7
உலகம் இருட்டாக இருக்கிறது. எதிர்காலம் என்னவாகும் என்று யூகிப்பதற்கில்லை. நிகழ்காலத்தில் அப்பாவை அழைத்துவரச் சொல்லி இம்முறை ஓலை கொடுத்தாகிவிட்டது.
பொதுவாக பள்ளிக்கூடத்துக்கு அப்பாக்களை அழைத்துச் செல்வது அத்தனை கௌரவமான செயல் அல்ல. குற்றச்சாட்டுகளைப் படிக்கிற திருவிழா அது. ஆசிரியர் முன்னால் அப்பாக்கள் நிகழ்த்தும் வன்கொடுமைகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. அங்கேயே அடித்து, அங்கேயே திட்டி, தன் மானத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்குவதற்காகவே பிறந்தவன் என்று பட்டம் சூட்டி, தன் தலையில் அடித்துக்கொண்டு, அழுது நாடகம் அரங்கேற்றி ஒரு வழி பண்ணிவிடும் அப்பாக்கள்.
பத்மநாபனுக்கு விழப்போகிற அடிகள் பற்றியோ, கேட்கப்போகிற வசவுகள் பற்றியோ பெரிய வருத்தமில்லை. விஷயம் தன் காதல் சம்பந்தப்பட்டது. அப்பாக்களுக்குக் காதல் என்றால் என்னவென்று தெரியாது அல்லது புரியாது. புரியவைப்பது பெரும் கஷ்டம். முளைத்து மூணு இலை என்று ஆரம்பித்துவிட்டால் தையூர் பண்ணையின் பம்ப் செட் மாதிரி பொழிந்துகொண்டே இருப்பார்கள்.
பத்மநாபன் நிறைய பார்த்திருக்கிறான். வெங்கட்ராமன் காதலில் விழுந்தபோது அவனது அப்பா வந்து அரங்கேற்றிய ஆக்ஷன் காட்சிகள். துரைராஜின் அப்பா மரத்தில் கட்டிப்போட்டு அடித்த அடிகள். பாபுவின் அப்பா ஒரு மாறுதலுக்குத் தன் தலையில் தானே அடித்துக்கொண்டு அழுத காட்சி இன்னமும் அவன் மனக்கண்ணில் நிற்கிறது.
இத்தனை பாடுகள் படுவதற்காகவாவது எந்தப் பெண்ணாவது காதலை ஏற்றுக்கொள்ளலாம். கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் காதலர்களின் எண்ணிக்கைதான் உயர்ந்துகொண்டே போகிறதே தவிர ஒரு காதலியும் அவதரித்தபாடில்லை. பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? காதலித்துத் தொலைத்தால் தான் என்ன?
ராஜலட்சுமி திரையரங்கத்தில் அலைகள் ஓய்வதில்லை ரிலீஸ் ஆனபோது வளர்மதி உள்பட பல பெண்களின் புத்தகப் பையில் கார்த்திக்கின் புகைப்படம் இருந்தது பத்மநாபனுக்குத் தெரியும். சற்றே கோபமாகவும் கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது அது. கோபம், கார்த்திக்கின் புகைப்படத்துக்காக. ஆறுதல், அந்தக் கதாநாயகனின் இடத்தில் என்றேனும் ஒருநாள் தன் படத்தை அவள் வைப்பாள் என்னும் நம்பிக்கையின் விளைவு.
ஆனால் கார்த்திக்கின் இடத்தை அடுத்தடுத்து வந்த வேறு பல கதாநாயகர்கள் பிடித்தார்களே தவிர பத்மநாபனுக்கும் பன்னீருக்கும் பிறருக்கும் இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எடுத்து வைத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுக்கு வேலையில்லாமல் போனது.
பத்மநாபனுக்கு அதெல்லாம் கூட வருத்தமில்லை. தாம் காதலிக்கிறோம் என்று அவளுக்குத் தெரியும். பள்ளிக்கே தெரியும். இதோ இப்போது ஆசிரியர்களுக்கும் தெரிந்து, அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்கள். மாமரத்துச் சண்டையின் விளைவாக அவனுக்கும் பெருமாள் சாமிக்கும் இடையே உண்டாகியிருந்த நிரந்தரப் பகை பள்ளி முழுதும் பிரசித்தமாகியிருந்தது.
‘ஒன்ன சும்மா விடமாட்டேண்டா. நீ எப்படி வளர்மதிய லவ் பண்ணிடரேன்னு பாத்துடறேன்’ என்று வெஞ்சினத்துடன் வீரசபதம் செய்துவிட்டுப் போனவன் நேரே தலைமையாசிரியரின் அறைக்குத்தான் சென்றிருக்கிறான்.
உண்மை விளம்பி. ஆனால் பெயருடன். ஆதாரத்துடன்.
‘நீங்களே கூப்ட்டு அந்தப் பொண்ண விசாரிச்சிப் பாருங்க சார். வெளிய சொல்ல பயந்துக்கிட்டு உள்ளுக்குள்ளாற அழுதுக்கிட்டிருக்குது சார். என் தங்கச்சி மாதிரிசார் அது. என்னால தாங்கமுடியல சார்’ என்று அவன் நிகழ்த்திய ஓரங்க நாடகத்தின் விளைவு, அப்பாவை அழைத்துவரவேண்டும்.
ப்ரேயர் முடிந்தவுடன் தன்னை அறைக்கு வந்து பார்க்கச் சொன்ன தலைமையாசிரியர், ‘ஒழுங்கா படிக்கப்போறியா? டிசி வேணுமா?’ என்று கேட்டார்.
கண்டிப்பாக டிசி வேண்டாம். ஆனால் ஒழுங்காகப் படிக்கவும் முடியவில்லை. புத்தகத்தைத் திறந்தாலே வளர்மதியின் முகம்தான் தெரிகிறது. விளையாட்டு பீரியட்களில்கூட மனம் தோயமறுக்கிறது. நண்பர்கள் வீசும் சா·ப்ட் பாலை விசிறி அடித்துவிட்டு மூச்சிறைக்க ஓடும்போதெல்லாம் எங்கேனும் கண்ணில் அவன் தென்படுகிறாளா என்று அலைபாய்கிறது. எப்போதும் வகுப்பறையில் பார்வை தன்னிச்சையாக அவள் அமர்ந்திருக்கும் இடத்தில்தான் போய் நிற்கிறது. வளர்மதி. வளர்மதி. வளர்மதி.
வழியே இல்லை. ரத்தத்தில் கலந்துவிட்ட ஒரு நல்ல கிருமி. யாரும் எதுவும் செய்துவிட முடியாது.
இரவு அப்பா வாசலில் உட்கார்ந்து காலை தினத்தந்தியைக் கடன் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தபோது அருகே சென்று அமர்ந்தான்.
‘என்னடா?’
‘ஒரு விஷயம் சொல்லணும்’
‘சொல்லு’
‘ஒரு சின்ன பிரச்னை.’
திரும்பிப் பார்த்தார். ‘சொல்லு.’
‘கோச்சிக்கக்கூடாது. திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது. இப்பவே சொல்லிட்டேன்.’
அவன் எதிர்பார்த்தது ஒன்றுதான். இப்படிச் சொல்வதன்மூலம் அவர் முகத்தில் சிறு புன்னகை ஒன்று வந்துவிடுமானால் விபரீதத்தின் சதவீதம் சற்றுக் குறையக்கூடும். ஆனால் அப்பாவிடம் காதலைப் பற்றி எப்படிப் பேசுவது. அதுவும் முளைச்சி மூணு இலை விடாதவன். இந்த மூன்று இலைகள் என்னென்ன என்று யாரிடமாவது கேட்கவேண்டும். ஏன் நான்காகவோ இரண்டாகவோ அது இல்லை?
‘பீடிகையெல்லாம் பலமா இருக்குது? என்னா விசயம் சொல்லு’ என்றார் அப்பா.
பத்மநாபன் தன்னிச்சையாகத் திரும்பிப் பார்க்க, அம்மா அங்கே வந்து நின்றிருந்தாள். ‘என்னம்மா?’ என்று கேட்டான்.
‘எனக்கு ஒண்ணுமில்ல. என்னிக்குமில்லாத திருநாளா அப்பாவாண்ட உக்காந்து பேசுறியே, என்னான்னு பாக்க வந்தேன்.’
அவன் அப்பாவைப் பார்த்தான். இதுவும் சந்தர்ப்பம். தவறவிடக்கூடாது. ‘அதெல்லாம் பர்சனல். நான் அப்பாவாண்டதான் பேசுவேன். நீ உள்ள போ’ என்று சொன்னான்.
அம்மா அதிர்ச்சியடைந்துவிட்டாள். ‘என்னங்க இது! இவனுக்கு என்ன ஆச்சு இன்னிக்கி?’
‘டேய், நீ வாடா’ என்று அழைத்துக்கொண்டு வீட்டு வாசலுக்குச் சென்றார். ‘இப்ப சொல்லு.’
அவன் அதற்குமேல் தயங்கவில்லை. ‘தெரியாத்தனமா நா ஒரு பொண்ண லவ் பண்ணிட்டேம்பா’ என்று முதல் வரியில் விஷயத்தை உடைத்தான்.
அப்பா அதிர்ச்சியடைந்தார். ‘என்னடா சொல்லுறே?’
‘மன்னிச்சிருங்கப்பா. இதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரியும். ஆனாலும் தப்பு செஞ்சிட்டேன். உங்களாண்ட சொல்லாம இருக்க வேணாம்னு தோணிச்சி. யாராண்டவேணா எதவேணா மறைப்பேம்பா. உங்களாண்ட என்னால முடியாது!’
கவனமாகத் தேர்ந்தெடுத்துக் கோத்த வார்த்தைகள். கண்டிப்பாக அப்பா நிலைகுலைந்துதான் போவார். சந்தேகமில்லை.
அவர் பேசவில்லை. நெடுநேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு சட்டென்று இறங்கிவந்து, ‘சரி, என்னா இப்ப?’ என்றார்.
‘ஒண்ணுமில்ல. நா லவ் பண்ணது உண்மை. ஆனா அந்தப் பொண்ணுக்கு அதெல்லாம் தெரியாது. நான் சொல்லல. இந்த வயசுல இதெல்லாம் கூடாதுன்னு எனக்கும் தெரியும்.’
அவர் பேச்சற்றுக் கேட்டுக்கொண்டிருந்தார்.
‘நல்லா படிச்சி முடிச்சி பெரியாளா ஆனப்பறம் பாத்துக்கலாம்னுதான் இருந்தேன். ஆனா ஒருத்தன் ஹெட் மாஸ்டராண்ட என்னப்பத்தி போட்டுக்குடுத்துட்டான்.’
‘என்னன்னு?’
‘நான் வளர்மதிய லவ் பண்றேன்னு.’
‘கர்மம். உங்களுக்கெல்லாம் பள்ளியோடத்துல வேற வேலையே இல்லியாடா?’
‘தப்புதாம்பா. மன்னிச்சிருங்க. நான் யாருக்கும் தெரியாமத்தான் வெச்சிருந்தேன். அவன் குண்ஸா கண்டுபிடிச்சி போட்டுக்குடுத்துட்டான். இப்ப ஹெட் மாஸ்டர் உங்கள இட்டார சொல்றாரு. மெய்யாவே அந்தப் பொண்ணுக்கு இந்த விசயம் தெரியாதுப்பா. இதுமூலமா தெரிஞ்சி அதுக்கு எதாச்சும் கஷ்டம் வந்துடப்போவுதேன்னுதான் சொல்றேன்.’
‘அடி செருப்பால’ என்றார். ஆனால் அந்த சொல்லில் எப்போதுமுள்ள தீவிரம் இல்லை என்பதை அவன் விழிப்புணர்வுடன் கவனித்தான்.
‘நீங்க என்னிய எவ்ளோவேணா திட்லாம், அடிக்கலாம்பா. செஞ்சது தப்புதான். அது புரிஞ்சிடுச்சி. இன்னமே செய்யமாட்டேன். இது சத்தியம். ஆனா நாளைக்கு ஹெட் மாஸ்டராண்ட பேசறப்ப, அந்தப் பொண்ண கூப்ட்டு பேசவேணாம், அதுக்கு ஒண்ணும் தெரியாதுன்றத நீங்கதாம்பா சொல்லணும்.’
கடவுளுக்கு நன்றி. தக்க சமயத்தில் கண்ணில் ஒரு சொட்டு நீரும் வருகிறது. வாழ்க.
ஒரு கல்லில் சில மாங்காய்கள் இன்று சாத்தியமாகியிருக்கின்றன. ஆனாலும் அப்பாவுக்கு இது அதிர்ச்சிதான். பேரதிர்ச்சி என்றும் சொல்லலாம். வேறு வழியில்லை. தன் மகனைச் சான்றோன் என்று கேட்கும் நாள் வரை இம்மாதிரியான சங்கடங்களை அவர்கள் எதிர்கொண்டுதான் தீரவேண்டும்.
பத்மநாபன், அவர் கண்ணில் படும்படி தன் கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டான். தாங்கமுடியாத மகிழ்ச்சியில் லேசான சிரிப்புக் கூட வந்தது. அடக்கிக்கொண்டான். இரவு சீக்கிரமே படுத்துத் தூங்கிவிட்டான்.
மறுநாள் காலை அவன் பள்ளிக்குச் செல்லும்போது அப்பாவை நிமிர்ந்து பார்த்தான். ‘பதினொரு மணிக்கா வரேன்னு சொல்லு’ என்றார்.
‘சரிப்பா’ என்று மட்டும் சொல்லிவிட்டு ஓடியே விட்டான். கவனமாக அம்மாவைத் தவிர்த்தான். அது பற்றிய குறுகுறுப்பு இருந்தது. பிரச்னையில்லை. வந்து பார்த்துக்கொள்ளலாம். ஆனானப்பட்ட அப்பாவையே ஒரு சிறு நாடகத்தில் கட்டிப்போட்டுவிட முடிந்தபிறகு அம்மாக்கள் எம்மாத்திரம்? சொல்லப்போனால் அப்பாவோ அம்மாவோ இப்போது ஒரு பிரச்னையே இல்லை. ஹெட்மாஸ்டரைச் சமாளித்துவிட்டால் போதுமானது. வீட்டுக்கு விஷயம் தெரியும், மேற்கொண்டு சிக்கல் ஏதுமில்லை என்பதை வகுப்பில் பிரகடனப்படுத்திவிட்டால் பெருமாள் சாமி தன் முகத்தை எங்குகொண்டு வைத்துக்கொள்வான்?
பள்ளி மணி அடிக்க இருபது நிமிடங்களுக்கு முன்னதாகவே அவன் வகுப்புக்குச் சென்று பையை வைத்துவிட்டு வேகமாக கிரவுண்டுக்குப் போனான். வளர்மதியும் வேறு சில பெண்களும் அங்கே ரைட்டா, ரைட்டு, ரைட்டா, ரைட்டு என்று கட்டம் போட்டு பாண்டியாடிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு கணம் யோசித்தான். சட்டென்று அருகே சென்று, ‘வளரு உன்னாண்ட ஒரு நிமிசம் பேசணும்.’ என்று சொன்னான்.
அவள் திரும்பிப் பார்த்த அதே சமயம் ஹெட் மாஸ்டரும் பின்னாலிருந்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.