்றிக்கொண்டுவிட்டது.

முழு வகுப்பும் திரும்பிப் பார்க்க இருவரும் கட்டிப்புரண்டு அடித்துக்கொண்டதன் காரணம் புரியாமல் தமிழ் ஐயா பிரமித்து நின்றிருந்தார். தன் நிலை உணர்ந்த சமயம், ‘டேய், டேய், எந்திரிங்கடா டேய்.. என்னடா ஆச்சு?’ என்று அருகே ஓடி வந்து இருவர் மீதும் தலா இரண்டு பிரம்படிகளை வைக்க, அந்தச் சண்டை அவ்வாறாக நிறுத்தப்பட்டது.

பள்ளி முடிந்துவிட்டதற்கான மணி அடித்தது. பத்மநாபன் தன் முறைப்பு குறையாமல் தனது பையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான்.

வளர்மதி தன்னை கவனிக்கிறாளா என்று பார்த்தான். இல்லை. அவள் கிளம்பும் மும்முரத்தில் இருக்க, வேகமாக அவளருகே சென்றான்.

வகுப்பை விட்டு வெளியே சென்ற தமிழ் ஐயா, என்ன நினைத்தாரோ திடுமென்று உள்ளே திரும்பி வந்து, ‘டேய், குடுமி, நீயும் அவனும் ஸ்டா·ப் ரூமுக்கு வாங்க’ என்று சொல்லிவிட்டு மீண்டும் வெளியேறினார்.

பத்மநாபன் அதிர்ச்சியடைந்தான். பைபாஸ் முத்துமாரியம்மன் இப்படிக் கடைசி வினாடியில் கைவிடுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.