"

11

இன்றோடு வகுப்புகள் முடிகின்றன. சரியாக ஏழாவது நாள் தேர்வுகள் தொடங்கும் என்று நோட்டீஸ் போர்டில் ஹெட் மாஸ்டர் கையெழுத்துப் போட்ட அறிவிப்பை ப்யூன் எட்டியப்பன் வந்து ஒட்டிவிட்டுச் சென்றான்.

‘வளர்மதி ஏன் இந்த ஒருவாரம் இஸ்கூலுக்கு வரல?’ என்று பத்மநாபன் ராஜாத்தியிடம் கேட்டான்.

அவனை ஒருமாதிரி முறைத்துப் பார்த்தவள், ‘தெரியல. தெரிஞ்சிக்கவேண்டிய அவசியமும் இல்ல’ என்று சொல்லிவிட்டுப் போனாள். உட்கட்சிப் பூசல் என்னவென்று பத்மநாபனுக்குத் தெரியவில்லை. வேறு யாரிடம் விசாரித்தால் விவரம் தெரியும் என்றும் புரியவில்லை. பையன்கள் யாருக்கும் தன் தவிப்பு தெரியாமல் பெரும்பாலும் புத்தகங்களால் தன் முகத்தை மறைத்துக்கொண்டான். பெண்கள் பிரிவில் வளர்மதிக்கு நெருக்கமான ஒன்றிரண்டு பேரிடம் பேச்சுக்கொடுத்துப் பார்த்தபோது சரியான பதில் கிடைக்கவில்லை.

எதனா உடம்புக்கு சரியில்லாம இருக்கும்டா குடுமி என்று க்ளாரா சொன்னாள். திக்கென்றது. எப்படி இதனைப் போய் செய்தி வாசிக்கும் தொனியில் சொல்கிறாள்? சந்தேகமாகத்தான் சொல்கிறாள் என்றாலும் தனக்கு ஏன் அது குடலைப் புரட்டி, தொண்டைக்குத் தள்ளுகிறது?

ஜெயலலிதாவிடம் கேட்டபோது, ‘அவங்கப்பா அவள அடையாறுல சேக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. ஒருவேள எக்சாம அடையார் ஸ்கூல்ல எளுதறாளோ என்னமோ’ என்றாள் சர்வ அலட்சியமாக.

குப்பென்று அழுகை முட்டிவிட்டதைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு வேறு புறம் திரும்பிக்கொண்டான்.

வேறு சிலரும் அவன் விரும்ப இயலாத பதில்களையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். வெறுப்பாக இருந்தது. எப்போதும் அழுகை வந்தது. படிக்கத் தோன்றவில்லை. இதுதானா? இவ்வளவுதானா? ஒரு மாதக் கடும் முயற்சி. இறுதித் தேர்வில் நிச்சயமாக முதல் மார்க் வாங்கக்கூடிய தரத்தைத் தொட்டுவிடுவோம் என்று அவன் தீர்மானமாக நம்பத்தொடங்கியிருந்த வேளையில் இப்படியொரு பூதம் புறப்பட்டிருக்கிறது. நான் என்ன ஆகப்போகிறேன்?

மொட்டை மாடி விளக்கின் அடியில் புத்தகத்தை வைத்துக்கொண்டு பத்மநாபன் யோசித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வியப்பாக இருந்தது. வளர்மதி பள்ளிக்கு வராதது பற்றி ஆசிரியர்கள் யாரும் ஒருவார்த்தை கூட கேட்கவில்லை. அட்டண்டன்ஸ் எடுக்கும் முதல் பீரியட் தமிழய்யா கூட வாய் திறக்கவில்லை. கவனமாக அவள் பெயரே பதிவில் இல்லாதது போல நகர்ந்து சென்று அடுத்த பெயரை உச்சரித்து உள்ளேன் ஐயாவைப் பெற்றுக்கொண்டு மேலே சென்றார். வகுப்பின் பிற மாணவர்கள் யாரும் ஒரு தகவலுக்காகக் கூட அவளைப் பற்றி விசாரிக்காதது மேலும் வியப்பாக இருந்தது. யாருக்கும் அவள் பொருட்படுத்தத்தக்க நபர் இல்லையா? புரியவில்லை.

‘படிக்குறியா? படிபடி’ என்று மேலே வந்து எட்டிப்பார்த்த அப்பா அன்பாகத் தலையை வருடினார். அழுகை வந்தது.

படிக்கவில்லை. படிக்க முடியவில்லை. அதுகூடப் பரவாயில்லை. படித்ததெல்லாம் மறந்துவிடும்போல் இருக்கிறது. இந்தக் கடன்காரி அப்படி எங்கேதான் போயிருப்பாள்?

‘அப்பா..’ என்றான் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு.

‘சொல்லுடா?’

யோசித்தான். எதுவும் பேசமுடியாது. படிக்கமுடியாத விஷயத்தைச் சொல்வதன்மூலம் சாதிக்கக்கூடியது எதுவுமில்லை. மொட்டைமாடித் தனிமைகூட இல்லாமலாகிவிடக்கூடும். எனவே, ‘ஒண்ணுமில்ல..சும்மாதான் கூப்ட்டேன்’ என்றான். சிரித்தார். போய்விட்டார்.

ஃபார்முலாக்கள் மறக்கத் தொடங்கின. உருப்போட்ட செய்யுள்கள் உதைத்தன. பாஸ்ட்டு பர்ஃபெக்டென்ஸும் ப்ரசண்ட் கண்டின்யுவஸ்டன்ஸும் தண்ணி காட்ட ஆரம்பித்தன. அக்பரும் பாபரும் பானிப்பட்டில் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதிக்கொண்டார்கள். உலகம் வலப்புறமாகச் சுழல ஆரம்பித்தது. புத்தகம் சரிய, அவன் அப்படியே தூங்கிப் போனான்.

‘நிஜமாவாடி?’ என்றாள் வளர்மதி.

‘சொன்னா நம்பமாட்ட. உம்மேல பைத்தியமா இருக்காண்டி’ என்று ராஜாத்தி சொன்னாள்.

அவள் சிரித்தாள். ‘தெரியும். ஆனா இதெல்லாம் தப்புதானே?’

‘நம்ம க்ளாஸ் பசங்களுக்கு லவ் பண்றது ஒரு ஹாபிடி. இவ என் ஆளு, அவ உன் ஆளுன்னு சொல்லிக்கிட்டு திரியணும். அதுல ஒரு கெத்து. ஆனா குடுமி டோட்டலா வேற மாதிரி இருக்கான் வளரு. போன வாரம் முழுக்க க்ளாஸ்ல அவன் பட்ட பாட்ட பாக்கணுமே நீ? மூஞ்சி பேயறைஞ்சமாதிரி இருந்திச்சி. யார்கிட்டயும் ஒருவார்த்த பேசல. நீ உக்கார்ற இடத்தையே பாத்துக்கிட்டிருந்தான்.’

வளர்மதி திரும்பவும் புன்னகை செய்தாள். சாப்பிட்டுக்கொண்டிருந்த குச்சி ஐஸ் உதட்டோரம் சற்றே ஒழுகி உதிர்ந்தது. அழகாக இருந்தது.

‘சொல்லிவெச்ச மாதிரி வாத்யார்கூட நீ எங்கன்னு கேக்கல தெரியுமா?’

‘நான் தான் அப்பாகிட்டேருந்து லெட்டர் வாங்கிட்டு வந்து குடுத்து முன்னாடியே அட்டண்டன்ஸ்ல லீவ் மார்க் பண்ணிட்டேனே? போறச்சே எல்லா சார்கிட்டயும் சொல்லிட்டுத்தான் போனேன்.’

‘அத்த வீட்ல படிக்க முடிஞ்சிதாடி?’

‘சுமாரா படிச்சேன். கல்யாணத்துக்குப் போயிட்டு படிக்க எங்க முடியுது? ஆனா ஜாலியா இருந்திச்சிப்பா. மெட்ராஸ்னா மெட்ராஸ்தான்! தேவின்னு ஒரு தியேட்டர் இருக்கு அங்க. செம பெரிசு. ஜில்லுனு ஏசியெல்லாம் போடறாங்கடி.’

‘என்ன படம் பாத்த?’

‘காந்தி படம். மாமா கூட்டிக்கிட்டுப் போனாரு. இங்கிலீஷ் படம்.’

‘ஓ…’ என்றாள் ராஜாத்தி. செகண்ட் ரேங்க் வாங்குகிறவள் இங்கிலீஷ் படம் பார்ப்பதில் தவறில்லை. தவிரவும் ராஜலட்சுமி திரையரங்கில் காந்தி போன்ற படங்களைப் பொதுவாகத் திரையிடுவதில்லை.

‘அவன் என்ன லவ் பண்றான்னு எனக்குத் தெரியும்டி. சின்சியராத்தான் பண்றான். ஆனா எனக்கு இதெல்லாம் புடிக்கல தெரியுமா?’

‘அடச்சீ அவன விடுடி. மெட்ராஸ்ல வேற எங்கெல்லாம் போன?’

‘பீச்சுக்குத்தான் போனேன்.’

‘இங்க பாக்காத பீச்சா?’

‘அங்க பீச்ல கடலையெல்லாம் விக்கறாங்கடி. குதிரை ஓட்றாங்க. நிறையப்பேர் ஜோடி ஜோடியா மண்ணுல உக்காந்துக்கிட்டு லவ் பண்றாங்க. யாரும் கண்டுக்கறதே இல்ல’

இதைச் சொல்லும்போது வளர்மதி வெட்கப்பட்டதுபோல் ராஜாத்திக்குத் தெரிந்தது. உற்றுப்பார்த்தாள். சில வினாடிகள் கழித்துக் கேட்டாள். ‘உண்மைய சொல்லு. நீ குடுமிய லவ் பண்றியா?’

வளர்மதி திடுக்கிட்டாள். சற்றுநேரம் யோசித்தாள். பிறகு, ‘அவன எனக்குப் பிடிக்கும்டி. ஆனா லவ்வு இல்ல.’

‘பின்ன? பிரதரா?’

‘சேச்சே.’

‘பிரதர் இல்லன்னா லவ்வுதான். வேறென்ன இருக்கு?’

‘நல்ல ஃப்ரெண்டுடி அவன்.’

‘அவன் அப்படி நினைக்கலியே?’

‘தெரியல. பாப்போம். மொதல்ல முழுப்பரீட்சை முடியட்டும். அடுத்த வருஷம் செக்ஷன் மாத்திட்டாங்கன்னா டோட்டலா எல்லாம் மாறிடும்.’

பள்ளியில் அந்த ஒரு பிரச்னை இருந்தது. இன்ன காரணம் என்று யாரும் சொல்வதில்லை. சம்பந்தமில்லாமல் பிள்ளைகளை அடுத்த வகுப்பில் வேறு வேறு பிரிவுகளுக்குப் பிரித்துப் போடுவார்கள். நைன்த் பியில் இருப்பவர்கள் டெந்த் பிக்குத்தான் போவார்கள் என்றுசொல்லமுடியாது. டெந்த் சியில் சிலர் போடப்படுவார்கள். ஏ செக்ஷனில் பத்து பேர் மாறுவார்கள். டியில் நாலு பேர். ஈயில் ஆறு பேர். ஹெட் மாஸ்டர் அலகிலா விளையாட்டுடையார். அவர் தலைவரும் கூட. யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்டுவிட முடியாது.

ஒருவார ஸ்டடி ஹாலிடேஸ் முழுவதும் வளர்மதியும் ராஜாத்தியும் வளர்மதியின் வீட்டு மொட்டைமாடி கூரைச் சரிவினடியில்தான் படித்துக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது சுமதி வந்தாள். பொற்கொடி வந்தாள். க்ளாரா வந்தாள். இரவு பகலாகப் புத்தகங்களை மேய்ந்து தின்றுகொண்டிருந்தார்கள். நடுவில் பள்ளி குறித்தும் பையன்கள் குறித்தும் பேச்சு வரும்போதெல்லாம் வளர்மதி தவறாமல் குடுமியைப் பற்றிப் பேசியதை ராஜாத்தி கவனித்தாள்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வாரத்தின் கடைசி தினம். மறுநாள் முழுப்பரீட்சை. பதற்றமும் கவலையும் மேலோங்கி, விடைபெற்ற கணத்தில் அவள் மீண்டும் கேட்டாள். ‘இப்பவாச்சும் சொல்லிடுடி. குடுமிய நீ லவ் பண்ரியா?’

யோசித்தாள். ‘இல்லன்னுதான் நினைக்கறேன்’ என்று சொன்னாள்.

அதே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி முப்பது நிமிடங்களுக்கு பத்மநாபன் முகம் கழுவி, சட்டை மாற்றி நெற்றி நிறைய விபூதி வைத்துக்கொண்டு அப்பாவிடம் வந்து, ‘நான் பைபாஸ் முத்துமாரியம்மன் கோயில் வரைக்கும் போயிட்டு வந்துடறேம்பா’ என்று சொன்னான்.

நிமிர்ந்து பார்த்தவர், ‘இந்தா..’ என்று கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து, ‘போறச்சே கற்பூரம் ஒரு கட்டி வாங்கிட்டுப் போ’ என்று சொன்னார்.

பத்மநாபன் வாசலுக்குச் சென்றதும் தன் மனைவியிடம், ‘பாத்தியா எம்புள்ளைய?’ என்றார்.

‘என்னாமோ.. பாஸ் பண்ணான்னா சரி.’

‘பைத்தியக்காரி, அவன் ·பர்ஸ்ட் ரேங்க் வாங்கப்போறாண்டி!’

‘நெசமாவாங்க?’

‘வெயிட் பண்ணிப் பாரு. எம்புள்ள படிப்புல எறங்கிட்டான். இன்னமே அவன யாரும் எதும் செஞ்சிக்க முடியாது.’

பத்மநாபன் கேட்டுக்கொண்டுதான் இருந்தான். அழுகை வந்தது. அடக்கிக்கொண்டு முத்துமாரியம்மனிடம் ஓடினான். ஒரு கற்பூரத்தைக் கொளுத்திக் கும்பிட்டுவிட்டு மூன்றுமுறை சுற்றிவந்தான்.

நாளை தேர்வு தொடங்குகிறது. முத்துமாரியம்மா! பாடங்கள் மறந்தால்கூடப் பிரச்னையில்லை. சமாளித்துவிடுவேன். வளர்மதி நினைவில் வராதிருக்க நீதான் அருள் புரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வந்தான்.

இரவு சாப்பாட்டுக்குப் பிறகு உட்கார்ந்து புத்தகத்தைத் திறந்தான். வளர்மதிக்கு எழுதிய கடிதம்தான் முதலில் கண்ணில் பட்டது.