"

2

இது ஒரு சதி. கடவுள் அல்லது சாத்தானின் அதிபயங்கரக் கெட்ட புத்தியின் கோரமான வெளிப்பாடு. இல்லாவிட்டால் ·பர்ஸ்ட் ரேங்க் பன்னீர் செல்வம் ஏன் வளர்மதியின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரவேண்டும்?

பத்மநாபனுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. பீமபுஷ்டி லேகிய விளம்பரத்தில் தோன்றும் புஜபலபராக்கிரமசாலி சர்தார் தாராசிங்கைப் போல் தன் சக்தி மிகுந்து பன்னீரைத் தூக்கிப்போட்டு துவம்சம் செய்ய முடிந்தால் தேவலை. ஆனால் கடவுளே, என்னை ஏன் அரைநிஜார் அணிந்த பல்லிபோல் படைத்தீர்?

அது பிரிதொரு அவலம். பூவுலகில் அப்பாக்களாக அவதரித்த யாருமே பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பதில்லை. கேவலம் ஒரு பேன்ட் வாங்கித்தர யோசிக்கும் அப்பா. பத்மநாபன், இதன் பொருட்டும் பலதடவை வீட்டில் சத்தியாகிரகங்கள், தர்ணாக்கள், கண்ணீர்ப் பெருக்குத் திருவிழாக்கள் நடத்திப் பார்த்திருக்கிறான். வாய்ப்பே இல்லை. இரண்டு எல்.ஜி. கூட்டுப் பெருங்காயப் பைகளை இணைத்துத் தைத்த மாதிரி அரை நிஜார்கள் வீடெங்கும் விரவிக் கிடக்கின்றன. வருடத்துக்கு ஒருமுறை புடைவை நீளத்துக்கு காக்கி நிறத்தில் துணி வாங்கி வந்துவிடுகிற அப்பா. (கோஆப்டெக்ஸின் பொங்கல் சிறப்புத் தள்ளுபடி 35%) ‘வளர்ற பையன்’ என்று சொல்லிச் சொல்லியே எப்போதும் தொளதொளவென்று தைத்துத் தள்ளிவிடுகிற புளியமரத்தடி டெய்லர் தாமோதரன். பத்மநாபனுக்கு, டிராயர் அணியும் போதெல்லாம் தானொரு கார்ட்டூன் ஆகிவிடுவது போலத் தோன்றும்.

ஆனால் பாழாய்போன பன்னீர்செல்வம் இன்றைக்கு பேன்ட் அணிந்து வந்திருக்கிறான். முதல் ரேங்க் வாங்குபவர்களின் அப்பாக்கள் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் புளியமரத்தடி தாமோதரனை ஒரு டெய்லராகக் கருதுவதே இல்லை. ஒவ்வொரு பண்டிகைக்கும் பன்னீர்செல்வம் பலப்பல வண்ணங்களில் பேன்ட் அணிகிறான். பள்ளிக்குக்கூட டெரி காட்டன் காக்கி பேன்ட். அவனுடைய கால் சட்டைகளும், மேல் சட்டைகளும் அடையாறில் ஏசி போட்ட கடையொன்றில் நவீனமாகத் தைக்கப்படுகின்றன. குழலூதும் கண்ணனைப் போலவும் சுனில் மனோகர் கவாஸ்கரைப் போலவும் அவன் ஒரு காலுக்கு இன்னொன்றை ஒட்டுக் கொடுத்து நிற்கிற ஸ்டைலுக்கே பள்ளியில் ராஜாத்தியும் பேபியும் வைத்தகண் வாங்காமல் பார்க்கிறார்கள்.

அயோக்கிய ராஸ்கோல், அவர்களில் ஒருவரைக் காதலிக்காமல் ஏன் என் உயிரினும் மேலான வளர்மதியையே குறிவைத்துக் காய் நகர்த்த வேண்டும்?

பத்மநாபனுக்கு வயிறு எரிந்தது. கோபம் கோபமாக வந்தது.

‘ஹாய் குடுமி! வளர் ஒன்லி ஆஸ்க்டு மி டு கம் டுடே. ஐயம் சர்ப்ரைஸ்ட் டு ஸீ யூ ஹியர்’ என்று பன்னீர் சொன்னான்.

கோபத்தைக் கிளறிவிட ஒரு வரியில் மூன்று விஷயங்கள். தன்னைப் பொதுவில் குடுமி என்று அழைத்தது முதலாவது. ஆங்கிலத்தில் பேசியது அடுத்தது. மூன்றாவதும் முக்கியமானதுமான விஷயம், வளர்மதியே இவனை வரச் சொல்லியிருக்கிறாள் என்பதாகும்.

பத்மநாபனுக்குக் கண்ணில் நீர் திரண்டு விட்டது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். அவனுடன் ஏதும் பேச வேண்டாம் என்று நினைத்தான். ஆனால் வளர்மதியிடம் பேசியாக வேண்டும். இரண்டில் ஒன்று இன்றைக்குத் தெரிந்தாக வேண்டும்.

‘வளரு! நீயா இவனை வரச் சொன்ன?’ துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவன் கேட்டது, மயில் மீதிருந்த வளர்மதிக்குக் கேட்கவில்லை. அவள் பார்வையெல்லாம் வந்து சேர்ந்து கொண்டிருந்த பரிசுப் பொருள்களின் மீதே இருந்தது.

‘ஏ, யாரப்பா இங்க ஒரே ஆம்பள பசங்க கூட்டமா இருக்கு? நகர சொல்லு அவங்கள!’

எங்கிருந்தோ ஒலித்த சுந்தரமூர்த்தி முதலியாரின் குரலுக்கு ஸ்லேவ் ஓடி வந்தான்.

‘ஏன்டா, இங்க நிக்காதீங்கன்னு எத்தினிவாட்டி சொன்னேன்? மொதலியார் கூவுறாரு பாரு. உங்கப்பாவாண்ட விசயம் போவுறதுக்குள்ள இடத்த காலி பண்ணு, நவுரு, நவுரு…’

‘நத்திங்பா! ஐ ஜஸ்ட் வான்டட் டு கன்வே மை க்ரீட்டிங்ஸ்!’ என்று அவன் தோளில் தட்டி, பன்னீர் நகர முற்படுகையில் ஸ்லேவ், அவன் கையில் ஒரு கலர் சோடவைத் திணித்தபடி ‘நான் உன்ன சொல்லல தொர’ என்றது மேலும் எரிச்சலாக இருந்தது.

நல்லது. உலகம் பழிவாங்குகிறது. ஒரு காதல் கடிதம் கொடுக்கப்படாமலேயே கிடக்கிறது. கடங்காரன் பன்னீர் வந்து கெடுத்து விட்டான். வளர்மதி சந்தோஷமான மனநிலையில் இருக்கும்போது கொடுத்தால், விளைவு வேறுவிதமாக இருப்பினும் விபரீதமாகாது என்றூ எண்ணியே பத்மநாபன் அந்தத் தருணத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான். தவிரவும் தன் உள்ளக் கிடக்கை அவளுக்கு முன்கூட்டியே ஒருவாறு தெரிந்திருக்கும் என்றும் நம்பியிருந்தான்.

அப்படியிருக்கையில் ஏன் தன்னை அழைக்காமல் பன்னீரை அவள் அழைத்தாள்?

புரியவில்லை.

மிகவும் குழப்பமாகவும் துக்கமாகவும் இருந்தது. ஒருவேளை வளர்மதி பன்னீரை லவ் பண்ணுகிறவளாக மட்டும் இருந்து விட்டால் இந்த உலகில் தான் இனியும் வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று அவனுக்குத் தீர்மானமாகத் தோன்றியது.

பத்மநாபன் அதுகாறும் ஆறு பேரைக் காதலித்திருக்கிறான். ஏழாம் வகுப்பில் இருந்தபோது பொற்கொடி. எட்டாவதில் ஜெயலலிதா, தனலட்சுமி, ராதிகா. எட்டாம் வகுப்பு விடுமுறையில் விக்டோரியா. ஒன்பதாம் வகுப்புக்கு வந்த புதிதில் பிரேமகுமாரி.

அவற்றையெல்லாம் எப்படிக் காதல் என்பது? எதுவும் ஒரு சில மாதங்களுக்குமேல் நீடித்ததில்லை. நண்பர்கள் அனைவரிடமும் தனது காதலை ஒரு சுற்று சொல்லி முடிப்பதற்கு முன்னால் அது காணாமல் போயிருக்கும்.

அவனுக்கு ·ப்ளாஸ்கில் வைத்த காப்பிதான் எப்போதும் நினைவுக்கு வரும். ஊற்றி வைத்த சில மணி நேரங்களுக்குப் பொறுக்க முடியாத சூடு. எப்போது குளிர்ந்து போகத் தொடங்கும் என்றே தெரியாது. ஆறிய பிறகு வாயில் வைக்கச் சகியாது காப்பி என்னும் கசப்பு பானம்.

‘ஆனா வளர்மதி விசயம் அப்படி இல்லடா. என்னிக்கு அவளைக் காதலிக்கத் தொடங்கினேனோ, அன்னியலேருந்து இந்த நிமிஷம் வரைக்கும் அவளை நினைச்சாலே மனசுக்குள்ள ஜல்னு ஒரு சலங்கை சத்தம் கேக்குதுடா. காதெல்லாம் சூடாயிடுது. தரைல கால் வெச்சா, பஞ்சுமூட்டைமேல வெக்கிற மாதிரி இருக்கு. விக்டோரியா, தனம், ராதிகாவைக் காதலிக்கும்போதெல்லாம் இப்படி இருந்ததில்லைடா’ என்று பலசமயம் தன் உயிர் நண்பன் தண்டபாணியிடம் அவன் சொல்லியிருக்கிறான்.

நான்கு வருடங்களில் 17 பேரைக் காதலித்துவிட்டு பதிலுக்கு யாராலும் காதலிக்கப்படாமல் கைவிடப்பட்டவனான தண்டபாணி, இதுவிஷயத்தில் பொதுவாக கருத்து சொல்வதில்லை. வகுப்பில் ஒவ்வொரு பையனும் யாரேனும் ஒருத்தியைக் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் யாரேனும் ஒரு பையன் மீது விருப்பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் யாரும் வெளிப்படுத்துவதில்லை. இது நடைமுறையில் இல்லாத இல்லாத விஷயமாகக் கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அறியப்பட்டிருக்கிறது. மரபு மீறுவது நல்லதல்ல. காலக்ரமத்தில் ஹெட்மாஸ்டருக்குச் சேதி போய்ச் சேர்ந்தால், விபரீதங்கள் விளையத் தொடங்கும். ப்ரேயரில் முட்டி போடு. கிரவுண்டை நாலுமுறை சுற்றி ஓடிவா. வகுப்புக்கு வெளியே நில். அப்பாவை அழைத்து வா.

பொதுவாக உத்தமர்களான அப்பாக்கள் இம்மாதிரியான புகார்களை விரும்புவதில்லை. அடி பின்னியெடுத்துவிட்டு அம்மாமார்களை அழைத்து வெந்நீர் ஒத்தடம் கொடுக்கச் சொல்லுவார்கள். அந்தக் காதல் அந்தக் கணமே அடக்கம் செய்யப்பட்டுவிடும். ஏனோ சம்பந்தப்பட்ட பெண்ணை மறுநாள் பார்க்கும்போது அந்த ‘ஜல்’ இருக்காது. ஆன்மாவுக்குள் விஷக்கிருமிகளை ரகசியமாகப் புகுத்திவிடும் அப்பாக்கள்.

பத்மநாபன் இந்தமுறை வளர்மதியைக் காதலிக்கத் தொடங்கியதிலிருந்து, தண்டபாணி ஒருவன்தவிர வேறு யாரிடமும் வாய் திறக்கவில்லை. ரகசியம் காக்கப்படும்போது காதலின் வாசனை அதிகரிக்கிறது. அதன் மென் அழுத்தம் மேலும் சுகமூட்டுகிறது. தவிரவும் சொல்லாத காதல் சுகமான அவஸ்தை.

காதலிக்கிறவளிடமுமா?

அதனால்தான் சொல்லிவிடலாம் என்று கிளம்பிவந்தான். கேடுகெட்ட ·பர்ஸ்ட் ரேங்க் பன்னீர் சொதப்பிவிட்டான்.

ஏழு நாள் கழித்து வளர்மதி பள்ளிக்கு வரத் தொடங்கினாள். நீலத் தாவணியும் வெள்ளைச் சோளியும். இரட்டைப் பின்னலும் பட்டாம்பூச்சிபோல் சிறகு விரித்த ரிப்பனும். மேலான வெட்கமும் மெலிதான புன்னகையும்.

பார்த்த கணமே பத்மநாபனுக்குக் கிறுகிறுவென்று ஆகிப்போனது. வளர்மதி ஐ லவ் யூ, வளர்மதி ஐ லவ் யூ என்றூ கணக்கு நோட்டுப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் இருபது முறை எழுதி, தண்டபாணியின் பக்கம் நகர்த்தினான்.

அவன், ‘அவகிட்ட காட்டுடா’ என்று எழுதி மீண்டும் இவன் பக்கம் நகர்த்த, இந்த சந்தோஷ விளையாட்டு என்னவென்று புரியாமல் மூன்றாம் பெஞ்சு முழுதும் குழப்பமடைந்தது. சலசலப்பு எழுந்தது.

‘உஷ்’ என்றார் கணக்கு வாத்தியார் மகாலிங்கம். பொதுவாக மாணவர்களுக்கு அவரைப் பிடிக்காது. கணக்குப் பாடம் எடுப்பதனால் மட்டுமல்ல. பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகவும் ஸ்கவுட்ஸ் மாஸ்டராகவும் விசாரணை அதிகாரியாகவும் அவரே இருப்பதுதான் காரணம். தவிரவும், பிறந்ததிலிருந்து சிரித்திராதவர். மாணவர்களின் அதிகபட்சப் பொழுதுபோக்காக ‘வருவான் வடிவேலன்’ படத்தை ராஜலட்சுமி திரையரங்கம் திரையிட்டால் மட்டும் பார்க்கலாம் என்கிற கொள்கையில் அழுத்தமான பிடிப்பு கொண்டவர்.

‘என்னடே?’ என்றார் மகாலிங்க வாத்தியார்.

‘தெர்ல சார். குடுமிதான் சிரிக்கிறான் சார்.’

‘எதுக்குடா சிரிக்கிற?’

‘ஒண்ணும் இல்ல சார். இவன் சும்மா போட்டுக் குடுக்கறான் சார்.’

‘இரண்டு பேரும் உதைபடப் போறீங்க. ஜாக்கிரதை. என்ன பார்த்துக்கிட்டிருந்தோம்? பகா எண்கள். ஆங்… பகா எண் அப்படின்னா…’

பத்மநாபனுக்கு வகுப்பு பிடிக்கவில்லை. தான் அநாவசியமாக நாளையும் பொழுதையும் கடத்துகிறோம் என்று தோன்றியது. இதற்கு மேலும் கடத்தினால் கண்டிப்பாகப் பன்னீர் முந்திக் கொண்டு விடக்கூடும்.

ஒரு முடிவுக்கு வந்தவனாக, அந்த வகுப்பு முடிந்து அடுத்த ஆசிரியர் வருகிற இடைவெளியில் சட்டென்று எழுந்து வளர்மதியிடம் சென்றான்.

‘என்னடா?’

‘வந்து… நீ ஏன் அன்னிக்கு ·பங்ஷனுக்கு என்னைக் கூப்புடல? நானே தான் வந்தேன்.’

‘சீ போடா லூசு. இதுக்கெல்லாம் உன்னிய மாதிரி பசங்கள கூப்புட மாட்டாங்க.’

‘பன்னீரை மட்டும் ஏன் கூப்ட்ட?’

அவள் ஒரு கணம் பன்னீரைப் பார்த்தாள்.

‘அப்படின்னு அவன் சொன்னானா?’

‘ஆமா.’

‘பொய் சொல்லியிருக்கான்.’

பத்மநாபனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. மனமும் ஆன்மாவும் கொதிப்பு அடங்கியது போல் லேசாகிவிட்டது.

‘டேய்! இந்தப்பக்கம் வாடா. எப்பப்பார் கேர்ள்ஸ் பக்கம் என்ன பேச்சு?’

சட்டென்று பின்புறம் தோளில் கைவைத்து இழுத்தது பழனி வாத்தியார் என்று அடித்த வாடையிலேயே தெரிந்தது.

‘இருங்க சார், கணக்குல ஒரு சந்தேகம் கேட்டுக்கிட்டிருக்கேன்.’

‘பிச்சுப்புடுவேன் படுவா, கணக்கு சந்தேகம் கேக்கற மூஞ்சிய பாரு.’

‘இந்த மூஞ்சி கணக்கு சந்தேகம் கேக்கலைன்னா வேற என்ன சார் கேக்குது?’ என்றான் கடைசி பெஞ்ச் கலியமூர்த்தி. அவனுக்கு வெகுநாட்களாகவே பத்மநாபன் மீது ஒரு கண்.

‘பசங்களா! ஒழுங்கா படிச்சி பாஸ் பண்ற வழியப் பாருங்க. இந்த ஸ்கூல்ல நைன்த் பி மட்டும் ரொம்ப கெட்ட கிளாஸா இருக்குன்னு ஸ்டா·ப் ரூம்ல அடிக்கடி புகார் வருது. எச்.எம். ரொம்ப கோவத்துல இருக்கார், சொல்லிட்டேன். என்ன வேணா பண்ணுங்க. பொண்ணுங்களோட பேசற வேலை மட்டும் வெச்சிக்காதீங்க.’

பத்மநாபன் அந்தக் கணம் முடிவெடுத்தான். இம்முறை அதிக அலங்காரங்கள் இல்லாமல், மிக மென்மையாக உள்ளத்தைத் தொடும் விதத்தில் ஒரு கடிதம் எழுதினான். மறக்காமல் செய்திச் சுருக்கத்தை ‘ஐ லவ் யூ’ என்று தலைப்பில் வைத்தான்.

வகுப்புகள் முடிந்து வளர்மதி வீட்டுக்குக் கிளம்பும்போது ‘ஒரு நிமிஷம்’ என்று கூப்பிட்டு அவள் கையில் நேரில் அளித்தான்.

‘என்னது?’

‘பொண்ணுங்களோட பேசக்கூடாதுன்னு பழனி சார் சொன்னாரில்ல? அதான் எழுதி இருக்கேன். லவ் லெட்டர். வீட்டுக்குப் போயி படிச்சுப்பாரு’ என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே ஓடினான்.

‘என்னதுடி?’ என்று கேட்டபடி அவளது தோழி ஜெயலட்சுமி அருகேவர, ‘இவனும் லவ் லெட்டர் குடுத்திருக்கான்டி. இதோட சேர்த்து மொத்தம் பதினொண்ணு!’ என்று சிரித்தாள்.